முஸ்தலக் என்னும் கிளையினரின் தலைவரான ஹாரிஸ் இப்னு அபூ ழிரார் தனது கூட்டத்தின்ரையும் மற்றும் பல அரபி குழுக்களையும் அழைத்துக் கொண்டு நபியவர்களிடம் போர் புரிய வருவதாக நபி (ஸல்) அவர்களுக்கு தகவல் எட்டியது.
அதற்காக தோழர்களைப் போருக்கு புறப்பட ஆயத்தமாக்கினார்கள். இதுவரை எப்போதும் கலந்துகொள்ளாத நயவஞ்சகர்களின் ஒரு கூட்டம் நபியவர்களுடன் புறப்பட்டது.
குழப்பங்கள் செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட முனாஃபிக்குகள்(நயவஞ்சகர்கள்) முஸ்லிம்களின் அணியில் பெரும் பிணக்கையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மிக இழிவான பழியையும் உருவாக்கினர்.
அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் நயவஞ்சகர்களின் தலைவன் ஆவான். இவன் இஸ்லாமின் மீதும் முஸ்லிம்கள் மீதும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களின் மீதும் எல்லையற்ற எரிச்சல் கொண்டிருந்தான். அதற்கு காரணம், அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் இவனைத் தலைவனாக்கி மகுடம் சூட்டுவதற்கு தயாராக இருந்த சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தர, அவர்கள் அனைவரும் இவனைப் புறக்கணித்து விட்டு நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பிவிட்டனர். இதனால் தனக்கு கிடைக்கவிருந்த ஆட்சியை நபியவர்கள் பறித்துக் கொண்டார்கள் என்று இவன் மனம் புழுங்கி குழுப்பங்களை ஏற்படுத்தி தீங்குகளை உண்டாக்கிக் கொண்டிருந்தான்.
நயவஞ்சகர்கள் என்றால், சிலர் வாயளவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு மனதளவில் ஏற்றுக்கொள்ளாமல் முஸ்லிம்கள் போல் நடித்து முஸ்லிம்களின் எதிரிகளுக்கு தூது சொல்வதும், நபியவர்களுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதும் அவதூறு பரப்புவதுமாக இருந்தவர்கள். ஆனால், முஸ்லிம்களிடம் இணக்கமாக இருப்பது போல் தங்களைக் காட்டிக் கொள்வார்கள்.
இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் முஸ்தலக் போர் முடித்துத் திரும்பும் போது ‘உரைஸிஃ’ என்ற இடத்தில் தங்கியிருந்தார்கள்.
அப்போது தண்ணீர் நிரப்பிக் கொள்ளும் ஓர் இடத்தில் முஹாஜிர்களில் ஜஹ்ஜாஹ் அல் கிஃபா என்பவரும், அன்ஸாரிகளில் கினான் இப்னு வபர் அல் ஜுஹ்னி என்பவரும் சண்டை செய்து கொண்டனர்.
அப்போது ஜுஹ்னி, “அன்ஸாரிகளின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்” என்றார். ஜஹ்ஜாஹ், “முஹாஜிர்களின் கூட்டமே! உதவிக்கு வாருங்கள்” என்றார்.
இக்கூச்சலைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது இவ்வாறு அறியாமைக்கால வார்த்தைகளையா பயன்படுத்துகிறீர்கள்? இதை விட்டு விடுங்கள். அது மிக அசுத்தமானது!” என்று எச்சரித்தார்கள்.
இந்தச் செய்தி நயவஞ்சகர்களின் தலைவனான அப்துல்லாஹ் இப்னு உபைக்கு எட்டியது. இதனால் அவன் கோபமடைந்தான். அவனுடன் அவனது இனத்தவரில் சிலர் இருந்தனர். அவர்களில் மிகச் சிறிய வயதுடைய ஜைது இப்னு அர்கம் என்பவரும் இருந்தார்.
அப்போது அப்துல்லாஹ் இப்னு உபை, “இப்படியா அவர்கள் செய்தார்கள்! நமக்கு வெறுப்பூட்டி விட்டார்கள். நமது ஊருக்கு வந்த வந்தேறிகள் நம்மையே மிகைத்து விட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நமக்கும் அவர்களுக்குமுள்ள உதாரணம்: ‘உனது நாயை நல்ல கொழுக்க வளர்ப்பாயாக! அது இறுதியில் உன்னையே தின்றுவிடும்’ (வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது) என்பதுதான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் மதீனாவிற்குத் திரும்பினால் கண்ணியமானவர்கள், இழிவானவர்களை அங்கிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும்” என்று கூறினான்.
மேலும், தனக்கு முன் இருந்தவர்களை (அன்ஸாரிகளை) நோக்கி, “பார்த்தீர்களா! இது நீங்கள் உங்களுக்கே தேடிக் கொண்டது. அவர்களை உங்கள் ஊரில் தங்க வைத்து உங்களது பொருட்களை பங்கு வைத்துக் கொடுத்தீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்கள் உங்களை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் சென்று விடுவார்கள்” என்று கூறினான்.
ஜைது இப்னு அர்கம் தனது தந்தையின் சகோதரரிடம் இச்செய்தியைக் கூற, அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அப்போது உமரும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “நபியே! அப்பாத் இப்னு பிஷ்ருக்குக் கட்டளையிடுங்கள். அவர் அவனைக் கொன்று விடட்டும்!” என்றார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமரே! அப்படி எவ்வாறு செய்ய முடியும்? முஹம்மது தமது தோழர்களைக் கொல்கிறார் என்று மக்கள் பேசுவார்கள். எனவே, அவ்வாறு செய்யக் கூடாது. நீங்கள் அனைவரையும் இங்கிருந்து புறப்படுவதற்கு அறிவிப்புச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
வழக்கமாக நபி (ஸல்) அவர்கள் அந்த நேரத்தில் பயணிக்க மாட்டார்கள். மக்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க பயணத்தைத் தொடங்கினர்.
