சிலரின் வரலாற்று சம்பவங்கள் நம் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் அப்படி மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நபிதோழரின் வரலாறு. இது மிக குறுகிய காலமே வாழ்ந்த நபி தோழர் தஃலபா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் சம்பவம்!
பதினாறு வயது நிரம்பிய பாலகர் இந்த தஃலபா இப்னு அப்துர் ரஹ்மான் (ரலி) மிக அமைதியான குணம், நற்பண்புகள் நிறைந்தவர். பிறர் மீது கண்ணியம் செய்யும் நற்குணம் உடையவர்.
இவரின் பணி நபி(ஸல்) அவர்கள் கூறும் செய்திகளைக் கேட்டு அதை அங்கு இல்லாத நபித்தோழர்கள் பிறகு வரும்போது அவர்களிடம் கூறி வருவதாகும். அப்பணியை பெரும் பாக்கியமாக கருதி செய்து வந்தார்கள்.
ஒரு சமயம் மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் தஃலபா அவர்களிடம் ஒரு வேலையைக் கூறி அதை நிறைவேற்ற அனுப்பி வைத்தார்கள்.
தஃலபா (ரலி) அவர்கள் செல்லும் வழியில் வீடு ஒன்றை கடக்க முற்படும்போது அவ்வீட்டு வாசலில் திரையிடப்பட்டிருந்த துணி விலகியது. அங்கு ஒரு பெண் குளித்து கொண்டிருந்தார். தஃலபா (ரலி) அவர்களின் பார்வை அப்பெண்ணின் மீது தற்செயலாக விழ உடனே தன்பார்வையை திருப்பியவராக, ‘அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு தேடுகிறேன்’ என்று கூறி அவ்விடத்தை விட்டு கடந்தார். எனினும், தஃலபா (ரலி) அவர்களின் மனம் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி வருந்தியது.
‘தாம் நபி (ஸல்) அவர்களின் தோழர்களின் ஒருவராக இருந்து கொண்டு ஒரு பெரும்பாவத்தை செய்து விட்டேனே! இனி நபி(ஸல்) அவர்களின் முகத்தை பார்க்கும் தகுதி தனக்கு இல்லை என்று எண்ணி வருந்தினார்.
மேலும், இறைவன் தன்னைப் பற்றி வசனம் எதுவும் இறக்கிவிடுவானோ அல்லது நபி(ஸல்) அவர்கள் தம்மை நயவஞ்சகர்களின் கூட்டத்தில் சேர்த்து விடுவார்களோ! என்று அச்சப்பட்டு, தான் இப்படி ஒரு பாவி ஆகிவிட்டேனே!’ என்று அழுதார்.
எங்கே செல்வது? என்ன செய்வது? என்று ஒன்றும் விளங்கவில்லை! வீட்டிற்குச் சென்றால் நபி (ஸல்) அவர்கள் என்னைத் தேடி தோழர்களை அனுப்புவார்கள்; நான் நபி(ஸல்) அவர்களைக் காண வேண்டியிருக்கும் என்று எண்ணி, கால் போன திசையில் ஊரை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்கள். தஃலபா அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று யாருக்கும் தெரியவில்லை.
நபி(ஸல்) அவர்களது கண்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் தஃலபாவை தேடின; ஆனால் காண முடியவில்லை. அவரைக் காணாததைக் கண்டு, நபி(ஸல்) அவர்கள் தன்தோழர்களிடம் ‘தஃலபா எங்கே?’ என்று கேட்க, தோழர்கள், ‘தெரியவில்லையே; யா ரசூலுல்லாஹ்! அவரோ விளையாட்டு பருவமுடையவர்; எங்காவது சிறுவர்களுடன் விளையாட சென்றிருப்பார் அல்லது அவர்களின் வீட்டில் இருப்பார்’ என்று கூறினார்கள்.
நாட்கள் உருண்டோடியது. நபி(ஸல்) அவர்கள் உமர் (ரலி), ஸல்மான் ஃபார்ஸி (ரலி) இருவரையும் அழைத்து, ‘தஃலபா ஏன் காணவில்லை? எங்கு சென்றார்? அவருக்கு என்ன ஆனது?’ என அவரைப் பற்றி விசாரித்து வருமாறு அனுப்பினார்கள்.
