அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
“உங்களிடம் ரமலான் மாதம் வந்துவிட்டது. அது பரக்கத்துடைய மாதம். அல்லாஹூதஆலா இம்மாதத்தில் உங்களின் பக்கம் கவனம் செலுத்தித் தன்னுடைய விசேஷமான அருளை இறக்கி வைக்கிறான். பாவங்களை மன்னிக்கிறான். இம்மாதத்தில் துஆக்களை ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹூதஆலா இம்மாதத்தில் நல்ல அமல்களில் நீங்கள் போட்டியிடுவதைக் கவனிக்கிறான். உங்களைப்பற்றி மலக்குகளிடம் பெருமை பாராட்டிப் பேசுகிறான். ஆகவே, உங்கள் புறத்திலிருந்து நன்மையான செயல்களை அல்லாஹ்விடம் காண்பியுங்கள். துர்பாக்கியவான் யாரெனில், இம்மாதத்திலும் (நற்செயல்கள் செய்யாமல்) அல்லாஹ்வுடைய அருளைவிட்டு நீங்கி இருப்பவன்தான்.”
ரமலான் அல்லாத மாதத்தில் ஒரு நஃபிலான வணக்கம், ரமலானில் பர்ளான வணக்கத்தைப் போன்ற நன்மையும், பிற மாதத்தில் ஒரு பர்ளான இபாதத், ரமலானில் எழுபது பர்ளான வணக்கம் செய்த நன்மையையும் பெற்றுத்தரும்.
ரமலானில் நேரத்தை வீணாக்காமல் ஒழுங்குபடுத்திக் கொண்டு அமல் செய்தால் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ளலாம். கீழ்கண்ட அமல்களை விடாது தொடர்ச்சியாகச் செய்தல் வேண்டும்.
- தஹஜ்ஜுத் தொழுகை:
குறைந்தது இரண்டு ரகஅத்திலிருந்து பன்னிரெண்டு ரகஅத்கள் வரை தொழுவது.
அல்லாஹ் குர்ஆனில் தஹஜ்ஜுத் தொழுகையின் சிறப்பைக் குறித்துக் கூறியுள்ளான் :

அவர்கள் (இரவில்) தங்கள் விலாக்களைப் (முதுகை) படுக்கையிலிருந்து உயர்த்தி, தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் பிரார்த்தனை புரிவார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள். அவர்கள் செய்த நற்செயல்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண்குளிரக்கூடிய (சன்மானத்தை) எவராலும் அறிந்து கொள்ள முடியாது.
— சூரா அஸ்ஸஜ்தா : 16, 17
ஸஹர் நேரத்தில் சிறிது நேரம் தஹஜ்ஜுத் தொழுதால் எத்தனை பெரிய பாக்கியங்கள் காத்திருக்கிறது! ஸஹருடைய நேரம் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரமாகும். அந்த நேரத்தில் தொழுதுவிட்டுப் பிரார்த்தனை செய்வது ஈருலக நலவுகளுக்கும் வாயிலாகும்.
தஹஜ்ஜுத் தொழுவது நல்லோர்களுக்கான அடையாளம் என அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
“இரவில் விழித்து தஹஜ்ஜுத் தொழுவதைக் காட்டிலும், வேறு சிறந்த நஃபிலான இபாதத் இல்லை.”
தஹஜ்ஜுத் தொழுது வருவதன் மூலம் இறைநெருக்கம் கிடைக்கிறது. மேலும், தஹஜ்ஜுத் தொழுது வருபவர்களுக்கு அல்லாஹ் ஒரு ஒளியை வழங்குகிறான். அதனால் அவர்களின் முகமும், உள்ளமும் பிரகாசமடையும். பாவங்களின் மீது வெறுப்பும், நற்செயல்களின் மீது ஆசையும் அந்த ஒளியில் கிடைக்கும். கடும் இருள் சூழ்ந்த மண்ணறையில் வெளிச்சம் வேண்டுவோர் தஹஜ்ஜுத் தொழுது கொள்ளட்டும் என்று ஷகீக் பல்கீ (ரஹ்) அவர்கள் உபதேசிக்கிறார்கள்.
அமீருல் முஃமினீன் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் உபதேசிக்கிறார்கள்:
“சுவர்க்கத்தில் யாகூத் என்ற முத்துக்களிலான சேணமும், லகானும் (கடிவாளம்) இடப்பட்ட தங்கக் குதிரைகள் சுவனவாசிகளில் குறிப்பிட்டவர்களுக்குக் கொடுக்கப்படும். அக்குதிரைகள் மலஜலம் கழிக்காது. அவைகளுக்கு இறக்கைகள் உண்டு. அவைகளின் வேகம் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை உள்ளதாகும். உயர் அந்தஸ்துள்ள சுவனவாசிகள் அவைகளின் மீது அமர்ந்து தாம் விரும்பிய இடங்களுக்குப் பறந்து செல்வார்கள்.
