நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் பிந்திய பத்து நாட்களில் தாங்கள் இறக்கும் வரையில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். மேலும் ரமலானில் பிந்திய பத்து நாட்களில் ‘லைலத்துல் கத்ர்’ என்னும் இரவைத் தேடுங்கள் என்றும் கூறினார்கள். இன்னும், நபி அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாப் இருந்தனர்.”
ரமலானின் இறுதிப் பத்து நாட்களை அல்லாஹ்வை வணங்குவதற்காக மட்டுமே மஸ்ஜிதில் தங்குவது சுன்னத்தான இஃதிகாப் ஆகும்.
இஃதிகாப் என்றால் “தடுத்துக் கொள்ளுதல்” எனும் பொருளாகும். உலக அலுவல்களிலிருந்து முற்றிலும் தன்னைத் தடுத்துக் கொண்டு இபாதத்களில் மட்டுமே முழுமையாக ஈடுபடுவதாகும்.
இஃதிகாபின் நோக்கம் அல்லாஹுதஆலாவுடன் உள்ளம் ஒன்றிவிடுவதாகும் என இப்னு கய்யூம் (ஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆண்கள் அவரவரது மஹல்லாப் பள்ளியிலும், பெண்கள் வீட்டின் உள்பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
“எந்த மனிதர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஒருநாள் இஃதிகாப் இருப்பாரோ, அவருக்கும் நரகத்திற்குமிடையே அல்லாஹுதஆலா மூன்று அகழிகளைத் திரையாக ஏற்படுத்துகிறான். அவை ஒவ்வொன்றின் தூரம் வானம் பூமிக்கிடையே உள்ள தூரத்தைவிட அதிகமாகும்.”
— தர்கீப்
வருடம் முழுவதும் படைப்பினங்களிடம் கொண்டிருந்த நெருக்கத்தை விட்டுவிட்டு இஃதிகாப் இருப்பதன் மூலம் அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இது நல்ல வாய்ப்பாகும்.
இஃதிகாப் இருக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:
- ஜுமுஆ தொழுகை நடைபெறக்கூடிய மஹல்லாவின் பள்ளியில்தான் இஃதிகாப் இருக்கவேண்டும்.
- அவசியத் தேவையின்றி பிறரிடம் பேசக்கூடாது.
- பள்ளியை விட்டு வெளியே வரக்கூடாது.
- அதிகமான இபாதத்கள், திக்ரு, குர்ஆன் திலாவத், துஆவில் ஈடுபடவேண்டும். வீண்பேச்சு, விவாதம், புறம் போன்ற தீய பேச்சுக்கள் பேசுவதோ, கேட்பதோ கூடாது.
- இஃதிகாபில் இருப்பவர் முற்றிலுமாக உலக அலுவல்களில் இருந்து நீங்கிக் கொள்ள வேண்டும்.
- அதிகம் தூங்குவதையும், ஓய்வெடுப்பதையும் தவிர்த்து, அதிகம் இபாதத்களில் ஈடுபடவேண்டும்.
- பெண்கள் அவரவர் வீட்டின் உள்பகுதியில் ஒரு தனி இடத்தை ஒதுக்கி இபாதத்தில் ஈடுபடுவது பெண்களுக்கான இஃதிகாப் ஆகும்.
ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருந்துள்ளார்கள். எனவே அந்த கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் இஃதிகாப் இருப்பது சுன்னத்தாகும்.
இஃதிகாப் என்ற பெயரில் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. தேவையற்ற பேச்சுக்களை அறவே பேசக்கூடாது. ஆகுமான பேச்சாக இருந்தாலும் குறைத்துக் கொள்வது நலம். இஃதிகாப் இருப்பவருடைய விஷயத்தில் அவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்.
இஃதிகாப் இருப்பவர் ஓய்வெடுத்தாலும், ‘நற்செயல்கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
