உமைர் பின் வஹப் அவர்கள் பத்ருப் போர் நிகழ்ந்து முடிந்த சில நாட்களுக்குப்பின், ஸப்வான் பின் உமய்யாவுடன் ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் உட்கார்ந்திருந்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய ஸஹாபாக்களுக்கும் துன்பங்கள் தரக்கூடியவராக உமைர் பின் வஹப் இருந்தார். மக்காவிலிருக்கும்போது இவரின் மூலம் முஸ்லிம்கள் அதிகமான துன்பங்களைச் சந்தித்தார்கள்.
பத்ருப் போரில் கொல்லப்பட்டு அங்குள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் போடப்பட்ட எழுபது நபர்களைப் பற்றியும் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பற்றியும் உமைர், ஸஃப்வானிடம் கூறிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது ஸஃப்வான், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! பத்ரில் அவர்கள் கொல்லப்பட்ட பின் வாழ்வில் நன்மை என்பதே இல்லை’ என்றார்.
அதற்கு உமைர், ‘ஆம்! நீர் உண்மைதான் கூறினீர். எனக்குக் கடன் இல்லையானால், இன்னும் எனக்குப்பின் என் குடும்பத்தினர் வீணாகி விடுவார்கள் என்றும் நான் பயப்படவில்லையானால், நான் வாகனத்திலேறி நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவரைக் கொலை செய்துவிடுவேன். ஏனெனில், நிச்சயமாக அவர்களிடம் எனக்குப் பெரும்பகை இருக்கிறது. என் மகன் அவர்கள் வசம் சிறைப்பட்டிருக்கிறான்’ என்று கூறினார்.
ஏனெனில், உமைருடைய மகன் வஹப் என்பவர் பத்ருடைய போர்க் கைதிகளில் பிடிபட்டிருந்தார்.
இதனைக் கேட்ட ஸப்வான் அதனை நல்ல சந்தர்ப்பமாகக் கருதினார். ‘உமது கடனை நிறைவேற்றுவது எனது பொறுப்பாகும். உமது குடும்பத்தினர் என் குடும்பத்தாருடன் இருக்கட்டும். அவர்கள் உயிரோடிருக்கும் வரை நான் அவர்களுக்கு உதவி செய்வேன்’ என்று கூறினார்.
அதற்கு உமைர், ‘நாம் இப்போது பேசியதை இரகசியமாக வைத்துக்கொள்வீராக!’ என்று கூறினார். ‘அவ்வாறே செய்கிறேன்’ என்றார் ஸப்வான்.
பிறகு உமைர், தம்முடைய வாளை நன்றாக தீட்டி அதில் விஷம் தடவினார். பின்னர் மக்காவிலிருந்து புறப்பட்டு மதீனாவைச் சென்றடைந்தார்.
அங்கு மஸ்ஜிதே நபவீயின் அருகில் உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களில் சில நபர்களுடன் பத்ருப் போரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய கண்ணியத்தையும், அவர்களுடைய எதிரிகளின் விஷயத்தில் அல்லாஹ் அவர்களுக்குக் காட்டிய நிகழ்ச்சியையும் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது உமைர், வாளை கழுத்தில் தொங்கவிட்டவராக மஸ்ஜிதுடைய வாசலில் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்துக் கொண்டிருப்பதை உமர் (ரலி) அவர்கள் பார்த்தார்கள்.
‘அல்லாஹ்வின் எதிரி உமைர், ஏதோ தீமையை நாடித்தான் இங்கு வந்திருக்கிறார். இவர்தான் பத்ருடைய நாளில் நமக்கு சதி செய்தவர்’ என்பதாகக் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் இந்த எதிரி உமைர், தனது வாளை கழுத்தில் தொங்கவிட்டவராக இங்கு வந்திருக்கிறார்’ என்று சொன்னார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘உமைரை என்னிடம் வரச் சொல்வீராக!’ என்று கூறினார்கள்.
ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் சென்று உமைருடைய கழுத்திலிருந்த வாளின் பிடியைப் பிடித்திழுத்தார்கள். தம்முடனிருந்த அன்ஸாரிகளிடம், ‘இவரை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, அங்கேயே நீங்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள். இந்தத் தீயவனிலிருந்து நபியவர்கள் மீது நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். ஏனெனில், இவர் நம்பிக்கைக்குரியவரல்ல’ என்பதாகக் கூறினார்கள்.
பின்னர் உமைர், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டார்.
உமர்(ரலி) அவர்கள் அவருடைய கழுத்திலிருந்த வாளின் பிடியைப் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது, ‘உமரே அவரை விட்டுவிடுவீராக!’ என்று கூறினார்கள். ‘உமைரே! என்னருகில் வருவீராக!’ என்று கூறினார்கள்.
அவர் அருகில் சென்று ‘அன்இம் ஸபாஹா’ (‘காலை நேரம் நல்லதாகுக!’) என்ற காணிக்கை வார்த்தையைக் கூறினார். இது அப்போதைய அரபியர்களுக்கிடையே உள்ள காணிக்கையாக இருந்தது.
அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், ‘உமைரே! உம்முடைய காணிக்கையை விடச் சிறந்த காணிக்கையான ‘ஸலாம்’ கூறுவதைக் கொண்டு அல்லாஹ் எங்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான். அது சொர்க்கவாசிகளின் காணிக்கையாகும்’ என்று கூறினார்கள்.
அதற்கு உமைர், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவ்விஷயத்திற்குப் புதியவனாக இருக்கிறேன்’ என்றார்.
