அல்லாஹ் குர்ஆனில்,
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَنًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا حَتَّى إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ .
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனை பெற்றெடுக்கிறாள்; அவனைச் சுமப்பதும் அவனுக்கு பால்குடி மறக்கச்செய்வதும் முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், ‘இறைவனே! நீ என்மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல செயல்களைச் செய்யவும் எனக்கு அருள்புரிவாயாக! என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக சீர்படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன்; இன்னும் நான் முஸ்லிம்களில் உள்ளவனாக இருக்கிறேன்’ என்று கூறுவான்.
— சூரா அஹ்காஃப் : 15
இந்த வசனங்கள் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் சிறப்பில் அருளப்பட்டவையாகும்.
ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களுடன் நெருங்கிய நட்பு சிரியா நாட்டு வணிக பிரயாணத்தில் ஏற்பட்டது.
அப்பொழுது அவர்களின் வயது பதினெட்டாகவும், நபி(ஸல்) அவர்களின் வயது இருபதாகவும் இருந்தது. இப்பிரயாணத்தின் போது இடைவழியில் ஓர் இலந்தை மரத்தின் அருகில் இருவரும் தங்கினார்கள். ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் அங்கிருந்த பாதிரியார் ஒருவரைச் சந்தித்துச் சென்றிருந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மரநிழலில் அமர்ந்திருந்தார்கள். அந்த பாதிரியார் ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், ‘அம் மரத்தின் கீழ் வீற்றிருப்பவர் யார்?’ என விசாரித்தார்.
அதற்கு அவர்கள், ‘முஹம்மதிப்னு அப்துல்லாஹிப்னு அப்துல் முத்தலிப்’ என பதிலளித்தார்கள்.
உடனே பாதிரியார், ‘இறைவன் மீது ஆணையாக! இவர் நபியாவார். ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்குப் பிறகு இம்மரத்தடியில் எவரும் அமர்ந்ததில்லை. இவர்களே இறுதி நபியாவார்கள்’ என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் நாற்பது வயதை அடைந்து நபிப்பட்டம் கிடைத்தபோது, ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் முஸ்லிமானார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வயது நாற்பதை எட்டியதும், ‘எனது இரட்சகா! எனக்கும், எனது தாய் தந்தையாருக்கும் நீ அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த நீ எனக்கு அருள்புரிவாயாக!’ என பிரார்த்தனை புரிந்தார்கள்.
ஹஜ்ரத் அலி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
தாய் தந்தையர் இருவருமே இஸ்லாத்தை ஏற்ற பெருமை ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தவிர முஹாஜிர்களில் வேறு யாருக்கும் கிட்டியதில்லை.
ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் இரண்டாவது பிரார்த்தனை பிள்ளைகளின் சீர்திருத்தம் பற்றி இருந்தது. அதன் பலனாக அன்னாரின் பிள்ளைகளும் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களானார்கள். ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் முழு குடும்பமும் முஸ்லிம்களாக விளங்கினர். இது அல்லாஹ் அவர்களுக்கு செய்த மிகப் பெரிய அருளாகும்!
