அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணி வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. பக்கத்து வீட்டாருக்கு நன்மை செய்து வருவது முஃமினின் பண்பாக இருக்க வேண்டும்.
ஏனெனில், ‘அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தன் பக்கத்து வீட்டாருக்கு நன்மை புரியட்டும்’ என நபி(ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
அண்டை வீட்டாருக்கு நன்மை செய்து வருவதென்பது:
- அவர் தேவையாகி முறையிட்டால், இயன்ற அளவு உதவி செய்வது;
- விசேஷமான உணவு தயாரித்தால் அவருக்கும் வழங்கி மகிழ்விப்பது;
- அவர் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவரை உடல்நலம் விசாரிப்பது; மேலும், அந்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வது போன்ற உதவிகள் செய்வது;
- அவரது குறைகளை மறைப்பது;
- அவருக்கு சோதனைகள் கஷ்டங்கள் வந்துவிட்டால் அவருக்கு ஆறுதல் கூறுவது;
- அவர் தவறிழைத்தால் அவர் நேர்வழி அடைய முயற்சிப்பது;
- பக்கத்து வீட்டார் மரணித்துவிட்டால், அவர்களது நல்லடக்கம் வரை கலந்து கொள்வது, அவரது பிள்ளைகளுக்கு உதவி செய்வது போன்றவையாகும்.
நபித்தோழர் அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் ஈமான் கொண்டவனாக ஆக மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்?’ என வினவியபோது, ‘எவனது கெடுதல்களை விட்டும் அவனது பக்கத்து வீட்டார் நிம்மதி அடையவில்லையோ அவன்தான்’ என பதிலளித்தார்கள்.
- பக்கத்து வீட்டாரின் உரிமைகளைப் பறிப்பது,
- தமது வீட்டு கழிவுநீரை அண்டை வீட்டிற்கு செல்ல வைப்பது,
- பெரும் சப்தங்களை எழுப்பி இடையூறு செய்வது,
- அவர்களது உறக்கம் ஓய்வில் தொந்தரவு ஏற்படுத்துவது,
- அவர்களது சோகத்தின் போது தமது வீட்டில் மகிழ்வான விசேஷங்களை வேண்டுமென்றே கொண்டாடுவது,
- அவர்களது பிள்ளைகளை விரட்டுவது போன்றவை தீய செயல்களில் உள்ளவையாகும்.
இவை யாவும் அண்டை வீட்டாருக்கு செய்யும் தீங்குகளாகும்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்ணைக் குறித்து வினவப்பட்டது. “ஒரு பெண் இரவில் நின்று அதிகமாக தொழுகிறாள், பகலில் நோன்பு நோற்கிறாள் ஆனால், அவள் அண்டை வீட்டாருக்குத் துன்பம் தருகிறாள்” என்று சொன்னபோது, “அவள் நரகவாசி” என நபியவர்கள் பதிலளித்தார்கள்.
“ஏ ஜூபைர்! முஸ்லிம் சகோதரர்களை கண்ணியப்படுத்துவாயாக! அண்டை அயலாருடன் அழகிய முறையில் பழகுவீராக! பாவம் புரிபவர்களுடன் எவ்விஷயத்தில் சேர்ந்துவிடாதிருப்பாயாக! எவர் இவைகளை பேணுவாரோ, அவர் சுவர்க்கத்தில் வேதனையின்றி கேள்விக் கணக்கின்றி பிரவேசிப்பார்” என்று நபி(ஸல்) அவர்கள் நபித்தோழர் ஜுபைர் (ரலி) அவர்களுக்கு உபதேசித்தார்கள்.
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருப்பது போல், அடியார்களிடமும் நமக்குக் கடமைகள் இருக்கிறது. அதில் நமது பக்கத்து வீட்டாருக்கு நிறைவேற்ற வேண்டிய உரிமைகளை நிறைவேற்றிட வேண்டும்.
