ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி பதினேழாம் ஆண்டு மதீனாவுடைய ஆட்சிப்பொறுப்பிற்கு வந்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டது.
சிறிது சிறிதாக பரிசுத்த இஸ்லாம் அருகே இருக்கும் நாடுகளுக்கு பரவிக்கொண்டிருந்த இனிமையான தருணம் அது. மஸ்ஜிதுன் நபவி பள்ளி உள்ளுர் மற்றும் வெளியூர் முஸ்லிம்களின் கூட்ட நெரிசலால் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் பள்ளியை விஸ்தரிக்க முடிவெடுத்தார்கள்.
அதற்காக, பள்ளியைச் சுற்றி இருக்கிற நபித்தோழர்களின் வீட்டை இடித்து, அந்த இடத்தையும் சேர்த்து கட்டினால் தான் பள்ளியை விரிவாக்கம் செய்ய முடியும் என்ற நிலையையும் உணர்ந்தார்கள்.
பள்ளியைச் சுற்றிலும் நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவிமார்களின் வீடுகளும் இன்னும் ஹஜ்ரத் உஸாமா (ரலி), ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அபூபக்ர் (ரலி), முஹம்மத் இப்னு அபூபக்ர் (ரலி) ஆகிய நபித்தோழர்களின் வீடுகளும் இருந்து வந்தது.
ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை மட்டும் தவிர்த்து மற்றவர்களின் வீடுகளையும், இடங்களையும் வாங்கிட முடிவெடுத்து, வீட்டின் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து, “நீங்கள் உங்கள் வீட்டை விலைக்கு கொடுத்தீர்கள் என்றால் அதற்குப் பகரமாக மதீனாவின் இன்னொரு இடத்தில் ஒரு வீட்டையோ, அல்லது அதற்கான கிரையத்தையோ முழுமையாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் விரும்பினால் அன்பளிப்பாக தரலாம்; நற்கூலி வழங்குவதற்கு அல்லாஹ் போதுமானவனாக இருக்கிறான்” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபூதாலிப் (ரலி) அவர்களும், அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களின் இரு மகன்களும் தங்களின் வீடுகளையும், நிலங்களையும் அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விட்டார்கள்.
மற்ற நபித்தோழர்களில் சிலர் கிரயத்தையும், இன்னும் சிலர் மதீனாவின் பிற பகுதியில் நிலத்தையும் பெற்றுக் கொண்டு அவர்கள் வசித்த வீட்டையும், நிலத்தையும் அரசிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வு நடைபெறுகிற போது ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஊரில் இல்லை. அவர்கள் பயணம் முடிந்து வந்த உடன் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து மற்ற வீட்டின் உரிமையாளர்களிடம் பேசியது போன்று இவர்களிடமும் பேசினார்கள்.
ஆனால், ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ மறுத்து விட்டார்கள். அதற்கு ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் “நீங்கள் இடம் தரவில்லையானால் அரசு உம்முடைய நிலத்தை தம் அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்றிக் கொள்ளும்!” என்று கூறினார்கள்.
இருவருக்கும் பேச்சு முற்றவே, ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த சம்பவத்தை ஒரு வழக்காக நீதிமன்றத்தில் தொடுத்தார்கள்.
நீதிபதி ஹஜ்ரத் உபை இப்னு கஃப் (ரலி) அவர்கள் இருவரின் வாதப் பிரதிவாதங்களையும் கேட்டு விட்டு, ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “உமர் (ரலி) அவர்களே! நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டிருக்கின்றேன்.
அதாவது, இறைவன் நபி தாவூத் (அலை) அவர்களிடம் பைத்துல் முகத்தஸை கட்ட ஆணை பிறப்பித்தான். முதற்கட்டமாக தாவூத் நபி (அலை) அவர்கள் அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டார்கள். அங்கே, இஸ்ரவேலர்களில் ஒருவருக்குச் சொந்தமான ஓர் இடம் இருப்பதைக் கண்டு அதை இறையில்லம் கட்ட இடம் தேவைப்படுவதால் தம்மிடம் விலைக்கு தந்து விடுமாறு விலைபேசினார்கள்.
ஆனால், அவரோ தரமுடியாது என்று மறுத்து விட்டார்கள். அதற்கு ஹஜ்ரத் தாவூத் (அலை) அவர்கள் மனதிற்குள் இப்படிச் சொல்லிக்கொண்டார்களாம்: ‘நீ தராவிட்டால் என்ன? நான் எடுத்துக் கொள்கிறேன்’.
உடனடியாக, இறைவன் ஹஜ்ரத் தாவூத் (அலை) அவர்களுக்கு வஹீ மூலம், ‘என்னை வணங்குவதற்காகக் கட்டப்படுகிற ஆலயம் என்பது ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, மோசடி, ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கி பரிசுத்த பூமியாய் இருக்க வேண்டும்’ என்று அறிவித்தான்.
பின்னர் ஹஜ்ரத் தாவூத் (அலை) அதற்கான இழப்பீடைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கி பைத்துல் முகத்தஸின் கட்டுமானப்பணியை துவக்கினார்கள். ஆகவே, உமர் அவர்களே! சற்று நிதானித்து முடிவெடுங்கள்’ என்றார்கள்.
இதைக் கேட்டதும் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் அவர்களே! உம்முடைய வீடும் வேண்டாம், உம்முடைய நிலமும் வேண்டாம், இரண்டையும் அதிகாரத்தைக் கொண்டு நான் ஒரு போதும் அபகரிக்க மாட்டேன்” என்றார்கள்.
அதற்கு ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களிடம், “உமர் அவர்களே! ஒரு மனிதனுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிற உரிமையை அவர் எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்பதைக் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்தேன்.
மேலும், உங்களை விட மஸ்ஜிதுன் நபவி பள்ளியின் விரிவாக்கத்தில் அதிக நாட்டமுடையவன் நான். எனவே, எந்தப் பிரதி பலனையும் நாடாமல் இதோ என் வீட்டையும், நிலத்தையும் உங்களிடம் தருகின்றேன்” என்றார்கள்.
