அல்லாஹ் குர்ஆனில்,
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
நிச்சயமாக நம்மிடமே அவர்கள் யாவரும் திரும்ப வரவேண்டியிருக்கிறது. பின்னர் நிச்சயமாக அவர்களை கேள்விக் கணக்கு கேட்பதும் இருக்கிறது.
— சூரா காஷியா: 25, 26
அபுல் லைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மறுமைநாளில் மக்கள் தத்தமது கப்ருகளிலிருந்து எழுப்பப்படும் போது அச்சந்தர்ப்பத்திலே எழுபது வருடங்கள் வரை அதே நிலையில் நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களின் பக்கம் கவனமும் செலுத்தப்படமாட்டாது. அந்த பரிதவிப்பினால் எந்த அளவு அழுவார்கள் என்றால் அழுது அழுது கண்ணீர் வற்றிப்போய் கண்ணீருக்குப் பதிலாக இரத்தம் கண்ணில் வெளிப்பட ஆரம்பிக்கும்.
அதற்குப் பிறகு மஹ்ஷர் மைதானத்தின் பக்கமாக அழைக்கப்படுவார்கள். வானவர்கள் வானிலிருந்து இறங்க ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொரு வானத்தின் மலக்குகளும் தனித்தனி வட்டங்களை அமைத்து ஒரு வானத்தையுடையவர் அடுத்த வானத்தை உடையவர்களுக்கு பின்னால் நின்று கொள்வார்கள். இதனையே குர்ஆனில்,
وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزيلًا الْمُلْكُ يَوْمَئِذٍ الْحَقُّ لِلرَّحْمَٰنِ وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَّقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَذُولًا
இன்னும் வானம் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய்) இறங்குவார்கள். அந்த நாளில் உண்மையான ஆட்சி ரஹ்மானுக்கே இருக்கும். மேலும் அந்த நாள் காபிர்களுக்கு மிகக் கடினமானதாக இருக்கும். அந்நாளில் அநியாயம் இழைத்தவன் தனது இரு கைகளையும் கடித்தவனாக, ‘தூதருடன் நானும் (நேர்) வழியைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? எனக் கூறுவான். எனக்கு வந்த கேடே! என்னை வழிகெடுத்த ஒருவனை என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா? எனக்கூறுவான். நிச்சயமாக எனக்கு நற்போதனை வந்தடைந்த பின்னரும் அதிலிருந்து அவன்தான் என்னை வழிதவறச் செய்துவிட்டானே!’ மேலும், ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்.
— சூரா அல்ஃபுர்கான் : 25-29
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
அந்நாளில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து, ‘ஏ மனித, ஜின் வர்க்கமே! நான் உலகில் உபதேசம் செய்துவிட்டிருந்தேன். இன்று உங்களுடைய செயல்கள் இதோ உங்களுக்கு முன்னால் இருக்கின்றன. எவரொருவர் தனது செயலேட்டில் நன்மைகளைக் கண்டால் அவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவாராக; எவர் நன்மைகளைக் காணவில்லையோ அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்வாராக!’ என்று அறிவிப்புச் செய்யப்படும்.
அதற்குப் பிறகு அல்லாஹுதஆலா நரகத்திற்கு கட்டளை பிறப்பிக்க, அது அதனுடைய வேதனையோடு கண் முன்பாக தோற்றமளிக்கும். அதனைக் கண்டு ஒவ்வொரு மனிதனும் தனது முழந்தாளில் மண்டியிட்டு விழுந்து விடுவான்.
கால் இடறுவதால் ஏற்படும் காயத்தை விட, நாக்கு இடறுவதால் ஏற்படும் காயம் அதிகம்.
இதனையே சூரத்துல் ஜாஸியாவில்,
وَتَرَىٰ كُلَّ أُمَّةٍ جَاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدْعَىٰ إِلَىٰ كِتَابِهَا
(நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயத்தினரும் முழந்தாளிட்டிருக்க நீர் காண்பீர். மேலும் ஒவ்வொரு சமுதாயத்தினரும் அவரவர்களுடைய பதிவுப் புத்தகத்தின் பக்கமாக அழைக்கப்படுவார்கள்.
