நபித்தோழர் ஹழ்ரத் பிலால் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி(ஸல்) அவர்களிடம் பொருள் ஏதும் சேமிக்கப்பட்டு இருந்ததில்லை. அந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதாவது எவரேனும் ஒருவர் பசிக்கிறதென்று கூறி நபியவர்களிடத்தில் வந்தால், அதனை என்னிடம் கூறுவார்கள். நான் யாரிடத்திலாவது கடன் வாங்கி அவருக்கு உணவளிப்பேன். அவ்வாறே எவரேனும் ஆடையில்லாதோர் வந்து கேட்டாலும் என்னிடம் கூறுவார்கள். நான் கடன் வாங்கி அவருக்கு ஆடை வாங்கிக் கொடுப்பேன். இவ்வாறே காரியங்கள் நடைபெற்று வந்தன.
ஒரு தடவை (முஷ்ரிக்) இறைமறுப்பாளன் ஒருவன் என்னிடம் வந்து, எனக்கு நல்ல வசதியும், செல்வமும் இருக்கின்றன. உமக்குத் தேவைப்பட்ட நேரத்தில் என்னிடம் நீர் கடன் வாங்கிக் கொள்ளலாம்; வேறு எவரிடத்திலும் கேட்க வேண்டியதில்லை என்று சொன்னான்.
இதைவிடச் சிறந்தது என்ன இருக்கிறது என்று நான் எண்ணியவனாக, தேவைப்பட்ட நேரங்களிலெல்லாம் அவனிடம் கடன் வாங்க ஆரம்பித்தேன். நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டபோதெல்லாம் அவனிடம் கடன் பெற்று அத்தேவைகளை நிறைவேற்றி வந்தேன்.
இந்நிலையில் ஒருநாள் நான் ஒலுச்செய்து கொண்டு பாங்கு சொல்வதற்காகத் தயாராக நின்று கொண்டிருந்தபொழுது அந்த இறைமறுப்பாளன் ஒரு கூட்டத்தாருடன் என்னிடம் வந்து, “ஏ ஹபஷியே!” என்று கூப்பிட்டான். நான் திரும்பிப் பார்த்தவுடன், அவன் என்னைக் கண்டபடித் திட்ட ஆரம்பித்தான். வாயில் வந்த தீய வார்த்தைகளையெல்லாம் கூறி திட்டினான்.
பிறகு, “தவணை முடிய இன்னும் எத்தனை தினங்கள் இருக்கின்றன?” என்று கேட்டான்.
“விரைவில் முடியப் போகிறது” என்று நான் கூறினேன்.
அப்போது அவன், “இன்னும் நான்கு தினங்கள் இருக்கின்றன. அதற்குள் என்னுடைய கடன் முழுவதையும் நீ நிறைவேற்றாவிட்டால், நீ என்னிடம் வாங்கிய கடனுக்காக, நான் உன்னை அடிமையாக்கிக் கொள்வேன். பிறகு நீ முன்பிருந்தது போலவே ஆடுகள் மேய்க்க வேண்டியதுதான்” என்று கூறிவிட்டுப் போய்விட்டான்.
அன்று முழுவதும் கவலையும், துக்கமும் என்னை வாட்டின. இஷா தொழுகைக்குப் பிறகு, நபி(ஸல்) அவர்கள் தனிமையிலிருக்கும் போது நான் அவர்களின் சமூகத்திற்குச் சென்று நடந்த சம்பவம் முழுவதையும் கூறினேன்.
“யாரஸூலல்லாஹ்! அக்கடனை உடனடியாக நிறைவேற்றித்தர தங்களிடமும் இப்பொழுது வசதியில்லை. உடனடியாக நான் அதை நிறைவேற்றவில்லையானால் அவன் என்னைக் கேவலப்படுத்திவிடுவான்” என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
விடிவதற்குச் சற்று நேரம் இருக்கும் பொழுது, நண்பர் ஒருவர் என்னிடம் ஓடி வந்து, நபி(ஸல்) அவர்கள் சமூகத்திற்கு “விரைவாகச் செல்வீராக!” என்று கூறினார்.
நான் நபியவர்களின் சமூகத்திற்குச் சென்ற பொழுது சாமான்கள் ஏற்றப்பட்ட நான்கு ஒட்டகங்கள் அங்குப் படுக்க வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். என்னைக் கண்டவுடன் நபி(ஸல்) அவர்கள், என்னை நோக்கி, “பிலாலே உமக்கு ஒரு நற்செய்தி, அல்லாஹுதஆலா உம்முடைய கடனை நிறைவேற்றுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்துவிட்டான். இந்த ஒட்டகங்களையும் அவற்றிலுள்ள பொருட்களையும் ஃபிதக் நாட்டின் தலைவர் காணிக்கையாக எனக்கு அனுப்பியுள்ளார்” என்று கூறினார்கள்.
நான் அல்லாஹூதஆலாவுக்கு நன்றி செலுத்தியவனாக மிக்க மகிழ்ச்சியுடன் அந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டுபோய், அனைத்துக் கடன்களையும் நிறைவேற்றிவிட்டு வந்தேன்.
நபி(ஸல்) அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டு மஸ்ஜிதிலேயே வீற்றிருந்தார்கள்.
நான் திரும்பி வந்து “யாரஸூலல்லாஹ்! அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அல்லாஹூதஆலா எல்லா கடன்களை விட்டும் தங்களை நீக்கி வைத்துவிட்டான். இப்பொழுது கடன் ஏதும் பாக்கி இல்லை” என்று கூறினேன்.
அப்பொழுது நபி(ஸல்) அவர்கள், “அந்தப் பொருட்களில் ஏதேனும் மீதி இருக்கிறதா?” எனக் கேட்டார்கள்.
“ஆம். கொஞ்சம் மீதி இருக்கிறது” என்று நான் கூறியதும், “அதனையும் பங்கிட்டுக்கொடுத்து விடுவீராக! ஏனெனில், அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி ஏற்படும். அதனைப் பங்கிட்டுக் கொடுக்காதவரை நான் வீட்டுக்குப் போக முடியாது” என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அன்றைய பகல் முழுவதையும் மஸ்ஜிதிலேயே கழித்துவிட்டு இஷா தொழுகை முடிந்தபின், அந்த மீதிப் பொருட்கள் பங்கிடப்பட்டுவிட்டனவா? இல்லையா? என்று மீண்டும் வினவினார்கள்.
“தேவையுடையவர்கள் யாரும் வராததால் இன்னும் கொஞ்சம் மீதி இருக்கிறது” என்று நான் கூறினேன்.
இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அன்றிரவு மஸ்ஜிதிலேயே தங்கிவிட்டார்கள்.
மறுநாள் இஷாவிற்குப்பின், “இன்னும் மீதி இருக்கிறதா?” என்று கேட்டார்கள். “இல்லை, அல்லாஹுதஆலா தங்களுக்கு நிம்மதியளித்து விட்டான்; அவை முழுவதும் தீர்ந்துவிட்டன” என்று கூறினேன்.
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹுதஆலாவைப் புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள்.
தங்களுடைய கைவசம் சில பொருட்கள் இருக்க மவ்த் வந்துவிடக் கூடாதே என நபி (ஸல்) அவர்கள் பயந்தார்கள். அதனால்தான் அந்தப் பொருட்கள் அனைத்தும் பங்கிடப்பட்ட பின்னால் தங்களின் வீட்டுக்குச் சென்று மனைவிமார்களைச் சந்தித்தார்கள்.
