அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இளமை முதல் உண்மை, விசுவாசம், நம்பிக்கை முதலான உயரிய குணங்கள் உடையவர்களாய் திகழ்ந்தார்கள்.
மக்காவிலுள்ள மக்கள், பெருமதிப்புடைய பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் பொருட்டுப் பெருமானார் அவர்களிடம் அமானிதமாகக் கொண்டு வந்து கொடுப்பார்கள். மக்கள் எல்லோருக்கும் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்ததோடு அவர்களது அமானிதங்களின் இரகசியத்தையும் பாதுகாப்பார்கள்.
உண்மை மட்டுமே பேசும் அவர்களுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது. நபியவர்கள் வாழ்நாளில் ஒரு தடவை கூட பொய் பேசியதில்லை என்பது அவர்களின் தனிச் சிறப்பு.
ஆகையால், ‘நம்பிக்கைக்கு உரியவர்’ ‘உண்மை பேசுபவர்’ என்னும் பொருள் படைத்த ‘அல் அமீன்’ ‘அஸ் ஸாதிக்’ என்னும் பட்டங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அரேபிய மக்களால் வழங்கப்பட்டிருந்தன.
பெருமானார் அவர்களின் பகைவர்கள் நிந்தித்து எழுதிய கவிதைகளிலும் கூட பெருமானார் அவர்களை ‘அல்-அமீன்’ என்றே கூறியுள்ளனர்.
நபி(ஸல்) அவர்கள் இளமைப் பருவத்திலிருந்தே பணிவும், கனிவும் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.
நலிவுற்றவர்கள், ஏழைகள் ஆகியோருடைய துன்பங்களைக் கேட்பதற்கு அவர்களின் காதுகள் எப்பொழுதும் தயாராயிருக்கும்; உள்ளம் நெகிழ்ந்து உதவி புரிவார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தெருவில் செல்லும்போது அடிமைகள் நபி(ஸல்) அவர்களை அணுகி, நபி(ஸல்) அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு உரிமையோடு முறையிடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை அவர்களாக விட்டுவிடும் வரை விலக்கிக் கொள்ள மாட்டார்கள்.
தெருவில் நடந்து போகும்பொழுது, அவர்கள் அடக்கத்தோடு நடந்து செல்வார்கள். அவர்கள் போகும்போது, ‘உண்மையும் நேர்மையும் உடைய ‘அல் அமீன்’ அதோ போகிறார்கள்’ என்று மக்கள் சுட்டிக்காட்டி ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வார்கள்.
பொருள் வாங்குவதற்காகப் நபி (ஸல்) அவர்கள் கடைக்குப் போகும்பொழுது, வழியில் இருக்கும் வீட்டுக் கதவைத் தட்டி, ‘முஹம்மது கடைக்குப்போகிறார், உங்களுக்குத் தேவையான பொருள்களைச் சொல்லுங்கள்; வாங்கி வருகிறேன்’ என்று கூறுவார்கள்.
அவர்கள் சொல்லும் பொருள்களை அவ்வாறே வாங்கி வந்து தருவார்கள். மேலும், இயலாமையில் உள்ளவர்களின் வீடுகளுக்கு தண்ணீர் சுமந்து வந்து கொடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எந்நிலையிலும் பிறரைவிட தங்களை உயர்த்திக் காட்டி தற்பெருமையோடு நடந்ததில்லை.
ஓரிடத்தில் யாராவது தூங்கிக் கொண்டிருந்தால், அவர்களை விழித்துக் கொள்வார்கள் என்பதற்காக சத்தமில்லாமல் மிக மெதுவாக நடந்து கடந்து செல்வார்கள்.
யார் வந்து பேசினாலும் அவர்களின் பேச்சை உற்று கவனித்து செவிமடுப்பார்கள். அதைக் குறித்து சிந்தனை செய்த பிறகே அதற்கு பதிலளிப்பார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் வந்து சந்தித்து விட்டு செல்பவர், போகும்போது நபி(ஸல்) அவர்கள் தன்னிடத்தில் தான் அதிக பிரியம் வைத்துள்ளார்கள் என்று ஒவ்வொருவரும் நினைத்தவாறே திரும்பி செல்வார்கள். அந்தளவு ஒவ்வொருவரையும் அவரது சிறப்பைக் கூறியும் தரத்திற்கு தகுந்தவாறும் நடத்தியும் கௌரவிப்பார்கள்.
நபி (ஸல்) அவர்களைப் பார்த்தவர்கள் அவர்களைவிட அழகான ஒன்றை வாழ்நாளில் காணமாட்டார்கள்; அவர்களின் முக வதனம் பார்ப்பவர்களின் ஆன்மாவையும் குளிரச் செய்யும்.
யா அல்லாஹ்! உன் ஹபீப் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு யாருக்கும் வழங்கப்படாத கண்ணியத்தையும் உன் கிருபையையும் வழங்குவாயாக! ஆமீன்!
