நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு நாள் இரவு இஷா தொழுகைக்கு பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவீக்கு வருகை தந்தார்கள். அங்கே உமர் (ரலி) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகிய இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகில் நபி (ஸல்) அவர்களும் அமர்ந்து கொண்டார்கள்.
அப்போது நான் தொழுது கொண்டிருந்தேன். தொழுகையில் ஸுரா அந்நிஸாவை ஓதிக் கொண்டிருந்தேன். ஸுரா அந்நிஸாவின் நூறாவது வசனத்தோடு என் தொழுகையை நான் நிறைவு செய்தேன்.
தொழுது முடித்ததும் என்னை அழைத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ்வே! அல்லாஹ்விடம் நீ விரும்பியதை கேள்! உனக்கு அல்லாஹ் நீ விரும்பியதை வழங்குவான்!’ என இரு முறை கூறினார்கள்.
பின்பு, ‘உங்களில் யாரேனும் குர்ஆனை அது முதன் முதலில் அருளப்பட்டதைப் போன்ற அதே தூய்மையுடன் ஓத விழைந்தால் அவர்கள் உம்மு அப்துல்லாவின் மகனார் (இது அவர்களின் செல்லபெயர்) அவர்கள் ஓதுவது போன்று ஓதிக் கொள்ளட்டும்!’ என்றும் கூறினார்கள்.
மறுநாள் ஃபஜ்ருத் தொழுகை முடித்து நான் அமர்ந்திருக்கும் போது என்னிடம் வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள், எனக்கு வாழ்த்து கூறியபிறகு என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் விரும்பியதை அல்லாஹ்விடம் கேள்! அல்லாஹ் நீர் விரும்பியதை உமக்குத் தருவான்!’ என நபி (ஸல்) அவர்கள் உம்மிடம் கூறினார்களே!இன்றைய அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அல்லாஹ்விடம் நீர் என்ன துஆ செய்தீர் கூறுங்களேன்!’ என்று கேட்டார்கள்.
அதற்கு, நான் ‘அல்லாஹ்வே! உன்னிடம் நான் நிலையான ஈமானையும், அழிந்து போகாத அருட் கொடைகளையும், உயர்வான சுவனத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு என்றென்றும் தோழமை கொள்கிற பெரும் பேற்றையும் கேட்கிறேன்!’ என்று நான் கேட்ட அந்த துஆவைக் கூறினேன்.
சிறிது நேரத்துக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் கேட்டதையே அவர்களும் கேட்க, ‘அபூபக்ர் (ரலி) அவர்கள் முந்திவிட்டார்கள் (அவர்களிடம் கூறிவிட்டேன்)’ என்று கூறினேன்.
‘அபூபக்ருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக! எப்பொழுதெல்லாம் நற்காரியங்களில் அபூபக்ருடன் நான் போட்டியிடுகிறேனோ அப்பொழுதெல்லாம் அவர் என்னை முந்திக் கொள்கிறார்.’ என்று உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
— முஸ்னது அஹ்மது
