அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِّيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ
“ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் – (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைப்பிராணிகளிலிருந்து, அவர்களுக்கு அவன் உணவாகக் கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக (வழிபாட்டு முறையை) ஏற்படுத்தினோம்.”
– சூரா ஹஜ் : 34
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர் பெருநாள் தொழும் இடத்திற்கு வரவேண்டாம். மேலும், கொழுத்த பிராணியாகப் பார்த்து குர்பானி கொடுங்கள். ஏனெனில் அது ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் உங்களைச் சுமந்து செல்லும் வாகனமாக வந்து நிற்கும்.”
அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
“உம் இறைவனைத் தொழுது குர்பானியும் கொடுப்பீராக!”
– சூரா அல் கவ்ஸர் : 2
“குர்பானி” என்ற அரபுப்பதத்திற்கு ‘இறைவன்பால் நெருக்கமாகுதல்’ என்று பொருளாகும். அதாவது இறையருள் அடைவதற்கு உள்ள நற்செயலாகும். முக்கியமான (வாஜிபான) அமலே இந்த குர்பானி ஆகும்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِن يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ
“(குர்பானி பிராணிகளாகிய) அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ ஒருபோதும் அல்லாஹுதஆலாவை அடைவதில்லை. எனினும் உங்களிலிருந்து (தக்வா என்னும்) பயபக்தியே அவனை அடையும்.”
– சூரா அல்ஹஜ்: 37
நபித்தோழர் ஜைத் இப்னு அர்க்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யாரஸுலல்லாஹ்! குர்பானி எவ்வாறு ஏற்பட்டது?” என ஸஹாபாக்கள் கேட்டதற்கு, “அது உங்கள் தந்தை ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிமுறை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அதனால் என்ன நன்மை கிடைக்கும்?” எனக் கேட்ட போது, “அப்பிராணியின் ஒவ்வொரு முடிக்கும் நன்மை உண்டு” எனக் கூறினார்கள்.
– மிஷ்காத்
குர்பானி கடமை:
எவர் ஜகாத்துடைய தகுதி (நிஸாப்) உடையவராக இருக்கிறாரோ அவர் மீது குர்பானி கடமையாகும். ಜகாத்துடைய நிஸாப் என்பது தனது செலவுபோக கடனில்லாமல் மேல் அதிகமாக 10.5 பவுன் தங்கமோ, 612 கிராம் வெள்ளியோ அல்லது அதன் கிரையமோ இருந்தால் அவருக்கு ஜகாத் கொடுப்பது (100 ரூபாய்க்கு 2.50 ரூபாய்) கட்டாயக் கடமையாகும். (இந்த விதிப்படி உள்ளவருக்கு ஸதக்கத்துல் பித்ர், குர்பானி கடமையாகும்.)
குர்பானி சட்டங்கள்:
- கடமையானவர் தனக்கென்று, வாங்கிய ஆட்டை மௌத்தாகி விட்டவர்களுக்காக நிய்யத் செய்து கொடுக்கக் கூடாது. தன் கடமையையே முற்படுத்த வேண்டும். வசதியிருப்பின் மௌத்தானவர்களுக்குத் தனியாக ஆடு வாங்கித் தரலாம்.
- நடுத்தர வசதி உள்ளவர்கள் குர்பானிப் கொடுப்பது சிறப்பு. ஆனால், கடன் வாங்கி குர்பானி கொடுக்கக் கூடாது.
- ஆடு, மாடு, ஒட்டகம் இம்மூன்றுமே குர்பானிப் பிராணிகள்.
- மாடு, ஒட்டகம் போன்றவற்றில் ஏழு நபர்கள்வரை கூட்டு சேரலாம். குர்பானியின் நிய்யத் இன்றி ஒரு நபர் சேர்ந்திருந்தாலும் ஏழு நபர்களின் குர்பானியும் கூடாது.
- குடும்பத்தலைவர் குர்பானி கொடுக்கக் கடமைப்பட்டவர். தனது பொறுப்பில் உள்ள ஆண், பெண் மக்களுக்கும் ஒவ்வொரு வருடமும் குர்பானி கொடுக்க வசதி இருந்தால் கொடுத்தே ஆகவேண்டும்.
- ஆடு கொடுப்பதே மிகச்சிறந்தது. மிகவும் அதிகமான நன்மைக்குரியது.
- ஆட்டின் (குர்பானியின்) இறைச்சியை மூன்று பங்காக ஆக்கி: 1. உறவினர்கள், 2. ஏழை மிஸ்கீன்கள், 3. தனக்காக – எனப் பிரித்துத் தரவேண்டும்.
- குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறையைக் கண்ட நாள் முதல் குர்பானி கொடுக்கும் வரை முடி, நகம் வெட்டாமலிருப்பது முஸ்தஹப்.
- மாடு 2 வயது முடிந்து 3வது வயது ஆரம்பித்திருக்க வேண்டும்.
- ஆடு செம்மறி, வெள்ளாடு ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்க வேண்டும். செம்மறி ஆடு கொழுத்ததாக இருந்து 6 மாதமே ஆகியிருந்தாலும் கூடும்.
- குர்பானி பிராணியின் காது, வால் மூன்றில் ஒரு பங்கு இல்லாதிருந்தாலும் கூடும். ஆனால் அதைவிட அதிகமாக குறைந்திருந்தால் கூடாது.
