குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதமாகும்; அது மனித குலத்தின் நல்வாழ்விற்காக அருளப்பட்டது.
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான் :
كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ
இது பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். அவர்கள் (மக்கள்) இதன் வசனங்களைக் கவனித்துச் சிந்திக்க வேண்டும். மேலும், நல்லுணர்வு பெற வேண்டும் என்பதற்காக!
— சூரா ஸாத் : 29
குர்ஆனை அதிக எண்ணிக்கையில் ஓதி முடித்தேன் என்று பெருமைப்படுவதற்காக ஓதக்கூடாது. நேர்வழி அருளப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ஓதவேண்டும்.
அல்லாஹ்வின் எச்சரிக்கை மற்றும் தண்டனையைக் குறித்த ஆயத்துகள் ஓதும்போது உடல் நடுக்கமும், கண்கள் கண்ணீர் சிந்துவதுமான நிலைகள் ஏற்படுவது குர்ஆனை உணர்ந்து ஓதுவதன் அடையாளமாகும்.
அல்லாஹுதஆலாவின் வாக்குறுதிகளும், சுபச்செய்திகளும் குறித்த ஆயத்துகள் ஓதும்போது, இறைவனுக்கு நன்றி செலுத்துவதோடு அதனை நஸீபாக்கவேண்டி துஆச் செய்து கொள்ள வேண்டும்.
குர்ஆனை ஓதும்போது அவசரமில்லாமல் நிறுத்தி நிதானமாக, அதன் கருத்துக்களை அறிந்து ஆழ்ந்த சிந்தனையுடன் ஓதவேண்டும். குர்ஆனை உணர்வதே ஓதுதலின் நோக்கமாகும்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :
إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ
நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல்வழியைக் காட்டுகிறது.
— சூரா பனீஇஸ்ராயீல் : 9
குர்ஆனின் வழிகாட்டுதலின்படி தன் செயல்களை ஆக்கிக் கொள்பவர் நேர்வழியையும், நன்மையையும் பெற்றுக் கொண்டவராவார். குர்ஆனின் கட்டளைகளைப் பொருட்படுத்தாமல் வாழ்பவர் வழிதவறியவரும், தீமையைப் பெற்றுக்கொண்டவரும் ஆவார்.
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:
فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا قَدْ أَنْزَلَ اللَّهُ إِلَيْكُمْ ذِكْرًا
நம்பிக்கை கொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹுதஆலா உங்களுக்குத் திருக்குர்ஆன் என்னும் (நல்லுபதேசத்தை) இறக்கி வைத்திருக்கிறான்.
— சூரா அத்தலாக் : 10
முஸ்லிம்களில் பலர் குர்ஆன் என்ற வேதத்தைப் பற்றி வாழ்நாள் முழுவதும் அறியாமையிலேயே இருக்கின்றனர். குர்ஆனை தினசரி ஓதுவதும் அதன் கருத்துக்களை ஆராய்ந்து சிந்தனை செய்வதும், அதனை நேசிப்பதும், அதற்குக் கண்ணியமளிப்பதும்
ஒவ்வொரு முஸ்மிலின் மீது கடமையும் அன்றாடப் பணியாகவும் இருக்க வேண்டும். குர்ஆனில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வின் கட்டளைகளாகும். குர்ஆன் ஓதுவதைச் சுமையாக நினைப்பது ஈமானுக்கு ஆபத்தானது.
குர்ஆனை ஓதுவதால், ஓர் அடியான் மற்றவர்களைவிடவும் அல்லாஹ்விடம் அதிக நெருக்கத்தைப் பெறுகின்றான்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, நபித்தோழர் அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: “என்னிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ‘முஹம்மதே! உங்கள் சமுதாயத்தார் உங்களுக்குப் பின்னர் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்துவிடுவார்கள்’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘ஜிப்ரீலே! அதற்குத் தீர்வு என்ன?’ என்றேன். உடனே அவர்கள், ‘அல்லாஹ்வின் வேதம்தான் (அதற்குத் தீர்வாகும்). அதன் மூலமே அல்லாஹ் ஒவ்வொரு சர்வாதிகாரியையும் முறியடித்துள்ளான். அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டவர் வெற்றி பெற்றார்; அதைக் கைவிட்டவர் அழிந்தார்’ என இரண்டு முறை கூறினார்.”
