அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மஸ்ஜிதை (மஸ்ஜிதுன் நபவி) கட்டிக் கொண்டிருந்தபோது, நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒரு செங்கலை சுமந்து வந்தனர். ஆனால் அம்மார் (ரலி) அவர்கள் இரண்டு செங்கற்களைச் சுமந்து வந்தார். ஒரு செங்கல் அவருக்காகவும், ஒரு செங்கல் நபி (ஸல்) அவர்களுக்காகவும் (என்று சுமந்தார்).
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்று அவருடைய முதுகைத் தடவிக் கொடுத்து, ‘சுமைய்யாவின் மகனே! மற்றவர்களுக்கு ஒரு கூலி உண்டு; உனக்கோ இரண்டு கூலிகள் உண்டு; உன்னுடைய இறுதி உணவு ஒரு கிண்ணம் பால்; உன்னை அக்கிரமம் செய்யும் கூட்டத்தினர் கொலை செய்வார்கள்’ என்று கூறினார்கள்.
— புகாரி
ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஒரு பாதையில் சென்றால் ஷைத்தான் வேறு பாதையில் செல்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களைச் சிறப்பித்துக் கூறியதைப் போன்று ஷைத்தானின் அட்டூழியத்திலிருந்து பாதுகாப்பு பெற்ற மற்றொரு ஸஹாபி அம்மார் இப்னு யாசிர் (ரலி) அவர்கள் என்று நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டவர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மார் (ரலி) அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த சுமைய்யா (ரலி), யாசிர் (ரலி) ஆகியாரின் அருமை மகன் ஆவார். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே இவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் மக்கா காஃபிர்கள் சொல்ல முடியாத அளவு துன்பங்களை அம்மார் (ரலி) அவர்களுக்கு கொடுத்தார்கள்.
பாலைவன சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்டும், நெருப்பு கங்குகளை குழிக்குள் நிரப்பி அதன் மேல் படுக்க வைத்தும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனாலும் அம்மார் (ரலி) அவர்களின் ஈமானின் மன உறுதி குறையவில்லை. இதனால் தான், ‘அம்மார் (ரலி) அவர்களின் ஈமான் உடலின் சதையைக் கடந்து எலும்பு வரை ஊடுருவியுள்ளது’ என்று ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
யார் அம்மாருடன் பகைமை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகைமை கொள்கிறார் என்ற நபி மொழியும், எங்கு உண்மை உள்ளதோ அங்கு அம்மார் (ரலி) இருப்பார் என்ற சிறப்பும் இவர்களுக்கு உண்டு.
நபி (ஸல்) அவர்கள் நடத்திய எல்லாப் போர்களிலும் இவர்கள் பங்கு கொண்டுள்ளனர். ஒரு முறை ‘இஸ்லாத்தின் போர் வாள்’ என்று அழைக்கப்படும் காலித் பின் வலித் (ரலி) அவர்கள் அம்மார் (ரலி) அவர்களை மனம் புண்படும்படியான வார்த்தையைச் சொல்லிவிட்டார். இதனால் அம்மார் (ரலி) அவர்கள் மனவேதனை அடைந்தார்கள். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் அம்மார் (ரலி) கையைப் பிடித்து மக்களின் செவிகளில் விழும்படி சொன்னார்கள்:
‘யார் இந்த அம்மாருடைய கோபத்திற்கு உள்ளாகிறாரோ, அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு உள்ளாகிறார்; யார் அம்மாரை வேதனைப் படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் வேதனை செய்வான்’.
இதனைக் கேட்ட காலித் பின் வலித் (ரலி) அவர்கள் உடனே அம்மார் (ரலி) அவர்களைச் சந்தித்து அரவணைத்துத் தழுவி அவர் நெற்றியில் முத்தமிட்டு மன்னிப்புக் கோரினார்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அம்மார் (ரலி) அவர்களை எந்த அளவுக்கு கண்ணியப் படுத்தியுள்ளார்கள் என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு பின், ஹிஜ்ரி 21-இல் உமர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது அம்மார் (ரலி) அவர்களை ஈராக் பகுதியில் கூஃபாவின் ஆளுநராக நியமித்தனர். ஓராண்டோ, ஈராண்டுகளோ இவர்கள் அப்பதவியில் இருந்தனர்.
ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் கலீபாவான பொழுது அவர்களின் நம்பிக்கைக்குரிய வலக்கரம் போன்று விளங்கிய இவர்கள் கூஃபா மக்களை அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு செய்வதில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டனர்.
ஹிஜ்ரி 37-இல் அலி (ரலி) அவர்களுக்கும் முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த ஸிஃப்ஃபீன் போருக்கு முன் இவர்கள் ஈராக் மக்களை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன்; நியாயம் நம் பக்கமே உள்ளது. அலியின் படையணியில் சேர்ந்து போர் செய்தவருக்கே இவ்வுலகில் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த பேறும், மறுமையில் சுவனப் பெரு வாழ்வும் கிடைக்கும். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! சுவனத்து வாயில் திறந்து கிடக்கிறது. சுவனத்துக் கண்ணழகிகள் உங்களை வரவேற்கக் காத்து நிற்கின்றார்கள். நாம் இப்போரில் இறப்பெய்தின் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் சுவனத்தில் சந்திப்போம்’ என்று வீர உரை ஆற்றினர்.
வீர உரை ஆற்றிய பின்னர் தாகத்தால் இவர்கள் தண்ணீர் கேட்க, தண்ணீருக்குப் பதிலாகப் பால் வந்தது. அதைக் கண்ட இவர்கள் ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்மை நோக்கி, ‘இப்னு சுமையா! உம் கடைசி உணவு பாலாக இருக்கும்’ என்று கூறியதை அங்கிருந்தோரிடம் எடுத்துரைத்து விட்டு, ‘இன்று நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் சந்திக்கப் போகிறேன்’ என்று கூறிப் போர்க்களத்தில் பாய்ந்து வீரப் போர் செய்து கி.பி. 657-இல் ஷஹீது (வீரமரணம்) எய்தினார்.
இவர்களின் அடக்கவிடம் ஸிஃப்ஃபீனில் இருக்கிறது.
யா அல்லாஹ்! அம்மார் (ரலி) அவர்களுக்கு உன்னுடைய நிலைத்த அருளையும் நிம்மதியையும் என்றென்றும் பொழிவாயாக! ஆமீன்!
