நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகம்
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் தோன்றிய இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஈராக் நாட்டில் வாழ்ந்தார்கள். அவர்களின் சரிதையை அறிந்துகொள்வதன் மூலம் ஈமானை அறிந்து கொள்ளலாம்.
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நபி இப்ராஹீம் (அலை) அவர்களை மக்களுக்கு வழிகாட்ட வேண்டி இறைத்தூதராக அனுப்பி வைத்தான். கற்சிலைகள், சூரியன் போன்ற படைப்புகளை வணங்கக்கூடாது; படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டும்தான் மனிதர்கள் வணங்க வேண்டும் என்று மக்களுக்கு போதித்தார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் வாலிபத்தை அடைந்தபோது ‘சாரா’ என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அவ்விருவருக்கும் குழந்தை ஏதும் பிறக்கவில்லை. அதனால் மக்களின் கேலி கிண்டலுக்கு ஆளானார்கள். நீங்கள் அழைக்கும் அல்லாஹ் உங்களுக்கு குழந்தை வழங்கவில்லையா? என்று நபி இப்ராஹீம் (அலை) அவர்களை மக்கள் கேலி செய்தார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தமது 86-வது வயதில் ஹாஜரா என்ற அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்கள்; அவர்களுக்கும் குழந்தை இல்லை.
இந்நிலையில் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்,
رَبِّ هَبْ لِي مِنَ الصَّلِحِينَ
என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக!
– சூரா அஸ்ஸாஃப்பாத் : 100
என்று துஆச் செய்தார்கள். இதனை அல்லாஹ் குர்ஆனில் இடம்பெறச் செய்தான்.
அல்லாஹுதஆலா நபி இப்ராஹீம் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கப்போகும் சுபச்செய்தியை கூறினான்.
فَبَشَّرْنَهُ بِغُلَمٍ حَلِيمٍ
நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.
– சூரா அஸ்ஸாஃப்பாத் : 101
அதுபோல் அவர்களின் முதுமையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘இஸ்மாயீல்’ என்று பெயரிட்டார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் இரண்டாவது மனைவி ஹாஜரா அம்மையாருக்கும் பிறந்தவர்களே இஸ்மாயீல் (அலை) அவர்கள். அதற்குப் பிறகு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மனைவியோடும், மகனோடும் சந்தோஷமாக இருந்து வந்தார்கள். இந்நிலையில் அல்லாஹுதஆலா நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஒரு கட்டளையிட்டான்.
அதற்கேற்ப நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்களின் மனைவி ஹாஜரா மற்றும் குழந்தை இஸ்மாயீல் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு பைத்துல் முகத்தஸிலிருந்து பிரயாணப்பட்டார்கள். பல நாட்கள் பிரயாணத்திற்குப் பின் தற்போதுள்ள கஃபா ஆலயம் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது அந்த இடம் ஆள்அரவமற்ற பொட்டல் பாலைவனமாக இருந்தது.
ஒட்டகத்திலிருந்து தம் மனைவி ஹாஜராவை குழந்தை இஸ்மாயீலுடன் இறக்கிவிட்டு, எதிர்திசையில் தங்கள் ஒட்டகத்தைத் திருப்பினார்கள். அப்போது, ஹாஜரா அவர்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ‘என்னையும் குழந்தையையும் ஆள்அரவமற்ற இந்தப் பாலைவனத்தில் தனியே விட்டுவிட்டுச் செல்கிறீர்களே! இது அல்லாஹ்வின் கட்டளையா?’ என்று வினவினார்கள். அதற்கு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘ஆம்! இது அல்லாஹ்வின் கட்டளையாகும்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தார்கள்.
ஹாஜரா தம் குழந்தையோடு உண்ண உணவின்றி, தாகத்திற்கு தண்ணீர் இன்றி தன்னந்தனியாக யாருமற்ற, ஒதுங்கி நின்று கொள்ள நிழல் கூட இல்லாத அந்தப் பாலைவன சுடுமணலில் அல்லாஹ்வின் கட்டளையைப் பொருந்திக் கொண்ட நிலையில் தங்கியிருந்தார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்று சிறிது தூரத்தை அடைந்தபின் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். அதனை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَوةَ فَاجْعَلْ أَفْئِدَةً مِّنَ النَّاسِ تَهْوِي إِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرَاتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
எங்களுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சந்ததியை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக, விவசாயமில்லாத பள்ளத்தாக்கில் குடியமர்த்தி இருக்கிறேன்; எங்களுடைய இரட்சகனே! அவர்கள் (அங்கு) தொழுகையை நிறைவேற்றுவதற்காக; ஆகவே, மனிதர்களி(ல் ஒரு சிலரி)ன் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்தவையாக நீ ஆக்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவதற்காக, (பற்பல) கனி வர்க்கங்களிலிருந்து நீ அவர்களுக்கு உணவும் அளிப்பாயாக!
