அல்லாஹ் குர்ஆனில்,
وَأَنْفِقُوا مِنْ تَارَزَ قُنَكُم مِّنْ قَبْلِ أَنْ يَأْتِي أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٌ فَاصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّلِحِينَ
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த செல்வத்திலிருந்து தர்மம் செய்து கொள்ளுங்கள். (அவ்வாறு செய்யாமல் மரணிக்கும் சமயம்). ‘என் இறைவனே! என் தவணையை எனக்குச் சிறிது பிற்படுத்தக் கூடாதா? நானும் தான தர்மம் செய்து நல்லோர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே’ என்று கூறுவான்.
— சூரா அல் முனாபிக்கூன் : 10
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஒருவருக்கு மரணம் சமீபித்து, அவர் ஜகாத் கொடுக்கும் வசதி இருந்தும் ஜகாத் கொடுக்காமலிருந்தால், அவர் திரும்ப உலகிற்கு வர ஆசைப்படுவார். ஏனெனில், தான தர்மங்களை நிறைவேற்ற வேண்டியே! ஆனால், எவருடைய மரண நேரமும் பிற்படுத்தப்படாது.
— துர்ருல் மன்தூர்
அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடப்பதில் குறைபாடு ஏற்பட காரணம் சொத்து செல்வத்தில் மூழ்கியிருப்பது ஆகும். எனினும் ஒரு விஷயம் நிச்சயமானதும், முடிவானதுமாகும். அதுதான் மரணம். மரணம் எப்போது வரும் என்று தெரியாது. அந்நேரத்தில் வருத்தம் கொள்வதைத் தவிர தர்மம் செய்ய இயலாது.
எனவே, ஜகாத் கடமையான நிலையில் உள்ளவர்கள் அதைத் தள்ளிப்போடக் கூடாது. ரமலான் மாதத்தில் மட்டுமே ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. அதுவரை நம் வாழ்வு இருக்குமா? எனத் தெரியாது. ஆகவே, ஜகாத்தை தாமதமின்றி உடனே நிறைவேற்றிவிட வேண்டும்.
ஜகாத் கொடுப்பதை தாமதம் செய்வதால் தன் மீது வியாதியோ அல்லது செல்வத்தின் மீது ஆபத்தோ ஏற்பட்டுவிடக் கூடிய சாத்தியம் உண்டு.
எவர் ஜகாத்தை உடனடியாக நிறைவேற்றாமல் தாமதமாக நிறைவேற்றுவாரோ அது தனிக் குற்றமாகக் கருதப்படும் என இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
ஜகாத்தும் ஸதகாவும் வேறுவேறு என அறிந்து கொள்ள வேண்டும்.
சில செல்வந்தர்கள் அவ்வப்போது யாருக்காவது சிறிய தர்மம் செய்துவிட்டு ஜகாத் நிறைவேறிவிட்டதாக நினைக்கின்றனர். அவ்வாறல்ல, தம் சொத்து செல்வத்தைக் கணக்கிட்டு ஆலிம் பெருமக்களை அணுகி ஜகாத்தின் சட்டம் தெரிந்து அதன்படி நிறைவேற்ற வேண்டும்.
ஸதகா என்பது உபரியான தர்மமாகும். ஒருவர் நபில் தொழுதுவிட்டு பர்ளை தொழாதது போல், ஸதகாவை நிறைவேற்றி, ஜகாத்தை நிறைவேற்றாதது போலாகும்.
குர்ஆனில் எங்கெங்கு தொழுகையைப் பற்றி அல்லாஹ் கட்டளையிடுகிறானோ அதோடு சேர்த்து ஜகாத்தையும் குறிப்பிடுகிறான். வஅகீமுஸ்ஸலாத, வ ஆதுஜ்ஜகாத்த என்ற வாசகம் நாம் குர்ஆனில் அநேக இடங்களில் காணலாம்.
தொழுகை எவ்வளவு ஒரு முஃமினுக்கு முக்கியமோ அதுபோல் ஜகாத்தும் மிக முக்கியமான கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அமீருல் முஃமினீன் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹூதஆலா தொழுகையும், ஜகாத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை. ஆகவே, ஜகாத் நிறைவேற்றும் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் குர்ஆனில்,
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا اشْهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُم بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا يَخِلُوا بِهِ يَوْمَ الْقِيمَةِ
அல்லாஹ் தனது அருளைக் கொண்டு தங்களுக்குக் கொடுத்திருக்கும் செல்வத்தில் யார் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அது அவர்களுக்கு நல்லது என்று திண்ணமாக எண்ண வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்தவற்றையெல்லாம் கியாமத்நாளில் அவர்களின் கழுத்தில் அரிகண்டமாக (நெருப்பு வளையம்) போடப்படும்.
