அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வம்சாவழியைச் சார்ந்த ஹாரூன் ரஷீத் பாதுஷா அப்பாஸிய கிலாபத்தில் ஈராக்கின் கலீபாவாக இருந்தார்கள்.
கலீபா ஹாரூன் ரஷீத் பாதுஷா மக்காவுக்கு ஹஜ்ஜுக்காகச் சென்றிருந்த சமயத்தில், தம்முடைய அமைச்சர் அபுல் ஃபஸல் அவர்களிடம், தன் மனம் இறைநேசப் பெரியவர்களைச் சந்திக்க நாடுவதாக தெரிவித்தார்.
அபுல் ஃபஸல் மக்காவில் வசித்து வந்த அப்துர் ரஸ்ஸாக் ஸன்ஆனி என்ற இறைநேசரிடம் கலீபா அவர்களை அழைத்துச் சென்றார். கலீபா ஹாரூன் ரஷீத் அவர்கள் அப்பெரியவரிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு, ‘தங்களுக்கு ஏதாவது கடன் இருந்தால் கூறுங்கள்; அதனை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று கூறினார்கள். அதைக் கேட்டதும் அப்பெரியயார் தமக்குள்ள கடன்களைப் பற்றிய விவரத்தைக் கூறினார்.
கலீபா அவர்களும் ஒரு பணமுடிப்பை அவருக்கு வழங்கிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்கள்.
பின்னர் பாதுஷா அவர்கள் தம் அமைச்சர் அபுல் ஃபஸலிடம், ‘இவரைவிடச் சிறந்த ஒரு இறைநேசரைச் சந்திக்க வேண்டும்’ என என் மனம் விரும்புகிறது என்று கூறினார்.
அமைச்சர் அபுல் ஃபஸல் அவர்கள், கலீபா ஹாரூன் ரஷீத் அவர்களை ஸுஃப்யான் இப்னு உயைனா என்பவரிடம் அழைத்துச் சென்று அவரின் வீட்டுத் கதவைத் தட்டினார்கள். வீட்டிலிருந்து ‘யாரது?’ எனக் கேட்கப்பட, அதற்கு அபுல் ஃபஸல் அவர்கள், கலீபா ஹாரூன் ரஷீத் அவர்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
உடனே ஸுஃப்யான் இப்னு உயைனா வீட்டின் கதவைத் திறந்து கலீபா அவர்களுக்கு ஸலாம் உரைத்து உள்ளே அழைத்துச் சென்றார். மேலும், கலீபா அவர்களிடம், ‘தாங்கள் எதற்காகச் சிரமப்பட்டு என்னைத் தேடி வந்தீர்கள்; தாங்கள் சொல்லியனுப்பியிருந்தால் நான் தங்களைக் காண ஓடோடி வந்திருப்பேனே’ என்றார். உடனே, கலீபா அவர்கள், தம் அமைச்சரிடம், ‘நான் காண வந்தது இதுபோன்ற மனிதர்களை அல்ல’ என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல ஆரம்பித்தார்கள்.
பிறகு அபுல் ஃபஸல் அவர்கள் கலீபா அவர்களை ஃபுலைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டை நெருங்கும்போதே அவ்வீட்டிலிருந்து குர்ஆன் ஓதும் சப்தத்தைக் கலீபா அவர்கள் செவியுற்றார்கள். வீட்டை நெருங்கி கதவைத் தட்டினார்கள்.
‘உள்ளேயிருந்து யாரது?’ என சப்தம் கேட்க, கலீபா அவர்கள் வந்திருப்பதாக அபுல் ஃபஸல் தெரிவித்தார். உடனே வீட்டின் உள்ளிருந்து ‘எனக்கும் கலீபாவுக்கும் என்ன தொடர்பு உள்ளது? நான் இறைவழிபாட்டில் இருக்கிறேன். எனக்கு இடையூறு செய்யாமல் இங்கிருந்து சென்றுவிடுங்கள்’ என்று ஃபுலைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்களின் குரல் கேட்டது. ‘கலீபாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது தங்களின் கடமையல்லவா?’ என்று அபுல் ஃபஸல் மறுமொழி பகர்ந்தார்கள். அதற்கு வீட்டினுள்ளிருந்து, ‘எனக்கு கலீபா அவர்களிடம் எந்த வேலையும் இல்லை, என்னை வீணாகத் துன்புறுத்தாதீர்கள்’ என்று சப்தம் கேட்டது.