‘உமைரே! நீர் ஏன் இங்கு வந்தீர்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
‘என் மகன் வஹப் கைதியாக தங்கள் வசம் இருக்கிறார். அந்தக் கைதியின் விஷயத்தில் உபகாரம் செய்யுங்கள்’ என்று கூறினார்.
‘உம்முடைய கழுத்திலுள்ள வாளின் விஷயம் என்ன?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு உமைர், ‘வாள்களை அல்லாஹ் கேவலமாக்குவானாக! அவை ஏதாவது தேவையை நிறைவேற்றுமா?’ என்றார்.
‘என்னிடம் உண்மையைச் சொல்வீராக! எதற்காக நீர் வந்தீர்?’ என்று நபியவர்கள் மீண்டும் கேட்க, ‘உங்களைக் கொல்லும் எண்ணத்தில்தான் வந்திருக்கிறேன்’ என்றார்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் உமைரிடம், ‘நீரும் ஸப்வானும் கஃபாவில் ஹஜ்ருல் அஸ்வத்திற்கு அருகில் அமர்ந்து குறைஷியர்களில் பத்ரில் கொல்லப்பட்டு கிணற்றில் போடப்பட்டவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள். பிறகு எனக்குக் கடனும், குடும்பமும் இல்லையானால் நான் முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கொல்லப் புறப்பட்டுவிடுவேன் என்று நீர் கூறினீர். அப்பொழுது என்னை நீர் கொன்று விட வேண்டுமென்ற நிபந்தனையின்படி ஸப்வான், உமது கடனுக்கும் உம்முடைய குடும்பத்திற்கும் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால், அல்லாஹ் உமக்கும் எனக்குமிடையே இது விஷயத்தில் திரையாக (பாதுகாப்பாக) ஆகிவிட்டான்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே உமைர், ‘நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். தாங்கள் எங்களிடம் கூறிய வானத்தின் செய்திகள் விஷயத்திலும், தங்களின்மீது இறக்கி வைக்கப்படுகிற வஹீயின் விஷயத்திலும் தங்களை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தோம். ஆனால், இந்த விஷயம் நடைபெறும் போது, அங்கு என்னையும் ஸப்வானையும் தவிர வேறு எவரும் இல்லை. ஆகவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக இதனைத் தங்களுக்குத் தெரிவித்தது அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை என்பதை நிச்சயமாக நான் அறிகிறேன். அதற்காக நான் அல்லாஹ்வை புகழ்கிறேன்.’ ‘இஸ்லாத்தின்பால் எனக்கு நேர்வழி காட்டி, என்னை இந்த இடத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து சேர்த்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!’ என்று கூறியபின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களை நோக்கி, ‘உங்களுடைய சகோதரர் உமைருக்கு இஸ்லாமை கற்றுக் கொடுங்கள்; அவருக்குக் குர்ஆனையும் கற்றுக் கொடுங்கள்; இன்னும் அவருடைய மகனை விடுதலை செய்துவிடுங்கள்’ என்று கட்டளையிட்டார்கள். அவர்கள் அவ்வாறே செய்தார்கள்.
பிறகு உமைர்(ரலி) அவர்கள், ‘யாரசூலல்லாஹ்! நிச்சயமாக நான் அல்லாஹ்வின் பேரொளியை அணைப்பதற்காகப் போர் செய்பவனாக இருந்தேன். அல்லாஹ்வுடைய தீனில் இருப்பவருக்கு கடினமான துன்பம் தருகிறவனாக இருந்தேன். இப்பொழுது தாங்கள் எனக்கு அனுமதியளிக்க வேண்டுமென்றும், நான் மக்காவுக்குச் சென்று அவர்களை அல்லாஹ்வின் பக்கமும், அவன் தூதரின் பக்கமும் அழைக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதனால் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டக்கூடும்.’
நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவுக்குப் போய்ச் சேர்ந்தார். உமைர் (ரலி) இஸ்லாத்தைத் தழுவியபின் மக்காவுக்கு வந்து தமது வீட்டில் இறங்கினார். ஸஃப்வானுவை சந்திக்கச் செல்லவில்லை. தன் குடும்பத்தினருக்கு தமது இஸ்லாத்தை வெளிப்படுத்தி அவர்களையும் அதன்பக்கம் அழைத்தார்.
இச்செய்தி ஸஃப்வானுக்குக் கிடைத்தபோது, ‘உமைர் தன் வீட்டுக்குச் செல்லும் முன் என்னை முதலில் சந்திக்காத போதே, அவர் ஏதோ ஒரு விஷயத்தில் அகப்பட்டு மதம் மாறிவிட்டார் என்று நான் அறிந்து கொண்டேன். ஆகவே, அவரிடம் இனி எப்பொழுதும் பேசவே மாட்டேன். அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் எவ்வித உதவியும் செய்யமாட்டேன்’ என்று கூறினார்.
பின்னர் உமைர் (ரலி) அவர்கள், ஸப்வானை சந்திக்கும் போதெல்லாம் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்புக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
எவ்வளவுதான் நபி (ஸல்) அவர்களுக்கு துன்பம் இழைத்திருந்தாலும், அவர்களுக்கு நலம் நாடுபவர்களாகவே இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் நோக்கம் மக்கள் நரகை விட்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான். அதற்காக எத்தகைய துயரத்தையும் தாங்குபவர்களாகவும், பிறரை மன்னிக்கக்கூடிய உயர்ந்த பண்புடையவர்களாகவும் திகழ்ந்தார்கள் என்பது நாம் அறிய வேண்டிய ஒன்று!
