இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அரபு மண்ணின் வீரத்தில் அரபுமக்களால் முதன்மையான அந்தஸ்தில் போற்றப்பட்ட நபித்தோழர் ஹம்ஜா (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் நுபுவ்வத்தின் ஆறாம் ஆண்டு இஸ்லாத்தைத் தழுவி, எதிரிகளுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்தார்கள்.

ஹஜ்ரத் ஹம்ஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் சிங்கம் என்றழைக்கப்பட்டவர்கள்.

நபி (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஹம்ஜா (ரலி) அவர்கள் ஆவார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ரத் ஹம்ஜா (ரலி) அவர்கள் மீது அளவில்லா அன்பும், பாசமும் வைத்திருந்தார்கள். ஹம்ஜா தன் சகோதரரின் மகனான நபியவர்களின் மீது பேரன்பு கொண்டிருந்தார்கள்.

மக்கா நகரின் தலைவர்களில் ஒருவரான அபூசுப்யான் அவர்களின் மனைவி ஹிந்தா என்பவராவார். இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார்கள்.

அப்போது பத்று என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கும், மக்கா காபிர்களுக்கும் இடையே முதலாவது போர் நிகழ்ந்தது.

அந்தப் போரில், முஸ்லிம்களின் தரப்பிலிருந்த ஹம்ஜா (ரலி) அவர்கள் ஹிந்தா என்ற அந்தப்பெண்ணின் சகோதரனை யுத்தத்திலே வெட்டிக் கொன்றார். மேலும், மக்கா காஃபிர்களுக்கு யுத்தத்திலே தோல்வியும் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த ஹிந்தா என்ற அப்பெண், தன் சகோதரனை வெட்டிக் கொன்ற ஹம்ஜாவை பழிவாங்க நினைத்தார். தன் அடிமையான வஹ்ஷியிடம், ‘நீ ஹம்ஜாவைக் கொலை செய்தால், நான் உனக்கு விடுதலை அளிப்பேன். மேலும், செல்வமும் கொடுப்பேன்’ எனத் தூண்டி விட்டார்.

இதனால் வஹ்ஷி என்ற அந்த அடிமை ஹம்ஜா (ரலி) அவர்களைக் கொலை செய்ய சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். இந்நிலையில், அதற்கு அடுத்த வருடமேயே உஹத் என்ற இடத்தில் போர் நடந்தது.

ஹம்ஜா (ரலி) அவர்கள் மாபெரும் வீரராக இருந்ததால், அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது சாத்தியமில்லாத விஷயம் என்பதை அறிந்த வஹ்ஷி, உஹத் போரில் ஒரு பாறைக்குப் பின்னால் மறைந்திருந்து திடீரெனப் பாய்ந்து எதிர்பாராத தருணத்தில் ஹஜ்ரத் ஹம்ஜா அவர்களின் மீது ஈட்டியை எறிந்து கொலை செய்துவிட்டார்.

தன் அடிமை வஹ்ஷியின் மூலம் ஹம்ஜா (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டதை அறிந்த ஹிந்தா, ஹம்ஜா (ரலி) அவர்களின் உடலைத் தேடி அடைந்து, ஹம்ஜா (ரலி) அவர்களின் இரு காதுகள், மூக்கு, இரு உதடுகள் ஆகிய உறுப்புகளைக் கத்தரித்து அதனை மாலையாக அணிந்து கொண்டு, தன் சபதம் நிறைவேறியதைக் கண்டு சப்தமிட்டு ஆரவாரம் செய்தார்.

இன்னும் எதிரிகள் ஹஜ்ரத் ஹம்ஜா (ரலி) அவர்களின் உடல் உறுப்புகளை அறுத்துப் பலவாறு சேதப்படுத்தினார்கள். ஹஜ்ரத் ஹம்ஜா (ரலி) அவர்களின் காது, உதடு, மூக்கு ஆகியவைகள் கத்திரிக்கப்பட்டு உடல் முழுவதும் சின்னாபின்னப் படுத்தப்பட்டிருந்தது.