அதுகேட்ட அபுல் ஃபஸல் அவர்கள், ‘நீங்களாக அனுமதிக்காமல் போனால், நாங்கள் வன்முறையாக உங்கள் வீட்டினுள் நுழைவோம்’ எனக் கூறினார்கள். அதற்கு, ‘அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், என்னால் உங்களை அனுமதிக்க முடியாது’ என்று ஃபுலைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
கலீபாவும், அபுல் ஃபஸல் அவர்களும் அவ்வீட்டினுள் அனுமதியில்லாமல் நுழைந்தனர். அதுகண்ட ஃபுலைல் இப்னு இயாழ் அவர்கள் வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்து விட்டார்கள். வீடு முழுவதும் இருளாக இருந்தது. இருளில் கலீபா அவர்கள் தம் கைகளைக் கொண்டு தேடி ஃபுலைல் அவர்களின் கையைப் பிடித்து முஸாஃபஹா செய்தவர்களாக இருந்தார்கள்.
அப்போது ஃபுலைல் அவர்கள், ‘ஆ எத்துணை மென்மையான கைகளாக இவை இருக்கின்றன. இவை நரகநெருப்பிலிருந்து விடுதலை பெற வேண்டுமே’ என்று கூறிவிட்டு அழத் தொடங்கினார்கள். இதைக் கேட்ட கலீபா அவர்களும் உர்வு பெற்றவராய்க் கண்ணீர் வடித்தார்கள். கலீபா ஹாரூன் ரஷீத் அவர்கள் ஃபுலைல் (ரஹ்) அவர்களிடம், ‘என் ஆன்மீக நலனுக்காக எனக்கு ஏதேனும் உபதேசம் செய்யுங்கள்’ என்று விண்ணப்பித்தார்கள்.
அதற்கு ஃபுலைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள், ‘முஃமின்களின் தலைவரே! தங்களின் பாட்டனார் ஹழ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஒருநாள் தங்களின் பாட்டனார் அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், என்னை ஒரு கூட்டத்திற்குத் தலைவராக நியமியுங்கள் என்று வேண்டிக் கொண்டபோது, ‘நான் தங்களின் மனோஇச்சைக்குத் தலைவராக நியமித்துள்ளேன். மனோஇச்சையை அடக்கி ஆள்வது ஆயிரம் ஆண்டுகள் மக்களை அடக்கி ஆள்வதை விடவும் மாண்புடையதாகும்.
மக்களை அடக்கி ஆள்வது மறுமையில் துன்பத்தைத் தரும். மனோஇச்சையை அடக்கி ஆள்வது மறுமையில் இன்பத்தைத் தரும் என அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்களே! அதை மறந்துவிட்டீரா ஹாரூன் ரஷீத் அவர்களே!’ என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட கலீபா அவர்கள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்கள். ‘இன்னும் எனக்கு அறிவுரை பகருங்கள்’ என்று கலீபா அவர்கள் வேண்டினார்கள்.
அதுகேட்ட ஃபுலைல் (ரஹ்) அவர்கள், ‘முஃமின்களின் தலைவரே! எனக்கு கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் நினைவு வந்துவிட்டது. அவர்களுக்குக் கலீபா பதவி வழங்கப்பட்டபோது, ஸாலிம் இப்னு அப்துல்லாஹ், ரஜா இப்னு ஹயாத், முஹம்மத் இப்னு கஅப் ஆகிய பெரியோர்களை அழைத்துவரச் செய்து, ‘நான் இச்சோதனையில் அகப்பட்டுள்ளேன்; நான் எவ்வாறு மக்களிடம் நடந்துகொள்வது என்று எனக்கு அறிவுரை வழங்குங்கள்’ என்று வேண்டினார்கள்.
அம்மூவரும் கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம், ‘தாங்கள் முதியவர்களைத் தந்தை போன்றும், இளையவர்களை உடன்பிறந்தார் போன்றும், சிறுவர் சிறுமியரை உம் பிள்ளைகள் போன்றும், வயதான பெண்களை உம் தாயைப் போன்றும், இளம் பெண்களை உம் சகோதரிகளைப் போன்றும் நடப்பீர்களாயின் மறுமையில் இறைவனின் தண்டனைகளுக்கு ஆளாக மாட்டீர்கள் என்று உபதேசித்தார்களே!’ என்று கூறியதும், ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்கள் அழுது கொண்டே, ‘இன்னும் எனக்கு உபதேசம் செய்வீராக!’ என்றார்கள்.