அத்தோழர்கள் இருவரும் மதீனா நகரம் முழுவதும் தேடியும் தஹ்லபா (ரலி) அவர்கள் கிடைக்கவில்லை.
இறுதியாக மக்காவிற்கு, மதீனாவிற்கும் இடையே உள்ள மலையின் அடிவாரத்தை அடைந்த நபித்தோழர்கள், அங்கு ஆடுமேய்க்கும் மக்களிடம் தஃலபாவின் அங்க அடையாளங்களைக் கூறி விசாரிக்க, அதற்கு அம்மக்களில் ஒருவர், ‘நீங்கள் அந்த அழுதுகொண்டே இருக்கும் பாலகரையா வினவுகிறீர்கள்? கடந்த ஒரு மாதமாக இந்த மலையிலிருந்து அவர் சூரியன் மறையும் நேரத்தில் அழுது கொண்டே கீழே இறங்கி வருவார். நாங்கள் எங்களிடம் உள்ள செம்மறி ஆட்டின் பாலை அவருக்குக் கொடுப்போம்; அதைக் குடித்துவிட்டு அழுது கொண்டே மறுபடியும் மலைக்கே அவர் சென்று விடுவார். சத்தியமாக அப்பாலகரிடம் அழுகையைத் தவிர வேறு எதையும் நாங்கள் பார்த்ததில்லை’ என்றதும் உமர் (ரலி) திகைத்து போனார்கள்.
மாலைநேரம் வரும் வரை தஃலபாவின் வருகைக்காக தோழர்கள் காத்திருந்தார்கள். மாலை நேரம் ஆனது; தஃலபா அங்கு வந்தார். அவருடைய அழுகையால் உடல் மெலிந்து நோய்வாய்ப் பட்டவராய் மிக மோசமான உடல் நிலையில் கந்தலான ஆடையில் தஃலபாவை கண்டனர். உமர் (ரலி), ஸல்மான் ஃபார்சி (ரலி) மேலும் இன்ன பிற தோழர்களை கண்ட தஃலபா மலையை நோக்கி நடக்க முற்பட்டார்.
அப்போது உமர்(ரலி) அவர்களைத் தடுத்து நிறுத்தவே தஃலபா (ரலி) அவர்கள் ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என வினவ உமர் (ரலி) அவர்கள், ‘உன்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்து வர சொன்னார்கள்’ என்றார்கள்.
உடனே தஃலபா (ரலி), ‘என்னைப் பற்றி ஏதும் இறைவசனம் இறங்கியதா? அல்லது என்னை நயவஞ்சகர்களோடு நபி (ஸல் ) அவர்கள் சேர்த்து சொன்னார்களா?’ என்று வினவ, உமர் (ரலி) அவர்கள், ‘நாங்கள் அப்படி ஒன்றும் அறியவில்லை; உம்மைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கவலை கொண்டுள்ளார்கள்; உன்னைக் காண ஆவலாக உள்ளார்கள்’ என்று கூறினார்கள்.
அதற்கு தஃலபா (ரலி), ‘இல்லை நான் நபியவர்களை சந்திக்கும் அருகதை அற்ற பாவியாக உள்ளேன்; என்னை விட்டுவிடுங்கள்; நான் இந்த மலையிலேயே கிடந்து இறந்து விடுகிறேன்’ என்று கூறினார்.
அதற்கு நபித்தோழர்கள், ‘இல்லை; உன்னை இந்த நிலையில் விட்டு செல்ல முடியாது; உன் உடல்நிலை மிக மோசமாக உள்ளது’ என்று கூறி விட்டு, அவர்களை அப்படியே தூக்கி சென்று அவர்களின் வீட்டில் படுக்கவைத்தனர். அப்போதும் தஃலபா (ரலி) அழுது கொண்டே இருந்தார்.
உமர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘யா ரசூலல்லாஹ்! தஃலபாவை நாங்கள் மதீனாவின் மலை பகுதி அடிவாரத்தில் பெற்றுக்கொண்டோம்; அவரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது; இப்போது அவர் அவரது வீட்டில் உள்ளார்’ என்று தெரிவித்தார்.
