நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்:
“இரு செயல்கள் உள்ளன. இந்த இரண்டு செயல்களையும் எப்போதும் செய்து வருபவர்கள் நிச்சயமாக சுவனம் செல்வர். இவ்விரண்டும் எளிதானவையாகும். எனினும் இவ்விரண்டையும் அறிந்து செயல்படுபவர்கள் மிகக்குறைவு.”
ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னர்:
பத்து தடவை “ஸுப்ஹானல்லாஹ்” என்றும், பத்து தடவை “அல்ஹம்துலில்லாஹ்” என்றும், பத்து தடவை “அல்லாஹூ அக்பர்” என்றும் ஓதி வாருங்கள்.
இவையாவும் 5 நேரத்தொழுகைக்குப்பின் ஓதுவதால் 150 தடவை ஆகிறது. மீஜானில் 1500 ஆகிறது. (அதாவது, ஒன்றுக்கு பத்து நன்மைகள் வீதம்).
படுக்கைக்குச் சென்றால்:
ஸுப்ஹானல்லாஹ் 33 தடவையும்,
அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும்,
அல்லாஹு அக்பர் 34 தடவையும் ஓதிவாருங்கள். இவையாவும் 100 தடவை ஆகிறது. மீஜானில் (ஒன்றுக்கு பத்து வீதம்) ஆயிரம் ஆகிறது.
இதனைக் கேட்ட ஸஹாபாக்கள், “யாரஸூலல்லாஹ்! இவ்விரண்டு அமல்களையும் நாங்கள் எப்போதும் ஏன் செய்து வர இயலாது?” என்று கேட்டனர்.
அதற்கு, “ஒருவர் தொழுகையில் இருக்கும்போது ஷைத்தான் அவரிடம் வந்து, இன்ன இன்ன வேலைகள் உள்ளன நினைவிருக்கட்டும் என்று கூறுகிறான். எனவே, நீங்கள் தொழுகையை முடித்ததும், உங்களால் இவ்விதம் அமல் செய்ய முடியாமல் போய்விடுகிறது. மேலும், ஒருவர் படுக்கைக்குச் செல்லும்போது ஷைத்தான் வந்து அவரை தட்டிக் கொடுத்து உடனே தூங்கச் செய்து விடுகிறான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