இதனைக் காணும் கீழ் அந்தஸ்த்தில் உள்ள மற்ற சுவனவாசிகள், ‘யா அல்லாஹ்! உனது இந்த நல்லடியார்களுக்கு இத்தகைய உயர் அந்தஸ்து எதனால் கிடைத்தது?’ எனக் கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், ‘அவர்கள் இரவு நேரங்களில் விழித்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நீங்களோ தூங்கிக் கொண்டிருந்தீர்கள். அவர்கள் என் பாதையில் தாராளமாகச் செலவழித்தார்கள். ஆனால், நீங்களோ கருமித்தனம் செய்தீர்கள்’ என்று கூறுவான்.”
— தர்கீப்
- இஷ்ராக் தொழுகை:
சூரியன் உதயமாகி 20 நிமிடங்கள் கழித்து இரண்டு இரண்டு ரகஅத்துகளாக நான்கு ரகஅத்துகள் இரண்டு ஸலாமுடன் தொழ வேண்டும்.
இஷ்ராக் தொழுவதால் ஒப்புக்கொள்ளப்பட்ட நஃபிலான ஹஜ், உம்ரா செய்த நன்மை கிடைக்கும். மேலும் அன்றைய நாளின் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்.
இஷ்ராக் நபில் இரண்டு இரண்டாக நான்கு ரகஅத்கள்.
- லுஹாத் தொழுகை
நண்பகலில் சுமார் பத்திலிருந்து 11.30 மணிக்குள் குறைந்தது நான்கு ரகஅத்கள் தொழுது கொள்ள வேண்டும்.
‘இரண விஸ்தீரணம் லுஹாத் தொழுகை தொழுது வருவதன் மூலம் கிடைக்கும்’ என ஷகீகுல் பல்கீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
- அவ்வாபீன் தொழுகை
மஃரிபு தொழுகைக்குப்பின், (பின் சுன்னத் தொழுகைக்குப் பிறகு) இரண்டு இரண்டாக ஆறு ரகஅத்கள் தொழுவது.
- தஸ்பீஹ் நபில் தொழுகை
நான்கு ரகஅத்களை முந்நூறு தடவை, மூன்றாம் கலிமா ஓதித் தொழுவது (வாரம் ஒருமுறையாவது).
- குர்ஆன் திலாவத்
நபி(ஸல்) அவர் கூறியுள்ளார்கள்:
“நோன்பும், குர்ஆனும் ஓர் அடியானுக்காக சிபாரிசு செய்யும். ‘இரட்சகனே! சாப்பிடுவது, குடிப்பதை விட்டும் நான் இம்மனிதனைத் தடுத்து வைத்திருந்தேன். எனவே, இவன் விஷயத்தில் என்னுடைய சிபாரிசை நீ ஏற்றுக் கொள்வாயாக!’ என்று நோன்பு கூறும். குர்ஆனாகிறது, ‘இரட்சகனே! இரவில் தூங்குவதை விட்டும் நான் இவனைத் தடுத்திருந்தேன். ஆகையால், இவன் விஷயத்தில் என்னுடைய சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக!’ என்று கூறும். அவ்விரண்டின் சிபாரிசுகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.”
— அஹ்மத்
வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் அந்த மாதம் முடியும் வரை, நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்.
இம்மாதத்தில் அதிகமாகக் குர்ஆன் (திலாவத்) ஓதவேண்டும். குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதமாகும். அது மனித குலத்தின் நல்வாழ்விற்காக அருளப்பட்டது. எனவே, குர்ஆனை மன லயிப்புடன் ஓதவேண்டும்.
- திக்ரு (இறை தியானம்)
எந்நேரமும் அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ரு செய்து வரவேண்டும். அது மனிதனை விட்டும் ஷைத்தானைத் தூரமாக்கி, ரஹ்மானுக்கு நெருக்கமாக்கி வைக்கும்.
மூன்றாம் கலிமா
سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلا قُوَّةَ إلا بالله العلي العظيم (சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அளிய்யில் அழீம்.)
இஸ்திஃபார்
اسْتَغْفِرُ اللهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَاتُوبُ إِلَيْهِ
(அஸ்தஃபிருல்லா ஹல்லதீ லாஇலாஹ இல்லாஹூவல் ஹய்யுல் கைய்யூம் வஅதூபு இலைஹி.)
இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சிக் கொண்டே இருங்கள்! தினசரி காலையிலும், மாலையிலும் மனிதனிடம் பாவங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதனை மனிதன் சில சமயம் உணராமல் இருக்கலாம்!
பெரும் பாவம் நிகழ்ந்தால்தான் பாவமன்னிப்புக் கோர வேண்டும் என்று கருதிவிடக் கூடாது. மனித வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கவனக்குறைவால் பாவங்கள் நிகழ்வதால், மனிதன் எப்போதும் பாவமன்னிப்பின்பால் தேவையுடையவனாகவே இருக்கின்றான்.
நபி (ஸல்) அவர்கள் தினசரி எழுபது முறை, சில சமயம் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிய வண்ணம் இருந்தார்கள்.
— ஸஹீஹ் புகாரி
ஸலவாத்
صَلَّى اللهُ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
(ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
“தம்முடைய நன்மைகள் பெரிய தராசில் நிறுக்கப்பட வேண்டுமென விரும்புபவர் என்மீது அதிகமாக ஸலவாத் சொல்லிக் கொள்ளட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், ஸலவாத் அதிகமதிகம் ஓதுவதால் துன்பத்தில் சிக்கியவரின் துன்பம் நீங்கும்.
மேற்கண்ட ஒவ்வொன்றையும் காலை, மாலை குறைந்த பட்சம் நூறுமுறையாவது ஓதிக்கொள்ள வேண்டும்.
“குர்ஆன் ஷரீப் அதிகமாக ஓதுவதும், திக்ரு செய்வதும் என நிறைந்திருக்கும் நோன்பானது, நூர் (ஒளி) கிடைக்கக் காரணமாகும்” என அல்லாமா சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
- துஆ
இம் மாதத்தில் துஆ (பிரார்த்தனை) ஏற்றுக்கொள்ளப்பட சிறந்த மாதமாக இருக்கிறது. துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதமாக இந்த மாதம் இருக்கிறது. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ரமலானின் ஒவ்வொரு இரவிலும், பகலிலும் ஒரு துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
குறிப்பாக ஸஹர் நேரத்திலும், இفتார் நேரத்திலும் உணவில் அதிக கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு துஆ கேட்பதில் ஈடுபடவேண்டும்.
ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
“ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஒரு வானவர் மனிதர்களை நோக்கி, ‘நன்மையைத் தேடுகிறவர்களே! முன்னேறி வாருங்கள். தீமையைத் தேடுகிறவர்களே! அதனை நிறுத்திக் கொள்ளுங்கள். கண் திறந்து பாருங்கள்!’ எனக் கூறிக்கொண்டே இருக்கிறார். பிறகு, அந்த வானவர், ‘எவரேனும் மன்னிப்பை விரும்புகிறவருண்டா? அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும். யாரேனும் துஆச் செய்பவர்களுண்டா? அவர்களுடைய துஆ ஏற்றுக் கொள்ளப்படும்’ என்று கூறுகிறார்.”
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
“ரமலான் மாதத்தில் அல்லாஹ்விடம் கேட்பவர் நிராசையாகி விடுவதில்லை. ரமலானிலே அல்லாஹுதஆலாவிடம் இறைஞ்சிக் கேட்போருக்கு இல்லை என்று சொல்லப்படுவதில்லை. ஆகவே, தாழ்மையாகவும், தூய்மையான உள்ளத்துடனும் பிரார்த்திக்க வேண்டும்.”
- தராவீஹ் தொழுகை
ஒவ்வொரு நாள் இரவும் இருபது ரகஅத்கள் ஜமாஅத்துடன் தராவீஹ் தொழுது கொள்ளவேண்டும்.
- நாவைப் பேணுதல்
நாவைப் பாவப்பேச்சுக்களிலிருந்து பாதுகாப்பதும் ஒரு இபாதத்தே!
மேற்கண்ட இபாதத்களைச் சிரமப்பட்டு நிறைவேற்றிவிட்டு நாவைப் பேணவில்லை என்றால், அது நன்மைகளை இழக்கச் செய்துவிடும். மவுனமாக இருப்பதும் நன்மைக்குரிய செயலே!
பொய், புறம், கோள், தேவையற்ற பேச்சுக்களை முற்றிலுமாகத் தவிர்த்தால் நோன்பின் நன்மைகளைப் பலமடங்கு பெறமுடியும்.
நற்செயல்களைக் கொண்டு ரமலான் மாதத்தை அலங்கரிப்போம்!
