நோன்பின் சட்டங்களை அறிந்து நோன்பு நோற்கவேண்டும். மனம் விரும்பியவாறு நோன்பு வைத்தால் நாள்முழுவதும் பசித்திருந்ததைத் தவிர வேறு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
- மிஸ்வாக் செய்வதால் நோன்பு முறியாது.
- நோன்பு நினைவிருக்க வாய் கொப்பளிக்கும்போது தண்ணீர் தொண்டையினுள் சென்றுவிட்டால் நோன்பு முறிந்து விடும்.
- கண்களுக்கு சுருமா இடுவது, எண்ணெய் தேய்ப்பது, சோப்பு போட்டு குளிப்பது, அத்தர் பூசுவது இவைகளால் நோன்பு முறியாது.
- பீடி, சிகரெட், பொடி போன்றவைகளை உபயோகித்தால் நோன்பு முறிந்து விடும்.
- குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் நோன்பு முறியாது.
- மாதத் தீட்டின் போது பெண்கள் நோன்பு வைக்கக் கூடாது. ஆனால் விடுபட்ட நோன்புகளை அவசியம் களாச் செய்ய வேண்டும்.
- முடி வெட்டுவது, நகம் வெட்டுவது இவைகளால் நோன்பு முறியாது.
- நோன்பு வைக்க எழும்போது பஜ்ரு பாங்கு சொல்லப்பட்டு விட்டால் எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் நோன்பின் நிய்யத்துடன் தொடரலாம்.
- நோன்பாளி பொய், புறம், கோள், கெட்டவார்த்தைகள் பேசுவது மாபெரும் குற்றமாகும். நோன்பை முறிக்கா விட்டாலும் நோன்பின் நன்மைகளை அழித்து விடும்.
- எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது.
- நோன்பு வைத்த நிலையில் நோன்பு திறக்கும் நிய்யத்தைச் சொல்வதால் நோன்பு முறியாது.
- தாமதம் செய்யாமல் குறித்த நேரத்தில் நோன்பு திறப்பது நோன்பின் நிபந்தனையாகும்.
- தூங்கி எழுந்ததும் கனவின் மூலம் ஸ்கலிதம் ஆகியிருந்தால் அவரது நோன்பு முறியாது. குளித்துக் கொள்ளலாம்.
- குளிப்புக் கடமையானவர் ஸஹர் நேரம் குறைவாக இருப்பின் ஒழுச்செய்துவிட்டு ஸஹர் செய்தபின் குளித்துக்கொள்ளலாம். நேரம் இருப்பின் குளித்துவிட்டு சஹர் செய்யவேண்டும்.
- உடல் நலமில்லாவிட்டால் நோன்புடன் ஊசி போடலாம்.
- சிறுவயது பிள்ளைகளை நோன்பு வைக்க பழக்கப்படுத்த வேண்டும்.
- பகலில் நோன்பிருக்கும் நினைவுடனேயே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும்.
- நோன்பு வைக்க முடிகிறது. ஆனால் தொழ முடியவில்லை என சிலர் நோன்பையும் விட்டுவிடுகின்றனர். நோன்பு ஒரு தனி கடமையாகும். தொழுகை தனி கடமையாகும். ஒன்றைக் காரணம் காட்டி ஒன்றை விடுவது பெரும் குற்றமாகும். கண்டிப்பாகத் தொழ வேண்டும்.
- ரமலான் மாதம் முழுவதும் நோன்புடைய காலமாகும். எனவே ஒருவர் சஹர் செய்து நிய்யத் வைக்காமல் தூங்கிவிட்டு காலையில் எழுந்து நிய்யத் வைக்க மறந்து விட்டோமே என்று எண்ண வேண்டியதில்லை. நோன்பைத் தொடர்ந்து கொள்ளலாம்.
- தக்க காரணமின்றி வேண்டுமென்றே நோன்பை ஒருவர் முறித்தால் அது பெரும் பாவமாகும்.