– சூரா இப்ராஹீம் : 37
ஹாஜரா அவர்கள் அங்கே பாலைவனத்தில் ஜனசஞ்சாரமற்ற அந்த இடத்தில் வெயிலின் உஷ்ணத்தால் ஏற்பட்ட தாகத்தைத் தனித்துக்கொள்ள தண்ணீர் கிடைக்குமா? அல்லது உணவு ஏதும் கிடைக்குமா? என்று தேடினார்கள். எதுவும் அவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை. இந்நிலையில் பசி தாகத்தால் அந்த பச்சிளம் குழந்தை இஸ்மாயீல் அழுது கொண்டிருந்தது.
ஹாஜரா அவர்கள் அக்குழந்தையை மணலில் கிடத்திவிட்டு, எங்கேனும் தண்ணீர் கிடைக்குமா? என்று அருகே இருந்த ‘ஸஃபா’ என்ற மலைகுன்றின் மீதேறி நின்று பார்ப்பதும், பிறகு அங்கிருந்து ஓடி வந்து ‘மர்வா’ என்ற மற்றொரு மலைக்குன்றின் மீதேறி பார்ப்பதும், இடை இடையே குழந்தையை பார்த்துக் கொள்வதுமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். இதுபோல் அவர்கள் ஏழு தடவை ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடினார்கள்.
இரண்டு மலைகளுக்கிடையே சற்றுப் பள்ளமாக இருந்த இடத்திற்கு வந்ததும், அந்த இடத்திலிருந்து குழந்தையைப் பார்க்க முடியவில்லை என்பதற்காக பள்ளம் இருக்குமிடம் வரும்போது, சற்று வேகமாக ஓடினார்கள். (இந்த செயல் அல்லாஹ்விற்கு விருப்பமாகiவிட்டதால், ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் ஸஃபா, மர்வா இரு மலைக்கிடையில் ஏழு முறைகள் நடக்க வேண்டுமென்றும், பள்ளம் இருந்த பகுதியில் சற்று ஓட வேண்டுமென்று நமக்குக் கட்டளையிட்டிருக்கிறான்.)
ஆள் அரவமற்ற அந்தப் பாலைவனத்தில் கடும் பசிதாகத்தால் அக்குழந்தை மணலில் காலை உதைத்து அழுது கொண்டிருந்தது. இத்தகைய இக்கட்டான நிலையில் அல்லாஹ் அக்குழந்தையின் கால் உதைத்த இடத்திலிருந்து தண்ணீர் வரச் செய்தான்.
ஸஃபா, மர்வா குன்றுகளுக்கிடையில் ஓடிக் கொண்டிருந்த ஹாஜரா அம்மையார் அவர்கள் தூரத்திலிருந்து குழந்தையின் காலடியில் தண்ணீர் வருவதைப் பார்த்து ஓடோடி வந்தார்கள். அந்தத் தண்ணீரை அள்ளி குழந்தைக்கு புகட்டி, தானும் வயிறு நிரம்ப குடித்தார்கள். அத்தனை நாள் பசி தாகம் அல்லாஹ்வின் கிருபையால் அவர்களுக்குத் தீர்ந்தது. (அதனால்தான் நாமும் அந்தத் தண்ணீரை வயிறு நிரம்ப குடிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்).
அந்தத் தண்ணீர் தொடர்ந்து அதிகமாக வெளி வந்து கொண்டே இருந்தது. அதைபார்த்த ஹாஜரா அம்மையார் அவர்கள், ‘ஜம்ஜம்’ – ‘நில் நில்’ என்று கூறினார்கள். உடனே அது ஊற்றாக மாறி குறுகிய இடத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
இன்றுவரை ஜம்ஜம் தண்ணீர் தொடர்ந்து வெளிவருவதையும், அதனை உலக முஸ்லிம்கள் அனைவரும் அள்ளிச் சென்று பருகுவதையும் பார்க்கிறோம். உலகமுடிவு நாள் வரை அந்த ஊற்று வற்றிப் போகாது என்பது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்.