— சூரா ஆல இம்ரான் : 180
எந்த ஒரு மனிதன் தங்கமோ வெள்ளியோ வைத்திருந்து, அவன் அதன் கடமையான ஜகாத்தை நிறைவேற்றவில்லையானால், கியாமத்நாளன்று அந்தத் தங்கம் வெள்ளிகளை நரக நெருப்பில் போடப்பட்டு பழுக்கக் காய்ச்சி பின்னர் அவைகளைக் கொண்டே அம்மனிதனின் விலாவிலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். இன்னும் இதேபோன்று மறுபடியும் மறுபடியும் காய்ச்சப்பட்டு கியாமத்நாள் முடியும் வரை சூடு போடப்பட்டு, பிறகு அம்மனிதன் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றிடுவான் என ஹதீஸில் வந்துள்ளது.
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் ஒருமுறை நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்களின் சமூகத்தில் இருந்தேன். அவர்களுக்கு உதவித்தொகை பைத்துல் மாலிலிருந்து வந்தது. ஒரு அடிமைப்பெண் அவர்களிடம் இருந்தாள். அவள் அவற்றிலிருந்து தேவைக்குரிய பொருட்களை வாங்கி வந்தாள். அதற்கு பின்னரும் அவற்றில் ஏழு திர்ஹம் மீதமாகிவிட்டது. உடனே அபூதர் அவர்கள் ‘இவற்றை சில்லறையாக மாற்றிக்கொண்டு வருக! ஏழைகளுக்கு பங்கிட்டு விடலாம்’ என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘அவற்றை தங்களிடமே வைத்துக் கொள்ளவும். ஏதேனும் முக்கியத் தேவை ஏற்படலாம் அல்லது யாரேனும் விருந்தினர் வந்துவிடலாம்’ என்று கூறினேன்.
அதற்கு அபூதர் அவர்கள், ‘எனது அன்பு நேசர் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தீர்க்கமான விஷயத்தை கூறியிருந்தார்கள். அது என்னவெனில் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்காமல் பூட்டி வைக்கப்படும் பொன்னும், வெள்ளியும் அதன் உரிமையாளர் மீது நெருப்புக் கங்குகளாகும் என்பதாம்’ எனக் கூறினார்கள்.
— தர்கீப்
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆதமின் மகனே! உனது தேவைக்குப் போக மிஞ்சிய பொருளைத் தர்மமாக கொடுத்துவிடு. அதுவே உனக்கு மிக நல்லதாகும். நீ அதனை கொடுக்காமல் தேக்கி தடுத்து வைப்பாயானால், அது உனக்குத் தீங்கே! ஆனால், தேவையின் நிமித்தம் சிறிது சேர்த்துவைப்பது பழிப்பில்லை.
— மிஷ்காத்
அல்லாஹ் குர்ஆனில்,
وَيَسْأَلُونَكَ مَا ذَا يُنْفِقُونَ هُ قُلِ الْعَفْوَ
(நபியே!) மக்கள் எதை (தர்மமாக) செலவழிப்பது? என உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர், தேவைக்கு வேண்டியது போக எனக் கூறுவீராக!.
— சூரா அல்பகரா : 219
நபி(ஸல்) அவர்களின் இறுதி நேரத்தில் ஏழு பொற்காசுகளை தங்கள் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் கொடுத்து அவற்றை நபித்தோழர் அலி (ரலி) அவர்களிடம் சேர்க்கச் சொன்னார்கள்.
இதைக் கூறி முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் மயக்கமாகி விட்டார்கள். அதன் காரணமாக ஆயிஷா(ரலி) அவர்கள் அதிலேயே கவனமாக இருந்து விட்டார்கள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு மயக்கம் தெளிந்ததும் திரும்பவும் அதனையே நினைவூட்டினார்கள். மீண்டும் மயக்கமுற்றார்கள். இவ்வாறு அடிக்கடி மயக்கமுண்டாகிக் கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் திரும்பத்திரும்ப நினைவூட்டுவதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் அப்பொற்காசுகளை ஒருவர் மூலம் ஹஜ்ரத் அலீ(ரலி) அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள்.
ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களும் அவற்றை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
இந்நிகழ்ச்சி ஒரு பகலில் நடைபெற்றது.
அன்று மாலை, அதாவது திங்கள் இரவுதான் நபி (ஸல்) அவர்களின் கடைசி இரவாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. பிரிவின் நேரம் சமீபித்துக் கொண்டிருக்கிறது.
அன்றைய இரவு ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டில் விளக்கேற்ற எண்ணெயும் இருக்கவில்லை. எனவே விளக்கு பற்ற வைக்க சிறிது எண்ணெய் கடன் வாங்கி வரும்படி பக்கத்து வீட்டிற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் ஆள் அனுப்பினார்கள்.
இந்த நிலையில் தான் நபி(ஸல்) அவர்களின் தர்மசிந்தனை இருந்தது என்பது நாம் உணர வேண்டியது.
ஒரு நபித்தோழர், ‘யா ரசூலல்லாஹ்! எந்தத் தர்மம் நன்மையில் சிறந்தது?’ எனக் கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீர் உடல் ஆரோக்கியத்துடன் இருந்து பொருளின் மீது ஆசை உள்ளவராகவும், ஏழை ஆகிவிடுவோமோ என்ற அச்சம் உடையவராகவும், செல்வந்தனாகிவிட வேண்டும் என்ற ஆவல் உடையவராகவும் இருக்கும் நிலையில் செய்யும் தர்மமே சிறந்ததாகும்’ எனக் கூறினார்கள்.
ஸதகா செய்வதன் மூலம் வியாதியஸ்தர்களுக்கு சிகிச்சை அளியுங்கள். ஏனெனில், ஸதகா அவமானங்களையும், நோய்களையும் அகற்றி விடுகிறது. மேலும் நன்மைகளை பெருக்கித் தருகிறது. இன்னும் வயதைக் கூட்டித் தருகிறது. ஸதகாச் செய்வது எழுபது துன்பங்களைத் தடுத்து நிறுத்துகிறது என ஒரு ஹதீஸில் வந்துள்ளது.
ஹாபிஸ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஸதகா மரணசமயம் ஷைத்தானின் ஊசலாட்டத்தை விட்டும் பாதுகாப்பளிக்கிறது. வியாதியின் கடுமையின் காரணமாக அல்லது சக்கராத்தில் ஏற்படும் சிரமத்தின் காரணமாக நன்றிகெட்ட சொற்களை சொல்லி விடாதிருக்க பாதுகாப்பளிக்கிறது. மேலும் திடீர் மரணத்தைத் தடுக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
நான் சத்தியமிட்டு மூன்று விஷயங்களைக் கூறுகிறேன். நீங்கள் அதனை நல்லவிதமாக மனதில் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலாவதாக, எவருடைய செல்வமும் ஸதகா செய்வதால் குறைந்துவிடாது. இரண்டாவதாக, எந்த மனிதர் மீது அநியாயம் செய்யப்பட அதனை அவர் சகித்துப் பொறுத்துக் கொண்டால், அல்லாஹூதஆலா அந்த பொறுமையின் காரணமாக அவருடைய கண்ணியத்தை உயர்த்துகிறான். மூன்றாவதாக, எவர் பிறரிடம் யாசிக்கும் கதவைத் திறப்பாரோ, அல்லாஹுதஆலா அவர்மீது வறுமையின் கதவைத் திறக்கிறான்.
ஏழைகளை நன்றாக அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு உதவி உபகாரம் செய்து வாருங்கள். அவர்களிடம் பெரும் செல்வம் இருக்கிறது என நபி(ஸல்) அவர்கள் கூற, ‘யா ரசூலல்லாஹ்! அந்த செல்வம் என்ன?’ என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மறுமைநாளன்று ஏழையை நோக்கி, எவரேனும் உனக்குச் சிறிது உணவளித்திருந்தாலும் அல்லது தண்ணீர் புகட்டியிருந்தாலும் அல்லது ஆடை அணிவித்திருந்தாலும் அவருடைய கையை பிடித்து சுவர்க்கத்தில் சேர்த்துவிடுவீராக!’ என்று கூறப்படும்.
