இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஹஜ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள்,

اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا

‘யாஅல்லாஹ்! என்னிடம் இலேசான கணக்கு வாங்குவாயாக’ என்று துஆச் செய்வதை நான் கேட்டிருக்கிறேன்.

‘இலேசான கணக்கு என்பதன் பொருள் என்ன?’ என்று நான் வினவினேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், பின்வருமாறு பதிலளித்தார்கள்:

‘அல்லாஹ் மனிதனின் செயல் ஏட்டைப்பார்த்து, அதில் பதிக்கப்பட்டிருக்கும் பாவமான செயல்களை மன்னித்து விடுவதே இலேசான கணக்காகும். ஆயிஷாவே! கேள்விகணக்கு கேட்கப்படும்போது, எவனுடைய ஒவ்வொரு செயலும் துருவித்துருவி ஆராயப்படுமோ, அவன் அழிந்துபோய் விட்டான். (அதாவது இறைவனின் தண்டனைக்கு ஆளாகிவிட்டான்) என்றுதான் பொருள்’.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَىٰ بِنَا حَاسِبِينَ

கியாமத்நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவுக்கும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது. மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும் அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.

– சூரா அல்அன்பியா : 47

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமைநாளில்) நேரடியாகப் பேசுவான். (கேள்விகணக்கு கேட்பான்). அங்கு சிபாரிசு செய்பவர் எவரும் இருக்கமாட்டார். அவனை மறைத்துக்கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான். சிபாரிசு செய்பவர், உதவுபவர் யாராவது உள்ளனரா? என்று! அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது. பின்னர் இடது பக்கம் நோட்டமிடுவான். அங்கும் அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் தென்படாது. பின்னர் முன்பக்கம் பார்வையினை செலுத்துவான். அங்கு பயங்கரத்துடன் நரகத்தை மட்டுமே காண்பான். எனவே மக்களே! நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களிடம்,

(மறுமையில்) “எனது தோழர்களில் நீர்தான் மிகத் தாமதமாக என்னிடம் வந்தடைந்தீர். எனக்கோ உமது விஷயத்தில் எங்கு சோதனையில் சிக்கிவிட்டீரோ என்று அச்சம் உண்டாகிவிட்டது. மேலும், நீர் வியர்த்து விறுவிறுத்தவராகக் காணப்பட்டீர். இவ்வளவு தாமதமாக இங்கு வருவதில் நேரம் எங்கு கழிந்தது? என நான் உம்மிடம் கேட்டேன்”.

”அதற்கு நீர், நான் எனது செல்வத்தின் பெருக்கத்தின் காரணமாக கேள்விக் கணக்கில் சிக்கி இருந்தேன். அதாவது, பொருளை எவ்வாறு சம்பாதித்தாய்? அதனை எவ்விதம் செலவழித்தாய்? என என்னிடம் அது குறித்து விசாரணை நடைபெற்றது என்பதாக நீர் என்னிடம் கூறினீர்”.

இதைக்கேட்டு ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு, “யாரஸூலல்லாஹ்! நேற்று இரவு எனக்கு மிஸர் நாட்டிலிருந்து நூறு வியாபார ஒட்டகங்கள் வந்துள்ளன. நான் அவைகளை மதீனா முனவ்வராவில் வாழும் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும் ஸதகா செய்துவிடுகின்றேன். ஒருக்கால் அல்லாஹ் இதன் காரணமாக அந்த நாளில் கேள்வி கணக்கை இலேசாக்கக்கூடும்” எனக் கூறினார்கள்.

Share.

Get new Posts

க ரு த் து க ள் F E E D B A C K S