- குருடு, நொண்டி, காது, வால் துண்டிக்கப்பட்டது, சொறிப்பிடித்தது இவை கூடாது. கொம்பு முழுவதும் ஒடிந்திருந்தாலும் கூடாது.
- அறுக்கத் தெரிந்தால் நிய்யத் கூறித் தானே அறுக்கவேண்டும். தெரியாவிட்டால் அறுப்பவரின் அருகில் நின்று கொள்ள வேண்டும்.
- குர்பானிப் பிராணியை அறுக்கும்போது கிப்லாவை நோக்கிப் படுக்க வைத்து அறுக்க வேண்டும்.
- குர்பானித் தோலை தர்மம் செய்துவிட வேண்டும். அறுப்பவருக்குக் கூலியாகத் தரக்கூடாது.
- குர்பானிப் பிராணியை அறுத்தபின் உயிர் அடங்கும் வரை காத்திருந்து பின்பு தோலை உரிக்க வேண்டும். துடிக்க, துடிக்க உரிப்பது கூடாது.
- குர்பானிப் பிராணியின் இரத்தம் ஹராமாகும். இஸ்லாத்தில் இரத்தம் சாப்பிடுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் பிறருக்கு அதனைத் தருவதும் ஹராமே.
- பெருநாள் தொழுகை தொழுதபின்பே குர்பானி கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்பு குர்பானி கொடுத்தல் கூடாது.
- அகீகா கொடுப்பவர் குர்பானியின் பங்கில் (மாடு, ஒட்டகம்) சேரலாம்.
- பெட்டை ஆட்டினை குர்பானி கொடுக்கலாம். எனினும் கொழுத்த கிடாய் ஆடுதான் சிறப்பு. காயடிக்கப்பட்ட ஆடாகவும் இருக்கலாம்.
- குர்பானி ஆடுகளை ஒன்றோடொன்று மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது கூடாது. இது வெறுக்கத்தக்க செயலாகும்.
ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொம்புள்ள, கறுப்புக் கலந்த, வெண்மையான இரண்டு செம்மறிக் கிடாய்களைக் குர்பானி கொடுத்தார்கள். பிஸ்மில்லாஹ் மற்றும் தக்பீர் கூறித் தங்களின் முபாரக்கான கரத்தால் அவ்விரண்டையும் அறுத்தார்கள். தங்களின் காலை அவ்விரண்டினுடைய முன்புஜத்தின் மீது வைத்ததை நான் பார்த்தேன். பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என அறுக்கும் போது கூறுவார்கள்.
குர்பானிப் பிராணியை அறுக்கும்முன் ஓதவேண்டிய துஆ:
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ * لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல்அர்ள ஹனீஃபவ் வமா அன மினல் முஷ்ரிக்கீன். இன்ன ஸலாத்தீ வநுஸுகீ வமஹ்யாய வமமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீக்க லஹு வபி தாலிக உமிர்த்து வஅன அவ்வலுல் முஸ்லிமீன்.
பொருள்:
“மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை – இதைக்கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். அவனுக்கு வழிப்பட்டவர்களில் – முஸ்லிம்களில் நான் முதன்மையானவன்.”
என ஓதியபின், அறுப்பவர், ‘யா அல்லாஹ்! இந்தக் குர்பானியை உனக்காக அறுக்கிறேன்’ என்ற நிய்யத் செய்து பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் எனக் கூறி அறுக்க வேண்டும். குர்பானி கொடுப்பவரே அறுப்பது சிறந்தது. இல்லையெனில் அறுக்கும் போது அருகில் இருக்க வேண்டும்.
குர்பானி கொடுத்தபின் ஓதும் துஆ:
رَبِّ تَقَبَّلْ مِنِّي كَمَا تَقَبَّلْتَ مِنْ خَلِيلِكَ إِبْرَاهِيمَ وَحَبِيْبِكَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ
ரப்பீ தகப்பல் மின்னீ கமா தகப்பல்த்த மின் கலீலிக்க இப்ராஹீம வ ஹபீபிக்க முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலை希 வஸல்லம்.
பொருள்: “யா அல்லாஹ்! உனது கலீல் – நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களது குர்பானியையும், உனது ஹபீபாகிய முஹம்மது (ஸல்) அவர்களது குர்பானியையும் ஏற்றுக்கொண்டது போல எனது குர்பானியையும் ஏற்றுக்கொள்வாயாக!” என்ற துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்.
ஒரு ஹதீஸில், குர்பானி பிராணி அறுபட்டு முதல் இரத்தத்துளி விழுந்ததும், குர்பானி கொடுத்தவருடைய பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. கியாமத் நாளன்று குர்பானி கொடுக்கப்பட்ட பிராணி கொண்டு வரப்பட்டு, எழுபது மடங்கு அதிகக் கனமுள்ளதாக்கி நற்செயல்களுடன் சேர்த்துத் தராசில் எடை போடப்படும் என வந்துள்ளது.
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் எப்போதும் தங்களுக்காக ஒரு ஆட்டையும், நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு ஆட்டையும் குர்பானி கொடுக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் முழு உம்மத்தினருக்காகவும் குர்பானி கொடுத்துள்ளார்கள்.
எனவே, உம்மத்தார்களாகிய நாமும், நபி (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக அண்ணலாரின் பெயரால் குர்பானி கொடுப்பது மிகுந்த விரும்பத்தகுந்த செயலாகும்.