அவ்வழியாக பிரயாணம் செய்யும் கூட்டத்தினர் ஜம்ஜம் தண்ணீர் ஊற்றைப் பார்த்துவிட்டு சிறுசிறு குழுக்களாக அங்கேயே தங்க ஆரம்பித்தனர். இவ்வாறு அவ்விடம் மக்கா என்ற ஊராக உருவானது.
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவ்விடத்திலேயே சுமார் பத்து வயது சிறுவராக வளர்ந்திருந்தார்கள். இப்போது நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அடுத்த சோதனை இறைவனின் புறத்திலிருந்து வந்தது. அதாவது தன் மகன் இஸ்மாயீல் அவர்களை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நபி இப்ராஹீம் அவர்களுக்குக் கனவின் மூலம் இறைவன் ஆணையிட்டான்.
அதன் பிறகு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மனைவி ஹாஜராவிடம், மகன் இஸ்மாயீலை ஓரிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி தம் மகனை மினாவின் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.
மினாவை அடைந்ததும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகன் இஸ்மாயீல் அவர்களிடம், ‘அல்லாஹ்வுக்காக உன்னை அறுத்துப் பலியிட வேண்டும் என்று இறைவன் எனக்கு ஆணையிட்டுள்ளான்’ என தெரிவித்தார்கள்.
அல்லாஹ்வின் இக்கட்டளையை நபி இப்ராஹீம் அவர்கள் தம் மகன் இஸ்மாயீல் அவர்களிடம் கூறியபோது, அதற்கு மகன் இஸ்மாயீல் அவர்கள்,
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يُبْنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللهُ مِنَ الصَّبِرِينَ
எனவே, (இஸ்மாயீல்) அவருடன் சேர்ந்து உழைக்கக்கூடிய பருவத்தை அவர் அடைந்தபொழுது, அவர் (தன் மகனிடம்), ‘என் அருமை மகனே! நிச்சயமாக நான், உன்னை அறுத்துப் பலியிடுவதாக, நிச்சயமாக நான் கனவில் கண்டேன்; இதைப் பற்றி, நீ என்ன அபிப்பிராயப்படுகிறாய்’ என்று கேட்டார்; அதற்கவர், ‘என் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள்; அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள்.
– சூரா அஸ்ஸாஃப்பாத் : 102
இதற்கிடையில் அல்லாஹ்வின் இக்கட்டளை நிறைவேறி விடக்கூடாது என ஷைத்தான் பல்வேறு முயற்சிகள் செய்தான். கனவில் அறிவுறுத்தப்பட்டபடி, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள், தங்கள் அருமை மகனாரை அழைத்துக்கொண்டு அறுக்கச் செல்லும்போது, ஷைத்தான் மனித உருவில், அன்னை ஹாஜரா அவர்களிடம் வந்து, ‘உங்களுக்கு விஷயம் தெரியுமா? உங்கள் கணவர் உங்கள் அருமை மகனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்வதற்காக தம்மோடு அழைத்துச் செல்கிறார்’ என்று கூறினான். அவன் பேச்சை அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் ஏற்கவில்லை.
எனவே, அவன் அன்னையவர்களை விட்டுவிட்டு, சிறுவரான ஹஜ்ரத் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் வந்து, ‘உமது தந்தை உம்மை அறுக்கப்போகிறார். அவரது பின்னால் செல்லாதீர்’ என பல வழிகளில் எச்சரித்தான். அவனது வார்த்தைகளை ஹஜ்ரத் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களும் செவி சாய்க்கவில்லை.
ஷைத்தானின் இந்த முயற்சிகளை அறிந்து கொண்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவர்களின் மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களும், ஷைத்தானைக் கற்களைக் கொண்டு அடித்து விரட்டினார்கள். அதன் காரணமாகவே ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள், மினாவில் ஷைத்தானுக்குக் கல் எறிகிறார்கள்.