அப்போது அன்சாரியாக இருந்த உஸைது இப்னு ஹுழைர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து வாழ்த்துக் கூறி, “நபியே! நீங்கள் வழக்கத்துக்கு மாற்றமான நேரத்தில் பயணிக்கிறீர்களே!” என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு உபை கூறிய செய்தி உமக்கு தெரியாதா?” என்று கேட்டார்கள்.
அதற்கு உஸைது (ரலி) “அவன் என்ன கூறினான்?” என்று கேட்டார்.
“அவன் மதீனாவிற்குத் திரும்பினால் அதிலுள்ள கண்ணியவான்கள், இழிவானவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உஸைது (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பினால் அவனை மதீனாவிலிருந்து வெளியேற்றலாம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவன் இழிவானவன். நீங்கள்தான் கண்ணியமானவர்கள்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவனுடன் சற்று மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். அவனது கூட்டத்தினர் அவனைத் தங்களது தலைவராக்க நினைத்த போது அல்லாஹ் உங்களை எங்களிடம் கொண்டு வந்தான். எனவே, நீங்கள்தான் அவனது பதவியைப் பறித்துக் கொண்டீர்கள் என்று அவன் எண்ணுகிறான்.” என்று ஆறுதல் கூறினார்கள்.
அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் மக்களை அழைத்துக் கொண்டு மாலை வரை பயணித்தார்கள். பயணத்தில் எங்கும் ஓய்வெடுக்காமல் அன்று இரவிலிருந்து மறுநாள் முற்பகல் வரை தொடர்ந்து பயணம் செய்தார்கள். அதற்குப் பின் மக்களுக்கு ஓய்வெடுக்க அனுமதி கொடுத்தார்கள். கடுமையான களைப்பின் காரணமாக மக்கள் இறங்கியவுடன் அயர்ந்து தூங்கி விட்டார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததற்குக் காரணம், மக்கள் வேறு எந்த பேச்சிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக இருக்கலாம்.
நபி (ஸல்) அவர்களிடம் ஜைதுப்னு அர்கம், தான் பேசிய செய்தியைக் கூறிவிட்டார் என்ற விவரம் நயவஞ்சகான் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு தெரியவந்தது.
உடனே அவன் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து “தான் அப்படி எதுவும் பேசவில்லை” என்று சத்தியம் செய்து கூறினான்.
நபி (ஸல்) அவர்களுடன் இருந்த சில அன்ஸாரிகள், “அல்லாஹ்வின் தூதரே! ஜைது சிறுவர். அவர் சரியாக விளங்கி இருக்கமாட்டார். இப்னு உபை கூறிய சொல்லை அச்சிறுவர் சரியாக நினைவில் வைக்கத் தெரியாது. எனவே, இப்னு உபை கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றனர்.
இது தொடர்பாக ஜைது இப்னு அர்கம் அவர்களே கூறுகிறார்கள்:
“மக்கள் என்னை பொய்யர் என்று கூறியதால் எனக்கு இதுவரை ஏற்பட்டிராத பெரும் கவலை ஏற்பட்டு நான் எனது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டேன். அந்நிலையில் எனது கூற்றை உண்மைப்படுத்தி குர்ஆனில் அத்தியாயம் 63ல் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வசனங்களை அல்லாஹ் இறக்கினான்.”
ஜைது இப்னு அர்கம் (ரலி) கூறுகிறார்கள்:
“இந்த வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவுடன் அவர்கள் என்னை அழைத்து இவற்றைக் ஓதிக்காண்பித்து அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான்!” என்று கூறினார்கள்.
– ஸஹீஹுல் புகாரி
நயவஞ்சகனான அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஒரு மகன் இருந்தார். அவரது பெயரும் அப்துல்லாஹ்தான். இவர் சிறப்புமிக்க நபித்தோழர்களில் ஒருவராக விளங்கினார். இவர் தனது தந்தையின் செயல்களைப் பற்றி தெரிந்தவுடன் அவனிடமிருந்து விலகிக் கொண்டார்.
முஸ்லிம்கள் மதீனாவுக்குத் திரும்பிய போது மதீனாவின் நுழைவாயிலில் தனது வாளை உருவியவராக இவர் நின்று கொண்டார்.
அவரது தந்தை இப்னு உபை அங்கு வந்த போது தனது தந்தை என்று கூட பார்க்காமல், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) உன்னை அனுமதிக்காத வரை நீ இங்கிருந்து (ஊருக்குள்) செல்ல முடியாது. நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள்தான் கண்ணியமிக்கவர், நீதான் இழிவானவன்.” என்று கூறி அவனைத் தடுத்து விட்டார்.
நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்து அவனுக்கு மதீனாவிற்குள் செல்ல அனுமதி அளிக்கவே அப்துல்லாஹ் (ரலி) அவனுக்கு வழிவிட்டார்கள். மேலும், அவர் இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட போதே, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அவனைக் கொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதைச் செய்ய எனக்குக் கட்டளையிடுங்கள்! நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவனது தலையை உங்களிடம் கொண்டு வருகிறேன்.” என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறியிருந்தார்.
– இப்னு ஹிஷாம்