அல்லாஹ் குர்ஆனில்,
وَالَّذِينَ يَكْذِرُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللهِ فَبَشِّرُهُمْ بِعَذَابٍ أَلِيمٍ
எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!
— சூரா அத்தவ்பா : 34
செல்வந்தர்களின் மீது அவர்களுடைய செல்வத்தில் எதைக் கடமையாக விதித்துள்ளானோ அதுவே ஏழைகளுக்கு போதுமானதாக ஆகிவிடும். ஏழைகள் உணவின்றி, உடையின்றி சிரமப்படுவது அவர்களிலுள்ள செல்வந்தர்கள் தமது கடமையை முழுமையாக நிறைவேற்றாததினால்தான். கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்! அல்லாஹுதஆலா அச்செல்வந்தர்களிடம் கேள்விகணக்கை கடினமாக விசாரிப்பான். மேலும் கடும் தண்டனையும் அளிப்பான் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஜகாத் கொடுக்க மறுக்கும் சமுதாயத்தை அல்லாஹுதஆலா பஞ்சத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை.
— தப்ரானீ
இக்காலத்தில் பூமியில் புதைந்துபோதல், முகங்கள் உருமாறி போதல், நில அதிர்வுகள் உண்டாவது, திடீர் மரணம், மழை பொய்த்து விடுவது, பஞ்சம், உள்ளங்களில் திடுக்கம் சூழ்ந்து கொள்ளல், புதுபுது வியாதிகள், எதிரிகள் மிகைத்துவிடுதல், வெள்ளப்பெருக்கு, நல்லோர்கள் துஆ செய்தாலும் ஒப்புக்கொள்ளப் படாமல் போதல் ஆகிய இவையனைத்தும் மனிதர்களின் பாவத்தாலும், கடமைகளை நிறைவேற்றாததாலும் ஏற்படும் துன்பங்களாகும்.
நபித்தோழர் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை ஜனங்களை நோக்கி, ‘ஏ முஹாஜிரீங்களே! ஐந்து விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் நீங்கள் ஈடுபடுவதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவ்வாறு நீங்கள் ஈடுபட்டுவிட்டால் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்வீர்கள்.
- முதலாவது, எந்த சமுதாயத்தில் விபச்சாரமும், மானக்கேடான செயல்களும் நடைபெறுமோ அப்போது அவர்களுக்குள் முன்னர் எப்போதும் கேள்விப்படாத புதிய புதிய வியாதிகள் உற்பத்தியாகும்.
- இரண்டாவதாக, எந்த மக்கள் அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்வார்களோ அவர்களின் மீது பஞ்சம் பசி, கஷ்ட ஜீவனம் இன்னும் ஆள்வோரின் கொடுமை இவையெல்லாம் சாட்டப்படும்.
- மூன்றாவதாக, எந்த சமுதாயம் ஜகாத் கொடுப்பதைத் தடுத்துக் கொள்வார்களோ அவர்கள் மீது மழை தடுக்கப்பட்டுப் போகும். கால்நடை மட்டும் இல்லையானால் ஒரு சொட்டு மழைகூட பெய்யாது.
- நான்காவதாக, எம்மக்கள் வாக்குறுதிக்கு மாறுபாடு செய்வார்களோ அவர்கள் மீது பிற சமுதாயத்தார் சாட்டப்படுவார்கள். அவர்கள் இவர்களுடைய சொத்து செல்வங்களை கொள்ளை அடிப்பார்கள்.
- இறுதியாக, எந்த மக்கள் அல்லாஹ்வின் சட்டங்களுக்கு மாற்றமான சட்டங்களை பிறப்பிப்பார்களோ அவர்களுக்கிடையில் உள்நாட்டு யுத்தமும் போரும் மூண்டுவிடும்’.
சுப்ஹானல்லாஹ்! நபி(ஸல்) அவர்கள் எச்சரித்ததைப் போன்றே இக்காலத்தில் அனைத்தும் நடைபெறுகிறது.
இக்கால மக்களின் அதிகரித்த பொருளாசை இஸ்லாத்தை விட்டு வழிதவறச் செய்துவிட்டன.
ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுவது, உபகாரம் புரிவது, திக்கற்றோருக்கு உதவி செய்வது, வறியோருக்கு உதவி செய்வது என தர்மச் செயல்கள் குறைந்து கொண்டே போகின்றன. இக்காலத்தில் யாருக்கு என்ன உதவி செய்தாலும் அதற்கு பகரமாக கமிஷன் அன்பளிப்பு என்ற பெயரில் பெற்றுக்கொள்ளும் இரக்கமற்ற செயல்கள்தான் நடக்கின்றன. அதன் காரணமாக, செல்வந்தர்களிடம் செல்வம் இருந்தாலும் பரக்கத் இன்மையால் வறுமையில் இருக்கிறார்கள். வறியவர்கள் கர்வத்தில் செல்வந்தர்களைப் போல் வாழ முயல்கிறார்கள்.
தர்மச் செயல் என்பது பணம் கொடுத்து உதவி செய்வது மட்டுமல்ல. பிறருக்குத் தீங்கு நாடாமலிருப்பதும் தர்மமே! பிறரது மனதை வருந்தச் செய்யாமல் இருப்பதும் தர்மமே!
இன்னும், பாதையில் இடையூறு தரும் பொருட்களை அப்புறப்படுத்துவது; திக்கற்றவர்களுக்கு உதவி செய்தல்; துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதலான வார்த்தை கூறுவது; மருத்துவ உதவி செய்தல்; நீர்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பது; நிழல் தரும் மரங்களை அமைப்பது ஆகிய அனைத்துமே தர்மச் செயல்கள்தான்.
செய்த உதவிகளை சொல்லிக்காட்டுவது, உதவி செய்துவிட்டு அவரிடமே பலனை எதிர்பார்த்தல் போன்றவை இஸ்லாத்திற்கு எதிரான குணங்களாகும்.
இஸ்லாமிய சட்டங்கள் தொழுகை, ஹஜ் போன்ற வெளிரங்கமான செயல்களுக்கு மட்டுமல்ல; மனம் சம்பந்தப்பட்ட ஒழுக்கங்களையும், குணம் சம்பந்தப்பட்ட ஒழுக்கங்களையும் போதனை செய்துள்ளது. பிறருக்குச் செய்த உதவிகளை வெளிப்படுத்தாமல் இருப்பது தர்மத்தின் அலங்காரமாகும்.
அல்லாஹ் குர்ஆனில்,
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاليْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ
யார் தங்கள் பொருள்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தான தர்மங்களில்) செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. மேலும் (கியாமத்நாள் அன்று) அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
— சூரா அல்பகரா 274
தான தர்மங்கள் அல்லாஹ்வின் பொருத்தம் பெற வேண்டி செலவழிக்கப்பட வேண்டுமே தவிர, பிறர் தன்னை புகழட்டும் என்று செய்வாராகில், அதனால், நன்மை கிடைப்பதற்கு பதில் மறுமையில் கடும் தண்டனைதான் கிடைக்கும். ஏனெனில், ரியா எனும் முகஸ்துதிக்காக ஒரு நற்செயல் செய்யப்பட்டால் அது சிறு வகையான ஷிர்க் எனும் பாவத்தில் புகுத்திவிடும்.
எனவே, இக்லாஸ் எனும் மனத்தூய்மையோடு செலவழிக்கப்பட வேண்டும். இன்னும், ஒருவருக்கு உதவி செய்துவிட்டு அதைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது அல்லாஹ்வின் கோபத்தை அடையக் காரணமாகிவிடும்.
தர்மத்தின் பொருளானது ஏழைக்கும், அதன் நிய்யத் அல்லாஹ்வை நோக்கியதாக இருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஒவ்வொரு நாள் காலையிலும் இரு வானவர்கள் இறங்கி வந்து, ‘யா அல்லாஹ்! தர்மம் செய்பவருக்கு பரக்கத்தைக் கொடுப்பாயாக!’ என்று ஒருவரும், ‘யா அல்லாஹ்! தர்மம் செய்யாதவருக்கு நஷ்டத்தைக் கொடுப்பாயாக!’ என்று மற்றொருவரும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
— மிஷ்காத்
தர்மமும், பிரார்த்தனையும் தவிர வேறெதுவும் விதியில் உள்ள துன்பத்தை நீக்கிவைக்காது. ஆகவே, அதனைச் செம்மையாக நிறைவேற்ற வேண்டும்.
தர்மம் செய்வோம்! அல்லாஹ்விடம் பலன் பெறுவோம்!!