மினாவில் ஒரு பாறையருகே தந்தை நபி இப்ராஹீம் அவர்கள் தம் மகனை அறுத்துப் பலியிடும் வேலைகளில் இறங்கினார்கள். அப்போது இருவருக்குமிடையேயுள்ள பாசப்போராட்டம் என்னவாக இருந்திருக்கும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்லாஹ்வின் பாதையில் தான் அறுக்கப்படப் போகிறோம் என்ற உணர்வுடன் இஸ்மாயீல் அவர்கள் தம் தந்தையிடம், “தந்தையே! என்னை அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுக்கப் போகிறீர்கள். நான் தங்களைப் பார்ப்பதாலோ, தாங்கள் என்னைப் பார்ப்பதாலோ நம் பாசம் வெளிப்பட்டு அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்படுவதற்கு அது தடையாகிவிடும். ஆகவே, என்னை முகங்குப்புற படுக்கச் செய்து அறுத்துவிடுங்கள். மேலும் தம்முடைய கை கால்களை கட்டிவிடும்படி வேண்டி நின்றார்கள்.”
அல்லாஹ்வின் அன்புக்காக இருவரும் தம் பாசங்களை அறுத்தவர்களாகத் தயாரானார்கள். மகனின் வேண்டுதலின்படி மகன் இஸ்மாயீலின் கைகால்களை கட்டிவிட்டு முகங்குப்புற கிடத்தி அல்லாஹ்விற்காக நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அறுக்கத் தயாரானார்கள். இதனை அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ
ஆகவே, அவ்விருவரும் [அல்லாஹ்வின் கட்டளைக்கு] முற்றிலும் கீழ்ப்படிந்து, (இப்றாஹீமாகிய) அவர், (இஸ்மாயீலாகிய) அவரை (அறுத்துப் பலியிட) முகங் குப்புறக் கிடத்தியபோது;
– சூரா அஸ்ஸாஃப்பாத் : 103
தம் மகன் இஸ்மாயீலின் கழுத்தில் கத்தியை வைத்து அறுக்க முயற்சித்தார்கள். ஆனால் அறுபடவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தார்கள். ஆனால் கத்தி இஸ்மாயீல் அவர்களின் கழுத்தை அறுக்கவில்லை. அப்போது, இறைவன்:
وَنَدَيْنَهُ أَنْ يَإِبْرَاهِيمُ
(அச்சமயம்) நாம் அவரை ‘இப்றாஹீமே!’ என அழைத்தோம்.
– சூரா அஸ்ஸாஃப்பாத் : 104
இதன்பிறகு, அல்லாஹ்வின் உத்தரவிற்கேற்ப வானவர் ஜிப்ரயீல் சுவனத்திலிருந்து ஒரு ஆட்டைக் கொண்டுவந்து நபி இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அளித்து, அல்லாஹ்வுக்காக இதனை அறுத்துவிடும்படி அல்லாஹ் ஆணையிட்டுள்ளான் என்று கூறி நின்றார்கள். அவ்விதம் ஆடு குர்பானி செய்யப்பட்டது. இதனைக் குறித்து அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:
وَفَدَيْنَهُ بِذِبْحٍ عَظِيمٍ
மேலும், (அவருக்கு பதிலாக) ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவரைப் பகரமாக்கினோம்.
– சூரா அஸ்ஸாஃப்பாத்: 107
அல்லாஹுதஆலா நபி இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு இச்சோதனையிலிருந்து வெற்றிபெற்ற சுபச்செய்தியைக் கூறினான்.
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
நிச்சயமாக நீர் (உம்முடைய) கனவை உண்மையாக்கி வைத்துவிட்டீர். நிச்சயமாக நன்மை செய்கிறவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
– சூரா அஸ்ஸாஃப்பாத்: 105
நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தையே இல்லாமலிருந்த நிலையில் வயோதிக காலத்தில் ஒரு குழந்தையை அல்லாஹ் கொடுத்தான். குழந்தை பிறந்ததும் அக்குழந்தையை யாருமற்ற பாலைவனத்தில் விட்டுவர அல்லாஹ் ஆணையிட்டான்.
குழந்தை வளர்ந்து சிறுவன் ஆனபின் அதனை அறுத்து குர்பானி கொடுக்கும்படி ஆணையிட்டான். இறைவன் ஏவிய அனைத்துக் கட்டளைகளுக்கும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மனமுவந்து அதனை நிறைவேற்றத் தயாரானார்கள்.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் போடப்பட்டபோது நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் இறைநம்பிக்கையின் உறுதி வெளிப்பட்டது.
