அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் ஆவார்.
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இவர் மக்காவில் பிறந்தார்.
நபியவர்களின் நெருக்கமான ரத்த பந்த உறவினராக இருந்த காரணத்தாலும், நபி (ஸல்) அவர்களின் தனிப்பட்ட பிரியம் இவர் மீது இருந்த காரணத்தினாலும், இவர் எப்போதும் நபியவர்களுடன் இருந்து வந்தார். இவரின் சிறிய அன்னை மைமூனா அவர்கள் நபியவர்களின் மனைவி ஆவார்.
இவரை தனது நெஞ்சுடன் அணைத்து, ‘அல்லாஹ்வே! இவருக்கு ஞானத்தை கற்றுக்கொடு’ என்று நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள். மற்றொரு அறிவிப்பில், ‘அல்லாஹ்வே! இவருக்கு வேத விளக்கத்தைக் கற்றுக் கொடுப்பாயாக!’ என்று வந்துள்ளது.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுய தேவைக்காக ஒதுங்கிய போது சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றார்கள். அந்த பணிவிடையின் போது, ‘அல்லாஹ்வே இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுப்பாயாக!’ என்று துஆ செய்தார்கள்.
இந்த அருள்மிக்க துஆவினால் இப்னு அப்பாஸ் அவர்கள் இந்த உம்மத்தின் பெரும் ஞானவானாக விளங்கினார்கள். குர்ஆனுடைய விரிவுரைகளையும் மார்க்க சட்ட ஞானங்களையும் மக்களுக்கு போதித்த பெரும் கல்வி கடலாக விளங்கினார்கள்.
இன்னும் ஸஹாபாக்களுக்கு குர்ஆனில் விளக்கம் அறிய வேண்டிய சமயங்களில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களையே அணுகுவர். இதனால் பெரும் கண்ணியத்தையும் மதிப்பையும் அவர்கள் அடையப் பெற்றார்கள்.
ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களைத் தனது சபைக்கு அழைத்து தனக்கருகில் அமர வைத்து கண்ணியப்படுத்துவார்கள்; அவர்களின் கூற்றை ஏற்றுக் கொள்வார்கள்.
அப்போது சில முஹாஜிர்கள், “எங்களுக்கும் ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இப்னு அப்பாஸை அழைத்து உட்கார வைப்பது போன்று அவர்களையும் அழைத்து தங்கள் பக்கத்தில் உட்கார வைக்கலாமே” என்று உமர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவு முதிர்ச்சி பெற்றவர்; கேள்வி கேட்கின்ற நாவும், சிந்தித்து புரிகின்ற உள்ளமும் அவரிடம் இருக்கின்றது’ என்று அவரது சிறப்பைக் கூறினார்கள்.
பிறகு, ஒரு நாள் மக்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்பை வெளிப்படுத்த நாடி, உமர் (ரலி) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தன்னுடன் சபைக்கு அழைத்து வந்தார்கள்.
அப்போது குர்ஆனில்,
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ * وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا
(நபியே! உமக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால், (அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிப்பவனாக இருக்கிறான்.
— சூரா அந்நஸ்ர் : 1-3
என்ற அத்தியாயத்தை உமர் (ரலி) அவர்கள் ஓதி காண்பித்து ‘இது பற்றி நீங்கள் என்ன விளங்குகிறீர்கள்? என கூறுங்கள்’ என்று சபையோரிடம் கேட்டார்கள்.