— சூரா அல் ஜாஸியா : 28
அதற்குப் பிறகு மக்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவது ஆரம்பமாகிவிடும். மிருகங்களுக்கிடையிலும் நீதி வழங்கப்படும். கொம்பில்லாத ஆட்டிற்காக கொம்புள்ள ஆட்டிடம் பழி வாங்கப்படும். அதற்குப் பின்னர் மிருகங்களை நோக்கி, ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என உத்தரவிடப்படும்.
وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
அந்நேரம் காபிர்கள், ‘நாமும் மண்ணோடு மண்ணாகியிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள்.
— சூரா அந்நபஉ: 40
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
மக்கள் தனது தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது போன்றே நிர்வாணமாக மஹ்ஷர் மைதானத்திலும் இருப்பார்கள்.
நபி(ஸல்) இவ்வாறு கூறியபோது, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், ‘யா ரசூலல்லாஹ்! எல்லோருக்கும் முன்பாக நிர்வாணமாக நிற்பதால் வெட்கமாக இருக்காதா? ஒருவர் மற்றவர்களைப் பார்க்க மாட்டார்களா?’ என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், ‘அச்சந்தர்ப்பத்தில் மக்கள் தத்தமது கஷ்டங்களில் எவ்வாறு சிக்குண்டு கிடப்பார்கள் என்றால், ஒருவர் மற்றவரைப் பார்க்கும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்க்காது.
எல்லோருடைய கண்களும் மேல்நோக்கி பதிந்திருக்கும். ஒவ்வொருவரும் தனது தீயசெயல்களின் அளவுக்கு வியர்வையில் மூழ்கியிருப்பர்.
சிலருடைய வியர்வை கால்வரை உயர்ந்திருக்கும். சிலர் கரண்டைக் கால் வரை, சிலர் வயிறு வரை, சிலர் வாய் வரை வியர்வையில் மூழ்கியிருப்பார்கள்’ என்று கூறினார்கள்.
மலக்குகள் அர்ஷின் நாலாபுறங்களிலும் வட்டமாக நின்றிருப்பார்கள்.
அச்சமயம் ஒவ்வொரு மனிதனின் பெயர் சொல்லி அழைக்கப்படும். யாரை அழைக்கப்படுமோ அவர் கூட்டத்தை விட்டு வெளியேறி அங்கு வருவார்.
அவர் அல்லாஹ்வுக்கு முன்பாக நிறுத்தப்படும் போது, ‘இவன் பொறுப்பில் யார் யாருடைய உரிமைகள் இருக்கின்றனவோ அவர்கள் முன்னால் வருக!’ என அறிக்கையிடப்படும்.
அவனுடைய பொறுப்பில் யாருடைய உரிமைகள் இருந்தாலும் அல்லது அவனால் யார் மீதாவது ஏதும் அநியாயம் இழைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டு, அவனுடைய நன்மைகளிலிருந்து அவர்களுக்குச் சேரவேண்டிய கடமைகள் நிறைவேற்றித் தரப்படும்.
ஒருக்கால் அவனிடம் நன்மைகள் இல்லாது போனால் அல்லது மீதமில்லாது போனால் அந்த ஜனங்களுடைய பாவங்கள் அவன் மீது சுமத்தப்படும். அவன் தனது பாவங்களுடன் மற்றவர்களின் பாவங்களையும் தன் தலைமீது சுமந்து கொண்டபோது அவனை நோக்கி, ‘போ! உனது ஹாவியாவிற்குப் (கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பிற்கு) போய்விடு’ என்று சொல்லப்படும்.
இத்தகைய கடினமான விசாரணையையும், வேதனையையும் கண்டு நெருக்கமுள்ள மலக்காக இருந்தாலும் அல்லது நபியாக இருந்தாலும் பயப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ் யாரைப் பாதுகாத்துக் கொண்டானோ அவர்களைத் தவிர…
அப்போது ஒவ்வொரு மனிதனிடமும் நான்கு விஷயங்களைப் பற்றி விசாரிக்கப்படும். அதாவது வயதை எவ்வழியில் செலவழித்தாய்? உனது கல்வியின்படி நீ என்ன நற்செயல் செய்தாய்? பொருளை எவ்வழியில் சம்பாதித்தாய்? எவ்வழியில் செலவு செய்தாய்? என்று விசாரணை செய்யப்படும்.
