மதீனா அன்ஸாரிகளில் ஹஜ்ரத் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார்; அவருக்கு பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் ‘பைரூஹா’ என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிதுன் நபவிக்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
அல்லாஹ் குர்ஆனில், “நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை, நீங்கள் நன்மையை அடையமாட்டீர்கள்” என்ற (3:92) வசனத்தை இறக்கியதும்,
அபூதல்ஹா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹுதஆலா, ‘நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாத வரை நீங்கள் நன்மையை பெறவேமாட்டீர்கள்’ எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைரூஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விடுகிறேன். அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும், மறுமை வாழ்வின் (நலனுக்கான) சேமிப்பாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்தி கொள்ளுங்கள்” எனக்கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், “இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாக செவியுற்றேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் நாடுகிறேன்” என்று கூறினார்கள்.
அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்” எனக் கூறிவிட்டு அத்தோட்டத்தைத் தம் நெருங்கிய உறவினர்களுக்கும் மேலும் தன் பெரிய தந்தையின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.
– அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
தண்ணீர் நெருப்பை அணைப்பது போல தான தர்மம் பாவத்தை அழிந்துவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
– திர்மிதீ
அல்லாஹ் ஹலாலானதைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டான். நேர்மையற்ற வழியில் வந்த வருமானத்தில் எந்த ஒரு நன்மையான செயலையும் ஒப்புக் கொள்ளமாட்டான். தர்மத்திற்கு நன்மை கிடைக்க வேண்டுமானால், அதன் பொருள் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்:
“இரண்டு வானவர்கள் ஒவ்வொரு (நாள்) காலையிலும் அடியார்களிடம் (பூமிக்கு) இறங்குகிறார்கள். அவர்களில் ஒரு வானவர், ‘இறைவா! யார் (தர்மம்) செய்ய செலவழிக்கிறார்களோ அவர்களுக்கு (அதற்கு பகரமாக) அதிகமாக்குவாயாக!’ என்றும் மற்றொரு வானவர் ‘இறைவா (செலவழிக்காமல்) கஞ்சத்தனம் செய்பவர்களுடைய செல்வத்தை அழித்து விடுவாயாக’ என்றும் கூறுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் .”
– புகாரி
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக்கேட்டார். “நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும்நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக்குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம்.”
“மரணநேரத்தில், ‘இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு’ என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருட்களை மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தர்மம் என்பது உடல் நல்ல நிலையில் இருக்கும்போது செய்வதாகும்; அதற்கு தான் அதிக நன்மைகள் கிடைக்கும்.
மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைப்பெறக் கூடிய ஏழு நபர்களில் ஒருவர் தன் இடக்கரத்திற்கு தெரியாமல் வலக்கரத்தால் இரகசியமாக தர்மம் செய்தவர் ஆவார் என நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
தர்மம் செய்வதைக் கண்டு பிறர் தன்னை மெச்சி புகழ வேண்டும் என்று விரும்பக் கூடாது. மாறாக இறைப் பொருத்தத்தை பெறவே தர்மம் செய்யவேண்டும் என்று வல்ல இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُم بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
“விசுவாசிகளே! அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு தன் செல்வத்தைச் செலவழிப்பவனைப் போல் கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும் நோவினை செய்தும் உங்கள் தான தர்மங்களைப் பாழாக்கி விடாதீர்கள்.”
– சூரா அல்பகரா : 264
செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுவது அந்த தர்மத்தின் நன்மையை இழக்கச் செய்வதோடு பாவத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். செய்த தர்மத்தைப் பிறரிடம் சொல்லித் திரிபவனை அல்லாஹ் மறுமையில் கருணை கண் கொண்டு பார்க்க மாட்டான் என்பது ஹதீஸாகும்.
