சவூதி அரேபியாவின் மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஃபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். கட்டுமானப் பணிக்குத் துணையாக அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் இறைத்தூதராக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் உத்தரவுக்கு இணங்க அன்னை ஹாஜரா (ரலி) அவர்கள் தனது மகனோடு ஆள் அரவமற்ற கஃபாவின் பள்ளத்தாக்கில் தன்னந்தனியே வசித்து வந்த போது, வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது இறக்கையினால் நிலத்தில் அடித்தார்கள். உடனே ஜம்ஜம் நீரூற்று உருவானது. அந்நேரத்தில் ஹாஜராவிடம், ‘இதோ இந்த இடத்தில் அல்லாஹ்வின் வீடு உள்ளது; அதை இந்தச் சிறுவரும், அவரது தந்தையும் கட்டுவார்கள்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறியதாக புகாரி ஹதீஸ் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹுதஆலா, நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்கு (ஹாஜரா) அருள் புரிவானாக! ஜம்ஜம் நீரை அவர் (தடுக்காமல்) அப்படியே விட்டுவிட்டிருந்தால் அது பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்.
ஜம்ஜம் தண்ணீர், ஊற்றிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது அன்னை ஹாஜரா அவர்கள் அதனைத் தாமும் அருந்தித் தம் குழந்தைக்கும் (இஸ்மாயீல்) ஊட்டினார்கள்.
அப்போது ஒரு வானவர் அவர்களிடம், ‘நீங்கள் கவனிப்பாரற்று வீணாக அழிந்து போய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்த குழந்தையும், இவருடைய தந்தையும் சேர்ந்து கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்’ என்று சொன்னார்.
அப்போது கஃபா (கட்டப்படவில்லை), மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. மழை வெள்ளங்கள் வந்து அதன் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் வழிந்து சென்றுவிடும். இவ்வாறே அங்கு அன்னை ஹாஜரா அவர்கள் தம் குழந்தை இஸ்மாயீல் அவர்களோடு இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் யமன் நாட்டைச் சேர்ந்த ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் ‘கதா’ எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினார்கள்.
அப்போது தண்ணீரின் மீது வட்டமடித்துப் பறக்கும் ஒருவகை பறவையைக் கண்டு, ‘இந்தப் பறவை தண்ணீரின் மீதுதான் வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும். நாம் இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இங்கு தண்ணீர் இருந்ததில்லையே!’ என்று பேசிக்கொண்டனர்.
பிறகு அவர்கள் ஒரு தூதுவரைச் செய்தி அறிந்துவர அங்கு அனுப்பினார்கள். அவர் சென்று பார்த்தபோது அங்கே தண்ணீர் (ஜம்ஜம் ஊற்று) இருப்பதைக் கண்டார். உடனே அவர் தம் குலத்தாரிடம் திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்.
உடனே அக்குலத்தார், இஸ்மாயீலின் அன்னை தண்ணீரருகே இருக்க, முன்னே சென்று ‘நாங்கள் உங்களிடம் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?’ என்று கேட்டனர்.
அதற்கு ஹாஜரா அவர்கள், ‘ஆம் அனுமதிக்கிறேன். ஆனால், தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது’ என்று சொன்னார்கள். அவர்களும் சரி என்று சம்மதித்துத் தங்க ஆரம்பித்தனர். ஜுர்ஹும் குலத்தார் ஜம்ஜம் ஊற்றருகே தங்கிக்கொண்டே தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப, அவர்களும் வந்து அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன.
இந்நிலையில் இஸ்மாயீல் வளர்ந்து வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாருக்கு இஸ்மாயீல் பிரியமானவராக ஆகிவிட்டிருந்தார். பருவ வயதை அவர் அடைந்தபோது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்து வைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜரா) அப்போது இறந்து விட்டிருந்தார்.
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்து கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச் சென்ற மனைவி, குழந்தை ஆகியோர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக அங்கு வருகை தந்தார்கள்.
அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர்களது வீட்டில் இல்லாது வெளியே சென்றிருந்தார்கள். ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்’ என்று சொன்னார். பிறகு அப்பெண்ணிடம், அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள்.
அதற்கு அப்பெண், ‘நாங்கள் மிக மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்’ என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார்.
உடனே, இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘உன் கணவர் வந்தால் அவருக்கு என் ஸலாம் உரைத்து அவரது வீட்டு நிலைப்படியை மாற்றி விடும்படி சொல்’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பதை அங்கு வந்த வாசனையைக் கொண்டு உணர்ந்தார்கள். ஆகவே, ‘எவரேனும் உங்களிடம் வந்தார்களா?’ என்று மனைவியிடம் கேட்டார்கள். அவருடைய மனைவி, ‘ஆம்! இப்படிப்பட்ட அடையாளம் கொண்ட பெரியவர் ஒருவர் வந்தார்; என்னிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு விபரம் கூறினேன். அவர் என்னிடம், உங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது?’ என்று கேட்டார்.
