அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
لَتُبْلَوُنَّ فِي أَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ
(முஃமீன்களே!) உங்கள் ஆத்மாக்களிலும் உங்கள் பொருள்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்.
– சூரா ஆல இம்ரான் : 186
மனவேதனை என்பது மனிதன் அனுபவிக்கும் துன்பங்களில் ஒன்று. ஆனால், அது பயன் தரக்கூடியது. மனதில் தோன்றும் வேதனை அவனைக் குறிக்கோளின் பக்கம் உந்துகிறது. இந்த மனவேதனை நிலைக்கும் போதெல்லாம் அவன் முன்னேறிக் கொண்டிருப்பான். இந்த வேதனை இல்லை என்றால், அவனால் தன் குறிக்கோளை அடைய முடியாது. உயிரற்ற பொருள்களுக்கு மனவேதனை கிடையாது.
— மௌலானா ரூமி (ரஹ்)
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் தன்னை மனவேதனை தொட்டுவிடக்கூடாது என எதிர்பார்த்துத்தான் வாழ்கிறோம். ஆனால், அதிலிருந்து விதிவிலக்கு பெற்றவர் யாரும் இல்லை.
ஒரு மனிதனுக்குத் துன்பம் ஏற்படும்போதுதான் இறைவனின் நினைவு முழுமையாக வருகிறது.
உலக இன்பங்களில் தன்னை மெய்மறந்து கிடக்கும்போது, மனிதன் கர்வம் அடைகிறான். தான் பெற்றிருக்கும் இன்பம் நிலையாக இருக்கும் என்று இறுமாப்புக் கொள்கிறான்.
ஏதாவது ஒரு வகையில் மனவலி ஏற்படும்போதுதான், தன்னை உணர்கிறான். தன்னுடைய இயலாமையை உணர்கிறான்.
அம்மனிதனின் கரங்கள் இறைவனின் சமூகத்தில் உதவிக்காக ஏங்கித் தவிக்கிறது. தன்னுடைய பாவங்களை நினைக்க அது மருந்தாக அமைகிறது.
தர்மம் செய்யாதவர்கள் கூட துன்பம் ஏற்பட்டவுடன் ஏழைகளைத் தேடிச் செல்கின்றனர்.
தனக்காக பிரார்த்தனை செய்பவரைத் தேடி ஓடுகின்றனர்.
துன்பத்தின்போது இறைவனை ஒரு மனிதன் நெருங்குவது போல், இன்பத்தில் நெருங்குவது இல்லை.
துன்பத்தின் போது பொறுமையும், இன்பத்தின்போது தற்பெருமை கொள்ளாமல் பணிந்து இறைவனிடம் நன்றியோடு நடந்து கொள்வதுதான் ஈமானின் அடையாளமாகும்.
துன்பத்தின்போது இறைவனிடம் உதவி தேடும் ஒருவன், அதிலிருந்து விடுபட்டுவிட்டால், மீண்டும் இறுமாப்புக் கொள்கிறான். ஆகவே, மீண்டும் துன்பம் அவனைத் தேடி வருகிறது. துன்பத்தின்போது இறைவனைத் தேடுவதும், அதிலிருந்து வெளியே வந்துவிட்டால் இறைவனை மறந்து விடுவது மனிதனின் இயல்பாக இருக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
“ஈமான் கொண்ட மனிதருக்கு மனவருத்தம், உடல் பாதிப்பு, நோய், துக்கம் அல்லது கவலை இதுபோன்ற ஏதேனும் ஏற்பட்டு, இன்னும் காலில் ஒரு முள் குத்தினாலும் சரி, அவர் அவைகளை பொறுமையோடு சகித்துக் கொண்டால், அதற்காக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்துவிடுகிறான். இன்னும் மறுமையில் அந்தஸ்துகளை வழங்குகிறான்.”
– புகாரி
உம்மே ரஃபஸ் என்ற பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலிப்பு நோய் உள்ளது. எனக்கு வலிப்பு வந்துவிட்டால், என் உடல் என்னுடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. சில நேரங்களில் எனது ஆடையும் விலகிவிடுகிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “நீ இந்த நோயினால் ஏற்படும் சிரமத்தைச் சகித்துக் கொண்டால், அதற்காக அல்லாஹ் உனக்கு சுவர்க்கத்தைப் பகரமாக வழங்குவான். அல்லது நீ விரும்பினால், நான் உனக்காகப் பிரார்த்தனை புரிந்தால் அல்லாஹ் இந்த நோயை உன்னைவிட்டும் விலகச் செய்வான்” என்று கூறினார்கள்.