இவ்உலக வாழ்க்கை மனம் விரும்பும் வழியில் வாழ்வதற்காக அல்ல. மாறாக, மறுமைநாளில் இவ்வுலக வாழ்வைப் பற்றி கணக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் மனிதன் இருக்கிறான்.
இதனைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில்,
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِي وَالِدٌ عَن وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَن وَالِدِهِ شَيْئًا ۚ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ
மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். அன்றி ஒரு நாளைப்பற்றி பயப்படுங்கள். (அந்நாளில் தந்தை மகனுக்கு உதவமாட்டான்; மகனும் தந்தைக்கு எத்தகைய (ஒரு சிறு) உதவியையும் செய்ய மாட்டான். நிச்சயமாக அந்தநாள் கட்டாயம் வரும் என்னும்) அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். எனவே இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். (அதனால் நீங்கள் அதில் மூழ்கி அந்நாளை மறந்துவிட வேண்டாம்). மேலும் ஏமாற்றுக்கார (ஷைத்தா)னும் உங்களை ஏமாற்றத்தில் போட்டுவிட வேண்டாம். (அவனுடைய தூண்டுதலில் சிக்கி நீங்கள் அந்நாளை மறந்துவிட வேண்டாம்).
— சூரா லுக்மான்: 33
ஹழ்ரத் இக்ரிமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அன்றைய தினம் தந்தை தனது மகனிடம், ‘நான் உன்னுடைய தந்தையாக இருந்தேன்’ என்று கூற, அந்த மகன் தந்தை செய்த உபகாரங்களையெல்லாம் ஒப்புக்கொள்வான். அதற்குப் பிறகு தந்தையானவன், ‘எனக்கு ஒரு நன்மை மட்டும் தேவையுள்ளது. அது ஒரு அணுவளவேயாகும். அதன் காரணமாக என்னுடைய தட்டு நன்மையின் கனத்தால் தாழ்ந்துவிடக்கூடும்’ என்று வேண்டுவான். அதற்கு மகனானவன், ‘நானே துன்பத்தில் இருக்கிறேன். என்மீது என்ன நிகழப்போகிறது என்று எனக்கே என் நிலை தெரியாமல் இருக்கும்போது நான் எந்த நன்மையும் கொடுக்க முடியாது!’ என மறுத்து விடுவான்.
அதற்குப் பிறகு அம்மனிதன் தனது மனைவியிடமும் அதேபோன்று தான் செய்த உபகாரங்களையும் தனது உறவு முறையையும் சொல்லி வலியுறுத்திக் கேட்பான். அவளும் அதே போன்று மறுத்துக் கூறிவிடுவாள். ஆக இப்படியே ஒவ்வொரு உறவுகளிடமும் சென்று யாசித்துத் திரிவான்.
அல்லாஹ் குர்ஆனில்,
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ
மேலும் (மறுமையின் அந்நாளில்) ஒருவருடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையைச் சுமந்தவன் (அதாவது பாவியானவன்) அதில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி (மற்றொருவனை) அழைத்த போதிலும் அப்பொழுதும் அதிலிருந்து சிறிதளவையும் அவன் சுமந்து கொள்ள மாட்டான். (அதாவது எவ்வகையிலும் அவனுக்கு உதவமாட்டான்) அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் சரியே!
— சூரா ஃபாதிர்: 18
நபித்தோழர் கதாதா (ரலி) அவர்கள், ‘கியாமத் நாளன்று ஒவ்வொரு மனிதனும் தனக்கு அறிமுகமானவர், நெருங்கிய சொந்தக்காரர் யாரும் தன்னைக் கண்டு கொள்ளக்கூடாதே என பயப்படுவான். ஏனெனில், எங்கு அவர்கள் தங்களுக்கு உதவி புரியுமாறு கோரி விடுவார்களோ என்ற காரணத்தால்தான்’ என்று அறிவிக்கிறார்கள்.