நான் அவரிடம், ‘நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?’ என்று கேட்க, அதற்கு அவர், ‘ஆம்! உங்களுக்குத் தன் சார்பாக ஸலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் வீட்டு நிலைப்படியை மாற்றிவிடு என்று உங்களிடம் சொல்லச் சொன்னார்’ என்று பதிலளித்தார்.
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘அவர் என் தந்தைதான்; உன்னைவிட்டுப் பிரிந்து விடும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்கள்; ஆகவே, நீ உன் வீட்டாருடன் போய்ச் சேர்ந்து கொள்’ என்று சொல்லிவிட்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார்கள். பின்னர், நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜூர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார்கள்.
பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவன் நாடிய காலம்வரை அவர்களைப் பார்க்க வரவில்லை. பிறகு ஒரு சமயம் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மீண்டும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். இம்முறையும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டில் இல்லை. ஆகவே, இஸ்மாயீல் (அலை) அவர்களின் புதிய துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அப்பெண், ‘எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்’ என்று சொன்னார்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்கள்.
அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், ‘நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமான அல்லாஹ்வை புகழ்ந்து கூறினார். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘உங்கள் உணவு எது?’ என்று கேட்க, அப்பெண் ‘இறைச்சி’ என்று பதிலளித்தார். அவர்கள், ‘உங்கள் பானம்’ என்று கேட்க, ‘தண்ணீர்’ என்று பதிலளித்தார்.
இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை அருள்வாயாக!’ என்று பிரார்த்தனை புரிந்தார்கள். அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள்வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘உன் கணவர் வந்தால் அவருக்கு என் ஸலாமை உரைத்து, அவரது வீட்டு நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்’ என்று சொன்னார்கள்.
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, ‘உங்களிடம் எவரேனும் வந்தார்களா?’ என்று கேட்க, அதற்கு அவருடைய மனைவி, ‘ஆம்! எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்’ என்று சொல்லிவிட்டு அவரைப் பற்றி புகழ்ந்தார். தொடர்ந்து, ‘என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படியுள்ளது’ என்று கேட்டார்.
அதற்கு நான், ‘நாங்கள் நலமுடன் இருக்கிறோம்! என்று தெரிவித்தேன்’ என்று பதில் கூறினார். ‘அவர் உனக்கு அறிவுரை எதுவும் கூறினாரா?’ என்று நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆம்! உங்களுக்கு ஸலாம் உரைத்தார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி உங்களுக்குக் கட்டளையிட்டார்’ என்று கூறினார்.
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘அவர் என் தந்தை! நீதான் அந்த நிலைப்படி! உன்னை (விவாகரத்து செய்யாமல் அப்படியே) மனைவியாக வைத்துக் கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்’ என்று சொன்னார்கள்.
பிறகு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம் வரை நபி இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பார்க்க வரவில்லை. அதன்பிறகு ஒரு நாள், நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜம்ஜம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்குக் கீழே தனக்காக அம்பு ஒன்றைச் செதுக்கிக் கொண்டிருந்த போது அவரிடம் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். நெடுநாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது தந்தை மகனுடன் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி பாசத்தோடும் நெகிழ்வோடும் நடந்து கொண்டார்கள்.
பிறகு, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை உத்தரவிட்டுள்ளான்’ என்று கூறினார்கள். நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘என் தந்தையே! இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘நீ எனக்கு அந்தக் கட்டளையை நிறைவேற்ற உதவுவாயா?’ என்று கேட்க, நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘நான் தங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்’ என்று பதிலளித்தார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘அப்படியென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தைக் கட்டவேண்டுமென்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்’ எனக் கூறிவிட்டு, சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள்.
அதன்பின் இருவரும் இறையில்லம் கஃபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது, நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டு வந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன் மீது ஏறி நின்று கஃபாவைக் கட்டலானார்கள். நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தந்தார்கள். கட்டி முடித்தபின் இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றி வட்டமிட்டு நடந்தபடி பிரார்த்தனை செய்தார்கள்.
இதனைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ * رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنتَ العَزِيزُ الحَكِيمُ
பொருள்: “இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்தியபோது, ‘எங்கள் இறைவனே! எங்களிடமிருந்தும் (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கிறாய்!’ (என்று கூறினர்) .
எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக! எங்கள் சந்ததியினரிடமிருந்து உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை ஆக்கி வைப்பாயாக! நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவில்லா அன்புடையவனுமாக இருக்கிறாய்!
மேலும், ‘எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக! நிச்சயமாக நீயே வல்லமை மிக்கவனும் பெரும் ஞானமுடையவனுமாக இருக்கிறாய்’ என்று துஆச் செய்தார்கள்.”
– சூரா அல்பகரா: 127 – 129
நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் நான், ‘அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன்முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித கஃபா’ என்று பதிலளித்தார்கள். ‘அதன் பிறகு எது?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், (ஜெரூஸலத்தில் உள்ள) ‘அல் மஸ்ஜிதுல் அக்ஸா’ என்று பதிலளித்தார்கள்.