உடனே நபி(ஸல்) அவர்கள், தஃலபாவின் வீட்டிற்கு வர நபியவர்கள் வருவதை அறிந்து தஃலபா (ரலி) படுக்கையிலிருந்து தலையை உயர்த்தினார். நபி (ஸல்) அவர்கள் தஃலபாவின் மிக அருகில் அமர்ந்து தஃலபாவின் தலையை நபியவர்கள் தங்களின் மடியில் வைத்தார்கள்.
அப்போது தஃலபா (ரலி), ‘யா ரசூலல்லாஹ்! என் தலையை தரையில் கிடத்திவிடுங்கள்; இந்த பாவியின் தலை உங்கள் கண்ணியம் பொருந்திய மடியில் இருக்க அருகதையற்றது’ என்று கூறி அழ ஆரம்பித்தார்.
அதற்கு நபி அவர்கள், ‘முடியாது’ என மறுத்தார்கள். மீண்டும் தஃலபா (ரலி), ‘யா ரசூலல்லாஹ்! என் தலையை தரையில் கிடத்திவிடுங்கள்’ என கூறி அழுது கொண்டே இருந்தார்.
அப்போது நபி ஸல்) அவர்கள் ‘தஃலபா உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று வினவ, அதற்கு தஃலபா (ரலி), ‘யா ரசூலல்லாஹ்! நான் ஒருபெரிய பாவம் செய்து விட்டேன்; அதனால் அல்லாஹ் என்னை தண்டிப்பான் என்று அச்சமாக உள்ளது; யா ரசூலல்லாஹ்! நான் அல்லாஹ்வின் கருணையைக் கொண்டு ஆதரவு வைக்கிறேன்’ என்றார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் உன்னை நிச்சயம் மன்னிப்பான்; உனது பாவம் இந்த வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள அளவாக இருந்தாலும் சரியே!’ என்றார்கள்.
அப்போது தஃலபா (ரலி), ‘யா ரசூலல்லாஹ்! என் உடலில் எலும்புகளுக்கும், தசைகளுக்கும் இடையே எறும்புகள் ஊர்வதுபோல் உணர்கிறேன்’ என்றார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அப்படி உணர்கிறாயா தஃலபா?’ என வியப்புடன் கேட்க, அதற்கு தஃலபா (ரலி), ‘ஆம் யா ரசூலல்லாஹ்!’ என்றார்.
நபி(ஸல்) அவர்கள் ‘தஃலபா! நிச்சயமாக நீ மரணத்தின் சுவையை உணர்ந்துகொண்டிருக்கிறாய்’ என்றதும், தஃலபா (ரலி) அவர்கள் ‘அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்ற கலிமாவை மொழிய, மரணம் அவர்களைத் தழுவிக்கொண்டது.
வாழ்வில் எந்தவித ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளாத வயதில் மரணம் அவர்களை தழுவிக்கொண்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
நபி(ஸல்) அவர்கள் தம் கரங்களாலேயே கஃபன் இட்டு தாமே தொழுகையை முன் நின்று நடத்தினார்கள்.
ஜனாஸாவை அடக்கம் செய்ய செல்லும் போது நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய இரு பாதங்களின் முன் பகுதியில் கூட்டத்தின் மத்தியில் நடப்பது போல் நடப்பதை கண்ட உமர் (ரலி), “யா ரசூலல்லாஹ்! மக்கள்தான் விலாசமாக வழிவிட்டு செல்கிறார்களே பிறகு ஏன் இப்படி நடந்து வருகிறீர்கள்?’ என்று வினவினார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் வியப்புடன், ‘உமரே! இந்த தஃலபாவின் நல்லடக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான வானவர்கள் வந்துள்ளார்கள். அதனால்தான் என் இருகால்களை பதிக்க இடம் இல்லாமல் நடக்கிறேன்’ என்று கூறினார்கள்.
தஃலபா (ரலி) அவர்களுக்கு நிகழ்ந்த ஒரு சிறிய தவறை அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடைபட்ட அளவு பெரும்பாவமாக கருதி அல்லாஹ்விடம் பொருத்தம் நாடி தூயவராக பாவமீட்சி பெற்று மீண்டார்கள்.
ஸஹாபாப்பெருமக்கள் எப்படிப்பட்ட அப்பழுக்கற்ற மனிதர்களாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் என்பதற்கு இவ்வரலாற்றுச் சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது.
