‘அرஃபா தினம்’ என்பது ஹிஜ்ரி ஆண்டின் பன்னிரெண்டாம் மாதமான துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் ஆகும். இது வரலாற்று சிறப்பு மிக்க தினம் ஆகும்.
அன்றைய தினத்தில் தான் முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்களை அரஃபா மைதானத்தில் வைத்து அல்லாஹ் மன்னித்தான். அன்றைய தினத்தில் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்தினான்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களது மார்க்கமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்.”
– சூரா அல்மாயிதா: 3
என்ற இறுதி வசனத்தை இறக்கினான்.
இந்த வசனம் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜின் போது, துல்ஹஜ் பிறை 9-ம் நாளான அரஃபா தினத்தின் அன்று இறங்கியது.
இந்த வசனம் குறித்து அப்போதைய யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறும்போது, ‘நீங்கள் ஓர் இறை வசனத்தை ஓதுகிறீர்கள்; அந்த வசனம் மட்டும் எங்களிடையே இறங்கியிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்’ என்றார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அது இறங்கிய வேளையில் அரஃபா (துல்ஹஜ் 9-ம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்’ என்று கூறினார்கள்.
அரஃபா தான் ‘ஹஜ்’ என்பதாகும். ஹஜ் என்பதே துல்ஹஜ் பிறை 9-ல் அரஃபாவில் தங்குவது தான். துல்ஹஜ் பத்தாம் இரவில் அதிகாலைக்கு முன்பு ஒருவர் அரஃபாவுக்கு வந்துவிட்டால், அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
– திர்மிதி
அரஃபா தினத்தில் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நஃபிலான நோன்பு நோற்பது சிறப்பான வழிபாடாகும். ‘அரஃபா நாளின் நோன்பை பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஒரு நோன்பு நோற்பது சுன்னத் ஆகும்.
“இந்த அரஃபாவுடைய நபிலான நோன்பை அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்க நிய்யத் செய்து கொண்டேன்” என்பது நோன்பின் நிய்யத்தாகும். அரஃபா நாள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை அளிக்கும் மிக முக்கியமான நாளாகும். அரஃபா நாளில் நோன்பு நோற்று பாவமன்னிப்புத் தேடுதல் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும்.
“நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள்” என ஹஜ்ரத் உஸாமா இப்னு ஜைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
