ஏக இறைவனாகிய அல்லாஹுதஆலா மனித குலத்திற்கு நல்வழி காட்ட ஒரு இறைத்தூதரை அனுப்பியதோடு அவர்கள் மூலமாக வேத ஞானத்தையும் அனுப்பி வைத்தான்.
அல்லாஹ்வின் கட்டளைகள் வஹி எனும் வேத அறிவிப்பாக நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, வானவர் ஜிப்ரீல் மூலமாக வந்து அடையும். அவ்வப்போது அல்லாஹ் இறக்கியருளும் வஹியை நபி(ஸல்) அவர்கள் உடனே எழுதி வைத்துக் கொள்ளுமாறு தம் தோழர்களுக்கு கட்டளையிடுவார்கள்.
இவ்வாறு இறைச்செய்தியை எழுதுவதற்காக நபி(ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலித் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஜைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் ஸாபித் பின் கைஸ் (ரலி) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தோல் துண்டுகளிலும், மரப் பட்டைகளிலும், மிருக எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் வசனங்கள் எழுதி வைத்து பாதுகாக்கப் பட்டது. இவ்வாறு எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டவைகள் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் வைத்து பாதுகாக்கப்பட்டிருந்தது.
அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் முழு குர்ஆனையும் மனனம் செய்திருந்த ஜைத் பின் ஸாபித் (ரலி) பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றினார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் அமீருல் முஃமினீனாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம். அப்போது ஹிஜ்ரி பன்னிரெண்டாவது ஆண்டு இது நிறைவுற்றது. அப்போது யமாமாவில் நடைபெற்ற போரில் குர்ஆன் மனனம் செய்திருந்த பல தோழர்கள் ஷஹீதாக்கப்பட்டு விட்டனர். அவர்களில் குறிப்பாக, ‘குர்ஆனை நாம் யாரிடமிருந்து கற்கவேண்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியிருந்தார்களோ அந்த தோழர்களில் ஒருவரான சாலிம் மவ்லா அபீ ஹுதைஃபாவும் இருந்தார்கள். ஆகவே, குர்ஆன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அதை ஒரு பிரதியாக ஒன்று சேர்க்க வேண்டும் என அபூபக்கர் (ரலி) அவர்கள் நாடினார்கள்.
நபித்தோழர் ஜைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : யமாமா போரில் வீரர்கள் கொல்லப்பட்டபோது அபூபக்கர்(ரலி) அவர்கள் என்னை அழைத்து வரும்படி ஆளனுப்பினார்கள். நான் சென்ற போது அங்கே அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அபோது அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
உமர் அவர்கள் என்னிடம் வந்து, ‘இந்த யமாமா போரில் குர்ஆன் மனனம் செய்திருந்த அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டு விட்டனர். அதனால் குர்ஆனில் பெரும்பகுதி அழிந்து போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே, (கலீஃபாவான) நீங்கள் குர்ஆனை ஒரு பிரதியில் ஒன்று திரட்டுமாறு ஆணையிட வேண்டுமென கருதுகிறேன்’ என்று கூறினார்கள்.
அதற்கு நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்ய முடியும்?’ என்று உமர் அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு உமர் அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மையான பணிதான்!’ என்று கூறினார்கள்.
இது விஷயமாக தொடர்ந்து உமர் (ரலி) அவர்கள் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். முடிவில், உமர் (ரலி) அவர்கள் மனதை அல்லாஹ் எதற்காக விரிவாக்கினானோ அதற்காக என் மனதையும் அவன் விரிவாக்கினான்; எதை உமர் (ரலி) அவர்கள் நன்மையென கருதினார்களோ, அதையே நானும் பொருத்தமானதாகக் கண்டேன் என்று ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறிவிட்டு, பிறகு என்னிடம், ‘நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்பட்டதில்லை; நீங்கள் இறைத்தூதர் அவர்களுக்காக வஹியை எழுதக்கூடியவராக இருந்தீர்கள்; எனவே, (தனித்தனி பிரதிகளில் பல்வேறு நபித்தோழர்களிடம் இருக்கும்) குர்ஆன் வசனங்களைத் தேடி (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்’ என்றார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென என்னை அவர்கள் பணித்திருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், ‘இறைத்தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள்?’ என்று கேட்டேன்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மையான பணிதான்’ என்றார்கள். இதையே என்னிடம் அன்னார் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் ஆகியோரின் மனதை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனதையும் அல்லாஹ் விரிவாக்கினான். அவர்கள் இருவரும் கருதியதையே நானும் பொருத்தமானதாகக் கருதினேன்.
எனவே, நான் மக்களின் கரங்களிலிருந்து குர்ஆன் வசனங்களைத் தேடினேன். அகலமான பேரீச்ச மட்டைகள், துண்டுத் தோல்கள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆன் வசனங்களைத் திரட்டினேன். அப்போது நான் அத்தவ்பா எனும் (9-வது) அத்தியாத்தின் இறுதி வசனம் அபூ குஸைமா அவர்களிடம் இருக்கக் கண்டேன். அதை நான் அதற்குரிய அத்தியாத்தில் சேர்த்தேன். (09: 128-வது) வசனமே அந்த வசனமாகும்.
என் மூலமாக திரட்டி தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதி கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை அவர்களிடம் இருந்து வந்தது. பிறகு கலீஃபா உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை அவர்களிடம் அந்தப் பிரதி இருந்து வந்தது. பிறகு நபியவர்களின் துணைவியாரும் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் மகளுமான ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்து வந்தது.
ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்த இந்த காரியத்தை முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். மேலும், இந்தக் காரியம் அபூபக்ர் (ரலி) அவர்களின் சிறப்பான செயல்களில் ஒன்றாகும்.
இது பற்றி ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் கூறினார்கள் :
மக்களில் அதிகம் நன்மை பெறக்கூடியவர்கள் அபூபக்ர் அவர்கள்தான். அபூபக்கரின் மீது அல்லாஹ்வின் ரஹ்மத் கருணை நிலவட்டும். அவர்தான் அல்லாஹ்வுடைய வேதத்தை முதலாவதாக ஒன்று சேர்த்தார். இப்போது நமது கையில் உள்ள குர்ஆன் பிரதியே அவர்கள் தொகுத்ததின் பலன்! அல்லாஹ் அவர்களுக்கு உயர் அந்தஸ்த்துகளை அளிப்பானாக! ஆமீன்!!