அவர்களில் சிலர், “நமக்கு அல்லாஹ் வெற்றி கொடுக்கும் போது நாம் அல்லாஹ்வை துதிக்க வேண்டும்; புகழ வேண்டும் என்று நமக்கு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்; சிலர் அமைதியாக இருந்தார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களை நோக்கி, ‘நீர் இப்படித்தான் கூறுகிறீரா?’ என்று கேட்க, அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் ‘இல்லை’ என்றார். “அப்படி என்றால் நீர் என்ன விளக்கம் சொல்கிறீர்” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் கூறினார்கள்:
‘இந்த அத்தியாயம் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய அஜல் – ஆயுள் காலம் முடிவதைப் பற்றிய முன் அறிவிப்பாகும். இதன் மூலம் அல்லாஹ் நபியவர்களின் ஆயுள் காலம் முடிவதை அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தான். வெற்றி என்பது மக்காவின் வெற்றியாகும். அதுதான் உமது இறுதி தவணையாகும். ஆகவே, உமது இறைவனை புகழ்ந்து துதித்து, அவனிடம் பாவமன்னிப்பு கோரி வருவீராக! நிச்சயமாக அவன் பெரும் பிழைப் பொறுப்பாளன் ஆவான்.’ இவ்வாறு இப்னு அப்பாஸ் கூறி முடித்தார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘நீர் அறிந்திருந்த இந்த கருத்தைத்தான் நானும் அறிந்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘குர்ஆனுக்கு விளக்கம் கூறுவதில் இப்னு அப்பாஸ் சிறந்தவர் ஆவார்.’
ஒருவர் தன்னிடம் குர்ஆன் வசனம் ஒன்றை குறித்து விளக்கம் கேட்டபோது, ‘இப்னு அப்பாஸ் அவர்களிடம் சென்று கேளுங்கள்; அவர்தான் இப்போது இருப்பவர்களில் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட வேதத்தை மிகவும் அறிந்தவர்’ என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கூறுவது சாதாரண விஷயமன்று. பெரும் ஸஹாபாக்களே விளக்கம் சொல்ல அச்சப்படுவார்கள். ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எல்லா ஸஹாபாக்களை விடவும் குறைந்த வயது உடையவராக இருந்தார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை நபி (ஸல்) அவர்களது மறைவுக்குப் பிறகு, வயதில் மூத்த ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள், வயது குறைந்த அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்களிடம் சென்று, ‘நான் இப்போது உங்கள் முன் ஒலு செய்கிறேன்; அது நபி (ஸல்) அவர்கள் ஒலு செய்வதைப் போன்று இருக்கிறதா? என பாருங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். சுப்ஹானல்லாஹ்!
பிரபல தாபியீன் அதா இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய சபையைவிட ஒரு கண்ணியமான கல்விச் சபையை நான் பார்த்ததில்லை. அது மிகுந்த இறையச்சம் உடையதாக இருந்தது; மார்க்க சட்ட வல்லுனர்களும் அவரிடம் இருந்தார்கள்; குர்ஆன் அறிஞர்களும் அவரிடம் இருந்தார்கள்; அரபு கவிதைகள் அறிந்த அறிஞர்களும் அவரிடம் இருந்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு மிக விசாலமான ஓடை ஆவார்கள், அனைவருக்கும் அவர்கள் தேவையானதைக் கற்றுக் கொடுத்து அனுப்புவார்கள்.
அபூ வாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
ஹஜ்ரத் உஸ்மான் அவர்களின் ஆட்சி காலத்தில் ஹஜ்ஜுக்கு அமீராக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அது சமயம் அரஃபா மைதானத்தில் ‘ஸூரா அந்நூர்’ அத்தியாயத்தை ஓதி ஒவ்வொரு வசனமாக விளக்கம் கொடுத்தார்கள். இவரைப் போன்று வேறு யாரின் பேச்சையும் நான் செவியுற்றதில்லை. (கல்வியில்) இவரைப் போன்று வேறு யாரையும் நான் பார்த்ததில்லை.
இவரை ஈராக் – பஸராவின் கவர்னராக ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் நியமித்து இருந்தார்கள்.
ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் கூஃபாவில் கொல்லப்பட்ட பிறகு, அங்கிருந்து ஹிஜாஸ் வந்து சில காலம் மக்காவில் தங்கி இருந்துவிட்டு பிறகு, தாயிஃப் சென்று அங்கு தங்கிவிட்டார்கள். அங்குதான் அவர்கள் தனது எழுபத்தி ஒன்றாவது வயதில் இறப்பெய்தினார்கள். அங்குள்ள இப்னு அப்பாஸ் மஸ்ஜிதின் வளாகத்தில் அவர்களது அடக்கஸ்தலம் உள்ளது.
யா அல்லாஹ்! ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுமை வாழ்வை விசாலமாக ஆக்கி வைப்பாயாக! இன்னும் நீ கிருபை செய்வாயாக! ஆமீன்!!
