நபி(ஸல்) அவர்களின் மனைவியும், ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் மகளுமான, ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் பகலின் இரு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை.
முஸ்லிம்கள் எதிரிகளின் கொடுமைகளால் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் காஃபிர்களின் நெருக்கடி காரண்மாக தாயகம் துறந்து (எத்தியோப்பியா) அபிஸீனியாவை நோக்கிச் சென்றார்கள்.
வழியில் ‘பர்குல் ஃகிமாத்’ எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தகினா என்பவர் அபூபக்ர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், ‘எங்கே செல்கிறீர்? என்று கேட்டார்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர். எனவே பூமியில் பயணம் செய்து என் இறைவனை வணங்கப் போகிறேன்!’ என்று கூறினார்கள்.
அதற்கு இப்னு தகினா, ‘உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது: வெளியேற்றப்படவும் கூடாது! ஏனெனில், நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்; துன்பமுற்றவர்களுக்கு உதவுகிறீர்; எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! ஆகவே, திரும்பி உமது (மக்கா) ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!’ எனக் கூறினார்.
இப்னு தகினா, தம்முடன் அபூபக்ர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷிக் காஃபிர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், ‘அபூபக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது: வெளியேற்றப் படவும் கூடாது! ஏழைகளுக்காக உழைக்கின்ற. உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கி கொள்கின்ற, துன்பப்படுபவர்களுக்கு உதவுகின்ற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா?’ என்று கேட்டார்.
ஆகவே, குறைஷியர் இப்னு தகினாவின் அடைக்கலத்தை ஏற்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். மேலும், இப்னு தகினாவிடம், ‘தமது வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும். விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூபக்ருக்கு நீர் கூறுவீராக! ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பிவிடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்!’ என்றனர்.
இதை இப்னு தகினா, அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதி பகிரங்கப்படுத்தாமல் தமது வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு, அவர்களுக்கு ஏதோ தோன்ற, தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்து தொழுதார்கள். அந்தப் பள்ளிவாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பவர்களின் மனைவி மக்கள் திரண்டு வந்து, ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலாயினர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும்போது மனம் உருகி வெளிப்படும் தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள். இணை வைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.
இப்னு தகினாவை உடனே அழைத்துவரச் செய்து, ‘அபூபக்ர் அவர்கள், தமது வீட்டில் தான் வணங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளித்திருந்தோம். அவர், அதை மீறித் தமது வீட்டின் முன்னால் உள்ள காலியிடத்தில் பள்ளிவாசலைக் கட்டி விட்டார்; பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கி விட்டார். அவர் எங்களை மனைவி மக்களைக் குழப்பி விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அவர் தம் இறைவனைத் தமது வீட்டில் மட்டும் வணங்குவதாக இருந்தால் செய்யட்டும்; பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறி விட்டால், நீர் கொடுத்த அடைக்கலத்தை மறுத்து விடும்படி அவரிடம் கேளும்! ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்தத்தை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூபக்ர் அவர்கள் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை!’ என்று அவர்கள் கூறினார்கள்.
உடனே இப்னு தகினா. அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘எந்த அடிப்படையில் நான் உமக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர்! நீர் அதன்படி நடக்க வேண்டும்! இல்லையென்றால் எனது அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்து விட வேண்டும்! இப்னு தகினா செய்த உடன்படிக்கையை அவரே மீறி விட்டார் என்று பிற்காலத்தில் அரபியர் என்னைப் பற்றிப் பேசக் கூடாது என்று நான் விரும்புகிறேன்!’ எனக் கூறினார்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘உமது அடைக்கல ஒப்பந்தத்தை நான் உம்மிடமே திரும்பத் தந்து விடுகின்றேன்! அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன்!’ என்று கூறினார்கள்.
அப்போது நபி ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். ‘நீங்கள் மக்காவைத் துறந்து அபயம் பெறச்செல்லும் நாடு எனக்குக் காட்டப்பட்டது. அது மலைகளுக்கிடையேயுள்ளதும், பேரீச்ச மரங்கள் நிறைந்ததுமான உவர் நிலமாகும்! அந்த இருமலைகள்தான் (மதீனாவின்) இரு கருங்கல் பூமிகளாகும்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது மதீனாவை நோக்கி சிலர் ஹிஜ்ரத் செய்து சென்றனர்.
(எத்தியோப்பியா) அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றவர்களில் சிலர் மதீனாவுக்குத் திரும்பி வந்தனர்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்யத் தயாரனபோது, அவர்களிடம் ‘சற்றுப் பொறுப்பீராக! எனக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்!’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்! என்றார்கள். நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது பயணத்தை நிறுத்தினார்கள். தம்மிடத்திலிருந்த இரண்டு ஒட்டகங்களுக்கும் ‘சமுர்’ எனும் மரத்திலிருந்த இலைகளை நான்கு மாதங்கள் தீனியாகப் போட்டு ஹிஜ்ரத்திற்காகத் தயார்படுத்தினார்கள்.
அதன்பிறகு, அல்லாஹ்வுடைய கட்டளைக்கேற்ப நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழரான ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களோடு மக்காவிலிருந்து மதீனாவிற்கு நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள்.
