ஒருமுறை காட்டரபி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்தார். வந்தவர் தனக்கு ஏதேனும் தரவேண்டும் என வேண்டி நின்றார். நபி(ஸல்) அவர்களும் சில பொருட்களைக் கொடுத்தார்கள்.
திரும்பிச் செல்லும்போது அவரிடம், ‘நான் உங்களை நல்ல முறையில் நடத்தினேனா?’ என்று நபி(ஸல்) அவர்கள் வினவினார்கள்.
அதற்கு அவர், ‘இல்லை. நீங்கள் என்னை நன்றாக நடத்தவில்லை’ என்று பதிலளித்தார்.
இதனைக் கேட்டதும் அங்கு குழுமியிருந்த நபித்தோழர்கள் கோபம் கொண்டு அவரை நெருங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களைத் தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் இன்னும் சில பொருட்களைக் கொடுத்தார்கள்.
அதன் பின்னர் நபி(ஸல்) அவர்கள் அவரிடம், ‘இப்போது நான் உங்களை நல்ல முறையில் நடத்தினேனா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், ‘ஆம்; அல்லாஹ் உங்கள் குடும்பத்தினருக்கு அருள் புரிவானாக!’ என பதில் கூறினார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இப்போது நீங்கள் என்னிடம் கூறியவை சரியான வார்த்தைகள். ஆனால் என்னுடைய தோழர்கள் உங்களிடத்தில் மிகுந்த கோபத்துடன் இருக்கின்றார்கள். நீங்கள் அதனை பொருட்படுத்தவில்லையென்றால், இதே வார்த்தைகளை என்னுடைய தோழர்கள் முன் கூறுங்கள்; அது அவர்களின் கோபத்தை அகற்றிவிடும்’ என கூறினார்கள். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அந்த அரபியைச் சுட்டிக்காட்டி தன்னுடைய தோழர்களிடம், ‘இவர், நான் அவரை நன்றாக நடத்தவில்லை என்று சொன்னதும், நான் அவருக்கு இன்னும் சில பொருட்களைக் கொடுத்தேன்.
அதைப் பெற்றுக் கொண்டதும் இவர் மகிழ்ச்சி அடைந்தார். இல்லையா?’ என்று அந்த அரபியைக் குறித்து கேட்டார்கள். அதற்கு ‘ஆம்!’ என நபித்தோழர்கள் கூறினார்கள்.
அதன்பின் நபி(ஸல்) அவர்கள், “என்னுடைய தோழர்களும், இந்த மனிதரும் தன்னுடைய பெண் ஒட்டகத்தை இழந்த மனிதருக்கும் அதனை துரத்திச் சென்ற மனிதர்களுக்கும் ஒப்பாவார்கள். ஒரு பெண் ஒட்டகம் அறுந்து ஓடிவிட்டது. அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் எல்லாம் அதன் பின்னால் ஓடினார்கள். அந்த ஒட்டகம் அது கண்டு மிரண்டு மேலும் வேகமாக ஓடியது.
ஆகவே, அந்த ஒட்டகத்திற்குச் சொந்தக்காரன், ‘என்னையும், என்னுடைய ஒட்டகத்தையும் விட்டுவிடுங்கள்; நான் என் ஒட்டகத்தின் தன்மைகளை நன்றாக அறிவேன்; அந்த ஒட்டகத்தை என்னுடைய வழிக்குக் நான் கொண்டு வந்து விடுவேன்’ எனக் கூறி, அவனது வாக்கின்படி அவன் தன்னுடைய கைகளில் கொஞ்சம் புற்களை அள்ளி அந்த ஒட்டகம் பார்க்கும்படி காட்டினான்.
அந்த ஒட்டகம் ஓடிவந்து அவனுடைய காலடியில் அமர்ந்து கொண்டது. அவன் தன் இருக்கையை, அதன் முதுகில் கட்டி அதன்மீது சவாரி செய்தான். அந்த அரபி தவறான வார்த்தைகளைப் பிரயோகித்த சமயத்தில் வெகுண்டெழுந்த உங்களை நான் அப்படி விட்டிருந்தால் நீங்கள் அவரைக் கொன்றிருப்பீர்கள்”.
நபி(ஸல்) அவர்களிடம் அந்த காட்டரபி இங்கிதம் இல்லாமல் நடந்தபோதும், நபி(ஸல்) அவர்கள் அவரின் அறியாமையை மன்னித்து பெருந்தன்மையோடு நடத்தி, அவரது உள்ளத்தை குளிர்படுத்தி அனுப்பினார்கள். இதுதான் நாம் பின்பற்ற வேண்டிய நற்குணமாகும்.