அதைக் கேட்ட அப்பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே! இந்த நோயால் ஏற்படும் சிரமத்தைப் பொறுமை செய்து கொள்கிறேன். ஆனால், வலிப்பு ஏற்படும் சமயம் என் ஆடை என்னை விட்டு விலகாதிருக்கப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டார். அண்ணலாரும் அவ்விதமாகவே பிரார்த்தனை புரிந்தார்கள்.
இறந்துவிட்ட தன் மகனின் மண்ணறை அருகே ஒரு ஸஹாபிப் பெண்மணி அமர்ந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தார். அவ்வழியே வந்த நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “இத்துன்பத்தில் பொறுமை கொள்ளும்படி கூறினார்கள்”.
இதனைக் கூறியது நபி(ஸல்) அவர்கள்தான் என சரியாக விளங்கிக் கொள்ளாமல் அப்பெண்மணி, “என் மனவேதனையை நீங்கள் அறியமாட்டீர்கள். என் துக்கத்தில் தங்களுக்கென்ன அக்கறை?” என்று கூறித் தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றார்கள்.
இதனைக் கவனித்த சிலர் அப்பெண்ணிடம், “நபி (ஸல்) அவர்களை நீ நிந்தித்துவிட்டாய்!” என்று கூறினார்கள்.
“என்னுடைய துக்கத்தில் நபி (ஸல்) அவர்கள்தான் கூறியது என்று நான் அறியவில்லையே” என்று கூறிக்கொண்டே, நபி(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் மன்னிப்புக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “துன்பத்தின் ஆரம்பத்தில் பொறுமை காப்பதுதான் உண்மையான பொறுமையாகும்” எனக் கூறினார்கள்.
மேற்கண்ட சம்பவத்தில் அப்பெண்மணி நபி(ஸல்) அவர்களின் உபதேசத்தை ஏற்றுக்கொண்டு அந்தச் சிரமத்தைத் தாங்கிக் கொண்டார்கள் என்பது ஸஹாபாக்களிடம் இருந்த ஈமானின் பலமாகும்.
நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தினருக்கு வழங்கிய மனப்பயிற்சி, துன்பத்தின் போது பொறுமை கொள்வதாகும்.
எந்தத் துன்பம் வந்த போதிலும் முதலில் அடியானிடம் இருந்து வெளிப்படுவது பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் அடியார்களிடம் விரும்புகிறான். அதை விட்டுவிட்டு எனக்கு ஏன் இந்த கஷ்டம்? என்று அழுது புலம்புவதாலோ அல்லது பிறரிடம் ஆறுதல் தேடுவதாலோ எந்த நன்மையும் விளைந்து விடப் போவதில்லை.
இன்பமோ, துன்பமோ அல்லாஹ் ஒருவனே நாம் சாய்ந்து கொள்ளும் சமூகமாக இருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
“ஒரு அடியான் சுகமாக, செழிப்பாக இருக்கும் காலங்களில் அல்லாஹ்வை அதிகம் திக்ரு செய்து வந்தால், பிறகு அம்மனிதனுக்கு ஏதேனும் சிரமங்கள், துன்பங்கள் ஏற்படும்போது, (அவன் இறைவனை உதவிக்கு அழைத்தால்) ‘பலவீனமான அடியானின் பழக்கப்பட்ட குரல் கேட்கிறதே!’ என்று வானவர்கள் கூறிக்கொண்டு அம்மனிதனுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள்.
எந்த மனிதன் சுகமான நிலையிலிருக்கும்போது அல்லாஹ்வை மறந்துவிட்டு, பிறகு துன்பங்கள் ஏற்படும்போது அல்லாஹ்வை அழைத்தால், ‘இது என்ன பழக்கமில்லாத குரலாக இருக்கிறதே’ என்று மலக்குகள் கூறுகிறார்கள். அவனுக்கு இறைவனின் சமூகத்திலிருந்து யாதொரு உதவியும் செய்யப்படுவதில்லை.”
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ
“நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.”
– சூரா அல்பகரா: 153