“பிறகு ‘அது (உண்மை-பொய் ஆகியவற்றைப்) பிரித்தறிவிக்கும் தெளிவான சொல்லாகும்; மாறாக கேலிக்குரியதன்று. (திரும்பத் திரும்ப ஓதுவதால்) நாவுகள் அதனை இற்றுப்போகச் செய்துவிடுவதில்லை. அதன் அற்புதங்கள் முடிந்துவிடுவதில்லை. அதில் உங்களுக்கு முன் நடந்த செய்தியும், உங்களுக்கு இடையே தற்போது நடைபெறும் பிரச்சினைகளுக்குத் தீர்வும், உங்களுக்குப் பின்னர் நடக்கவிருப்பவை பற்றிய செய்திகளும் உள்ளன’ என்றார்.”
“எவர் குர்ஆன் ஓதுவதில் அதிகமாக ஈடுபடுவதின் காரணமாக என்னை திக்ரு செய்வதற்கும், என்னிடம் துஆ கேட்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்காதோ அவருக்கு நான், துஆ கேட்பவருக்குக் கொடுப்பதைவிட அதிகமாகக் கொடுப்பேன். எல்லா சொற்களையும் விட என்னுடைய சொல் சிறப்புப் பொருந்தியதாகும்’ என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.”
— திர்மிதீ
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “உலகில் குர்ஆனை மகிழ்ச்சியாகவும் நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி, அழகாகவும் ஓதியவர்களிடம் இறைவன் மறுமையிலும், ‘நீங்கள் ஓதுங்கள், உலகில் எவ்வாறு குர்ஆனை நிறுத்தி நிதானமாக, அழகான முறையில் ஓதினீர்களோ, அவ்வாறே இங்கும் ஓதுங்கள். இன்னும் நீங்கள் ஓதும் ஒவ்வொரு வசனத்திற்கும் அது இறுதியை அடையும் வரை ஒவ்வொரு அந்தஸ்தாக சுவனத்தில் உங்களை உயர்த்திக் கொண்டே செல்லும்’ என்று இறைவன் கூறுவான்.”
— திர்மிதீ
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا
இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவைகளையே இந்த குர்ஆனில் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறெதனையும்) அதிகரிப்பதில்லை.
— சூரா பனீஇஸ்ராயீல் : 82
உலக லாபங்களுக்காகக் குர்ஆன் ஓதுவதை விட்டுவிட்டு, அதில் அருளப்பட்டுள்ள ஏவல் விலக்கல்களை எடுத்து நடப்பதே குர்ஆனுக்கு உரிய கடமையாகும். அல்லாஹ்வின் அன்பை அடைய நினைப்பவர்களுக்கு குர்ஆன் ரஹ்மத்தாக இருக்கிறது. அநியாயம் புரிபவர்களுக்கு அது சபிக்கக்கூடியதாக இருக்கிறது.
‘குர்ஆனைப் பின்பற்றாதவர்களைக் குறித்து அல்லாஹ் எச்சரித்துக் கூறியுள்ளான்:
وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ بَغْتَةً وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ
நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே, உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட (வேதங்களில்) அழகான இதனைப் பின்பற்றுங்கள்.
— சூரா அஜ்ஜுமர் : 55
நமக்கு முன் வாழ்ந்து இவ்வுலகில் மடிந்துபோன மக்களைப் பற்றிய படிப்பினைகள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இறைவனுக்கு அஞ்சி நடந்த நல்லோர்களுக்கு இறைவன் செய்த உதவிகளைப் பற்றியும், இறைவனுக்கு மாறு செய்தவர்கள் இறைவனின் தண்டனைக்கு ஆளாகி அழிந்தது பற்றியும் குர்ஆனின் மூலம் இறைவன் நமக்கு உணர்த்துகிறான்.
குர்ஆனில் எல்லா காரியங்களுக்கும் வழிகாட்டுதல் இருக்கிறது.