குழந்தை பிறந்து அதனை பாலைவனத்தில் விட்டுவரும் போது, அல்லாஹ்வின் நேசம் பெரியதா? இல்லை குழந்தையின் மீதுள்ள பாசம் பெரியதா? என்று சோதிக்கப்பட்டபோது, அல்லாஹ்வின் மீதுள்ள அன்பு மட்டுமே நபி இப்ராஹீம் (அலை) அவர்களிடத்திலிருந்து வெளிப்பட்டது.
பிறகு நபி இப்ராஹீம் (அலை) அவர்களோடு குழந்தை பழகி சிறுவனாக வளர்ந்தபோது, இப்போதும் தன்னிடமுள்ள நேசம் குறைந்திருக்கிறதா என நபி இப்ராஹீம் அவர்களைச் சோதித்துப் பார்த்த போது, மகனையே அறுத்துப் பலி கொடுக்கத் தயாரான நிகழ்ச்சி நடந்தது. அப்போதும் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது இருந்த நேசத்தை தான் வெளிப்படுத்தினார்கள்.
அல்லாஹ்வே குர்ஆனில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ஏற்பட்டது பெரும் சோதனை என்று கூறுகிறான்.
إِنَّ هَذَا لَهُوَ الْبَلَوْا الْمُبِينُ
நிச்சயமாக இது – இதுவே தெளிவான பெரும் சோதனையாகும்.
– சூரா அஸ்ஸாஃப்பாத்: 106
இத்தனை பெரிய தியாகங்கள் செய்த பின் தான் நபி இப்ராஹீம் (அலை) அவர்களும், அவர்களின் மகன் இஸ்மாயீல் அவர்களும் சேர்ந்து இறையில்லமான கஃபாவைக் கட்டினார்கள். அதனை நோக்கியே அனைவரும் தொழும்படி அல்லாஹ் ஆக்கிவிட்டான். இம்மூவரின் தியாகச்செயல்களை நினைவுகூறுவதே ஹஜ் என்ற புனித அமலாகும்.
ஹஜ்ஜின் மூலம் இறைநம்பிக்கையும், இறைநேசமும் உள்ளத்தில் வளர்க்கப்பட வேண்டும் என்பதே ஹஜ் செய்வதின் நோக்கமாகும். நாம் நேசிப்பதற்கும், நம்பிக்கை வைப்பதற்கும் அல்லாஹ் ஒருவனே தகுதியானவன்.
சுமார் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்க்கும் ஏற்பட்ட சோதனைகளை இறைவன் எதற்காக குர்ஆனில் கூறி நமக்கு விளக்கவேண்டும்? படித்துத் தள்ளிவிட்டுப் போக இது ஒன்றும் கதையல்ல.
ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்த அசைக்க முடியாத இறைநம்பிக்கையும், தன் குடும்பத்தாரின் மீதுள்ள அன்பை விட இறைவனின் மீதுள்ள நேசம்தான் பெரிது என்று வாழ்ந்து காட்டிய ஒரு உன்னத மனிதரின் வாழ்க்கை வரலாறாகும். சோதனைகள் ஏற்படும்போது இறைவனிடமே தஞ்சம் புக வேண்டும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டியவை.
ஆகவேதான், அம்மூவருக்கும் ஏற்பட்ட சோதனைகள் நடந்த இடமான கஃபா,மினா போன்ற இடங்களில் ஹஜ் என்ற கிரியை நாம் நிறைவேற்றும் விதமாக கடமையாக்கப்பட்டுள்ளது.
இறைநேசத்தை வளர்க்கும் விதமாகத்தான் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள், தான் நேசிக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு இன்னும் தையல் கூட இல்லாத ஆடையை, மைய்யித்திற்கு உடுத்தியதைப் போல் உடுத்திக் கொண்டு கஃபாவை தல்பியா சொல்லி தவாஃப் செய்வதும், ஆண்கள் மொட்டை அடிப்பதும், ஸஃபா, மர்வாவிற்கிடையில் நடப்பதும், ஜம்ஜம் தண்ணீர் பருகுவதும், முஸ்தலிபா அரஃபாவில் தங்குவதும், மினாவில் ஷைத்தானுக்கு கல்அடிப்பதும், ஆடு, ஒட்டகங்களை அல்லாஹ்வுக்காக குர்பானி கொடுப்பதும் ஆகிய இவையனைத்தும் அல்லாஹ்வின் நேசத்தை அடைந்து கொள்வதற்காக உள்ளதாகும்.