உஹது யுத்தம் முடிந்த பின் நபி (ஸல்) அவர்கள் ஷஹீதானவர்களின் உடல்களைப் பார்த்துக் கொண்டு வந்தபோது, அவர்களின் சிறிய தந்தையான ஹஜ்ரத் ஹம்ஜா(ரலி) அவர்களின் உடலைப் பார்த்ததும் தாங்கமுடியாத துயரம் அடைந்து அழுதார்கள்.

ஹஜ்ரத் ஹம்ஜா(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு உறுப்புகளெல்லாம் சிதைக்கப்பட்ட காட்சி நபி (ஸல்) அவர்களின் மனதில் இறுதி வரை இருந்துகொண்டே இருந்தது. அதன் காரணமாக நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகைவிட்டு மறையும் வரை, உஹதிற்குச் சென்று அங்கு ஷஹீதானவர்களுக்குத் துஆ செய்து கொண்டிருந்தார்கள்.

இதனை நபித்தோழர் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஹம்ஜா (ரலி) அவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் அழுததைப் போன்று வேறு யாருக்கும் அவர்கள் அழுது நாங்கள் பார்க்கவில்லை.

ஹம்ஜா (ரலி) அவர்களைக் கிப்லாவின் திசையில் வைத்து அவரது ஜனாஸாவுக்கு முன் நபியவர்கள் நின்றார்கள். அப்போதும், தனது சிறிய தந்தைக்கு ஏற்பட்டதை எண்ணி நபியவர்கள் அதிகமாக அழுது அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

ஹம்ஜா அவர்களின் உடல் பார்க்க முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே பெண்கள் ஹம்ஜா அவர்களின் ஜனாஸாவைப் பார்க்கவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் தடுத்து வைத்திருந்தார்கள்.

இந்நிலையில், உஹது போரில் ஷஹீதாக்கப்பட்ட ஸஹாபாக்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி ஒரு பெண்மணி வேகமாக வந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள், ‘அதோ, அந்தப்பெண்ணை அங்கே செல்வதைவிட்டும் தடை செய்யுங்கள்’ எனக் கூறினார்கள்.

இதனைப் பற்றி ஹஜ்ரத் ஜூபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘வேகமாக வந்து கொண்டிருந்த அப்பெண் என் தாயார் என்று நான் விளங்கிக்கொண்டு விரைவாகச் சென்று தடுத்தேன். அவர் மிகவும் பலம் வாய்ந்தவராக இருந்ததால், என்னை ‘விலகிப்போ’ என்று கூறி அடித்து விலக்கிவிட்டு, உடல்களை நோக்கி முன்னேறிச் சென்றார். உடனே நான், “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் உங்களை அந்த இடத்திற்குச் செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்” என்று கூறியதும், அப்படியே அசையாது நின்று விட்டார்கள்.

பிறகு என் தாயார் இரண்டு துணிகளைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து, நபி(ஸல்) அவர்களிடம், ‘என்னுடைய சகோதரர் ஹம்ஜா ஷஹீதாகி விட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவருக்கு கஃபன் இடுவதற்காக இவ்விரு துணிகளை நான் கொண்டு வந்துள்ளேன்’ என்று கூறினார்.

நாங்கள் அந்தத் துணியைப் பெற்று ஹம்ஜா (ரலி) அவர்களுக்குக் கஃபனிடலாம் என்று நெருங்கினோம். அங்கே ஹம்ஜா அவர்களின் உடலின் அருகில் ஸுஹைல் என்ற மற்றொரு அன்ஸாரித் தோழரின் உடலும் கஃபிர்களால் சிதைக்கப்பட்டுக் கிடந்தது.