அப்போது ஃபுலைல் இப்னு இயாழ் அவர்கள், ‘இறை நம்பிக்கையாளரின் தலைவரே! முஸ்லிம்களை உங்கள் உறவினர் போலவும், உம் குடும்பத்தார் போலவும் கருதி அவர்களுக்குப் பணிவிடை செய்து வருவீராக! மக்கள் தங்கள் தேவைகளுக்காக உங்களைத் தேடிவருமுன் நீங்கள் மக்களைத் தேடிச் செல்வீராக! என்று உபதேசித்துவிட்டு,
‘கலீபா அவர்களே! இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். தங்களைப் போன்றவர்களுக்கு இரண்டு விசாரணைகள் இறைவனிடம் உள்ளது. ஒன்று தங்களைப் பற்றியது. மற்றொன்று தங்களுடைய ஆட்சியின் கீழ் உள்ளவர்களைப் பற்றியது. அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் இறைவன் தங்களிடம் கேள்வி கேட்பான் என்பதை ஒருநாளும் மறந்துவிடாதீர்கள்.
நீங்கள் வகிக்கும் பதவி மக்களுக்கு நன்மை செய்வதற்காகும். ஓர் இரவில் ஒரு கிழவி தன் ஒட்டிய வயிறுடன் பசியில் உறங்கிவிட்டால் அதற்கு தங்களையே அல்லாஹ் மறுமையில் குற்றம் சாட்டுவான் என்பதை மறந்துவிட வேண்டாம்’ என்று உபதேசித்தார்கள்.
இந்த உபதேசத்தைக் கேட்டதும் கலீபா அவர்கள் அல்லாஹ்வுடைய அச்சத்தால் மயக்கமுற்று விழுந்துவிட்டார்கள். சிறிதுநேரத்திற்குப் பின் உயர்வு பெற்ற கலீபா ஹாரூன் ரஷீத் அவர்கள், ஃபுலைல் (ரஹ்) அவர்களிடம், ‘தங்களுக்கு கடன் எதுவுமிருப்பின் நான் அதனை நிறைவேற்றிட அனுமதி அளியுங்கள்’ என்று வேண்டினார்.
அதற்கு ஃபுலைல் (ரஹ்) அவர்கள், கலீபாவை நோக்கி, ‘ஆம்! என் இறைவனிடம் எனக்குக் கடன் உள்ளது. அவனது அருட்கொடைகளை அனுபவித்து அவனுக்கு நன்றி செலுத்தாத கடனில் இருக்கிறேன். அக்கடனை நானே அடைக்க வேண்டும். எனக்காகத் தாங்கள் அதை நிறைவேற்ற முடியாது’ என்று கூறினார்கள்.
அதற்கு கலீபா அவர்கள், ‘நான் அதனைக் கேட்கவில்லை. தாங்கள் யாருக்கேனும் உலகக்கடன் பட்டிருந்தால் நான் அதனை நிறைவேற்றுகிறேன் என்று கேட்டேன்’ என்று கூறினார்கள்.
அதற்கு ஃபுலைல் அவர்கள், ‘அல்ஹம்துலில்லாஹ்! என்னுடைய தேவைகளுக்கு அல்லாஹ் போதுமானவன்!’ என்று கூறினார்கள். இருந்தும் கலீபா அவர்கள் ஒரு பணமுடிப்பை ஃபுலைல் (ரஹ்) அவர்களுக்கு முன்பாக வைத்து, ‘இது மக்களின் பணமல்ல; என்னுடைய சொந்த உழைப்பில் ஈட்டிய ஹலாலான பொருள். இதனைத் தாங்கள் விரும்பியவாறு செலவழித்துக் கொள்ளலாம். இது தங்களுக்காக என்னுடைய அன்பளிப்பு’ என்று கூறினார்கள்.
உடனே கோபமடைந்த ஃபுலைல் (ரஹ்) அவர்கள், ‘கலீபா அவர்களே! நான் சற்றுமுன் தங்களுக்குக் கூறிய அறிவுரைகளையெல்லாம் வீணாக்கிவிட்டீர்களே! நான் தங்களை பாவமீட்சியின் பக்கம் அழைக்க, தாங்களோ என்னை அழிவின்பால் அழைக்கிறீர்களே! எந்தப் பொருள் இல்லாததால் நான் அல்லாஹ்வை நெருங்கியிருக்கிறேனோ, அந்தப் பொருளை எனக்குச் சோதனையாக ஆக்க வேண்டாம். இது யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களிடம் தாங்களே ஒப்படைத்துவிடுங்கள்’ என்று கூறி ஃபுலைல் அவர்கள் அதனை வாங்க மறுத்து விட்டார்கள்.
வீட்டை விட்டு வெளியே வந்த கலீபா அவர்கள் தம் அமைச்சர் அபுல் ஃபஸலிடம், ‘நான் யாரைத் தேடினேனோ அத்தகைய மனிதர் இவர்தான். இவர் தன் சொற்களால் என்னை உயிர்ப்பித்துவிட்டார். இத்தகையவர்களே உண்மையான இறைநேசர்கள்’ என்று கூறினார்கள்.