ஹம்ஜா அவர்களுக்கு மட்டும் கஃபனிட்டுவிட்டு ஸுஹைல் அவர்களை அப்படியே விட்டுவிட முடியாதே! எனவே என்ன செய்வது என்ற சிந்தனை எங்களுக்குள் ஏற்பட்டது.

ஆளுக்கொரு துணியைப் போர்த்திவிடலாம் என்றால் அத்துணிகளில் ஒன்று பெரியதும், மற்றொன்று சிறியதுமாக இருந்தது.

எனவே நாங்கள் சீட்டுப்போட்டுப் பார்த்து யாருக்கு எந்த துணி வருகிறதோ அதனைக் கொண்டு அவரவருக்கு கஃபனிடலாம் என எண்ணி சீட்டுப் போட்டுப் பார்த்தோம். அதில் சிறிய துணி ஹம்ஜா (ரலி) அவர்களுக்கும், பெரிய துணி ஸுஹைல் (ரலி) அவர்களுக்கும் வந்தது.

ஹம்ஜா அவர்கள் நல்ல உயரமுடையவர்களாக இருந்ததால் அந்த சிறிய துணி அவர்களின் உடல் முழுவதையும் மறைக்கப் போதுமானதாக இல்லை. அந்த சிறிய துணியைக் கொண்டு ஹம்ஜா அவர்களின் தலையை மூடினால் அவர்களின் கால்கள் வெளியில் தெரிந்தது. கால்களை மூடினால், தலையை மூட முடியவில்லை. எனவே, அந்தச் சிறிய துணியைக் கொண்டு ஹம்ஜா அவர்களின் தலையை மூடிவிட்டு, கால் பக்கம் இத்கீர் என்ற புல்லின் இலைதழைகளை வைத்து மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

இவ்வுலகில் மக்கள் மத்தியில் பெரும் வீரத்துடனும் அந்தஸ்துடனும் வாழ்ந்த ஹஜ்ரத் ஹம்ஜா (ரலி) அவர்களுக்கு ஷஹீதானபின் அடக்கம் செய்யப்படுவதற்குப் போதுமான துணி கூட இல்லை, இலைதழைகளை வைத்து மறைக்கப்பட்டு அடக்கம் செய்யவைக்கப்பட்டார்கள்.

ஹம்ஜா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஆவார்கள். அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கவும், இஸ்லாம் செழிக்கவும் தங்களின் உயிரையும் நஃப்ஸையும் அர்ப்பணித்துள்ளார்கள்.

ஹஜ்ரத் ஹம்ஜா (ரலி) அவர்கள் ஷஹீதாகும்போது பிறந்த குழந்தை ஒன்று அவர்களுக்கு இருந்தது என்பது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.

பின்னாளில், தந்தையை இழந்த, அந்தப் பிஞ்சுகுழந்தை மக்காவில் உண்ண உணவின்றி தங்க இடமின்றி அநாதையாகச் சுற்றிக் கொண்டிருந்தது; மேலும் எட்டு வயது வரை அச்சிறுமி யாரும் கவனிப்பாரற்ற நிலையில் மக்காவில் வாழ்ந்தது.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, அக்குழந்தை மக்காவில் நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் அழுது கொண்டே ஓடோடி வந்து அண்ணலார் அவர்களை கட்டி அணைத்துக் கொண்டது.

நபி(ஸல்) அவர்களும் அச்சிறுமியைத் தூக்கித் தங்களின் கையில் வைத்து அணைத்துக் கொண்டு ஹஜ்ரத் ஹம்ஜா அவர்களை நினைவு கூர்ந்து சிறிது நேரம் அழுதார்கள். பின்பு தங்களின் அருமை மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வசம் அக்குழந்தையை ஒப்படைத்து வளர்க்கும்படி கூறினார்கள்.

இஸ்லாம் செழிக்கவேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை தியாகங்கள்!

Share.

Get new Posts

க ரு த் து க ள் F E E D B A C K S