இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஒருமுறை ஞானமேதை லுக்மான் (அலை) அவர்களைச் சூழ ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அப்போது ஒரு மனிதன் அக்கூட்டத்தினரைக் கடந்து சென்றான்.

அம்மனிதன் லுக்மான் (அலை) அவர்களை நோக்கி, ‘நீ இன்ன இனத்தாரின் அடிமையாக இருக்கவில்லையா?’ எனக் கேட்க அதற்கு லுக்மான் அவர்கள், ‘ஆம்! நான் அவர்களுடைய அடிமையாகத்தான் இருந்தேன்’ என பதிலளித்தார்.

மறுபடியும் அவன், ‘இன்ன மலையடிவாரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்த மனிதன்தானே நீ?’ என வினவ, அதற்கும், ‘ஆம்! நான் அதே மனிதன்தான்’ என்று லுக்மான் பதிலளித்தார்.

மீண்டும் அவன், ‘அப்படி இருந்த நீ இந்த அந்தஸ்தினை எவ்வாறு அடைந்தாய்?’ எனக் கேட்க, அதற்கு லுக்மான் அவர்கள், ‘இறையச்சம், வாக்கில் சத்தியம், அமானிதத்தை முழுமையாக பாதுகாத்து நிறைவேற்றல், வீணான பேச்சைவிட்டு தவிர்ந்திருத்தல் ஆகிய இந்த விஷயங்களை பேணுதலாக கடைபிடித்ததினால்’ என பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வினால் ஞானம் அருளப்பட்ட லுக்மான் (அலை) அவர்கள் தங்கள் மகனுக்குச் செய்த உபதேசம் பிரபல்யமானது. இன்னும், அல்லாஹ் குர்ஆனிலே அது குறித்து கூறியுள்ளான்:

லுக்மான் அவர்களின் ஞான உபதேசத்திலிருந்து:

  • மகனே! அறிஞர்களின் சபைகளில் மிக அதிகமாக அமருவாயாக. ஞானவான்களின் பேச்சை மிக்க கவனமாகக் கேள். வறண்ட பூமி மழையைக் கொண்டு உயிர் பெறுவது போன்று, மரத்துவிட்ட உள்ளங்களை ஞானவான்களின் பேச்சு உயிர்பிக்கிறது.
  • ‘மகனே! அல்லாஹ்வின் வேதனையை விட்டு அச்சமற்று போய்விடாதே! அதே சமயம் நிராசையால் அவநம்பிக்கை அடைந்துவிடாதே! அவனுடைய கிருபையின் மீது நல்லாதரவு கொள்வாயாக!’ என்று கூறியபோது மகனார், ‘உள்ளமோ ஒன்றாக இருக்கையில் அதில் அச்சம், ஆதரவு ஆகிய இரண்டு உணர்வுகளும் எவ்வாறு ஒன்று சேர முடியும்?’ என வினவினார்.
  • அதற்கு லுக்மான் (அலை) அவர்கள், ‘முஃமின் இரண்டு தன்மை உடையதாக இருப்பான். ஒன்றில் பூரணமாக ஆதரவும் மற்றொன்றில் பூரணமாக அச்சமும் இருக்கும்’ என பதிலளித்தார்கள்.
  • மேற்கொண்டும் அன்னாரின் உபதேசமாவது, ‘மகனே! ரப்பிஃபிர்லி – இறைவா! என்னை மன்னிப்பாயாக! என்பதை மிக அதிகமாக ஓதி வருவாயாக! அல்லாஹ்வின் அருள்நிறைந்த சில நேரங்கள் இருக்கின்றன. அந்நேரங்களில் ஒருவன் எது கேட்டாலும் அது கிடைத்துவிடும்’ என்றார்கள்.
  • மேலும், ‘மகனே! நல்ல அமல் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையின்றி சாத்தியமில்லை. யாருடைய நம்பிக்கை பலஹீனமாக இருக்குமோ, அவனுடைய அமலும் சோம்பல் நிறைந்ததாக இருக்கும்.
  • மகனே! ஷைத்தான் உன்னை சந்தேகத்தில் வீழ்த்த முயற்சித்தால், நீ அவனை உறுதியான ஈமானைக் கொண்டு தாக்கி தோல்வியுறச் செய்! அவன் உன்னை அமலில் சோம்பல் கொள்ளச் செய்தால், மண்ணறை, மறுமை ஆகியவற்றின் நினைவைக் கொண்டு அவனை வென்றுவிடு.
  • உலக ஆசை அல்லது உலக வாழ்வின் சிரமங்களின் பயத்தின் பாதை வழியாக உன்னிடம் வந்தால், நீ அவனிடம், ‘இவ்வுலகம் எவ்வகையிலும் கைவிட்டுப் போகக்கூடியதே! என்பதாகக் கூறிவிடு’ (இங்குள்ள சுகபோகமும் நிரந்தரமானதல்ல அல்லது இங்குள்ள கஷ்டமும் என்றென்றும் இருக்கக் கூடியதல்ல).
  • மேற்கொண்டும் அன்னார் அவர்கள், ‘மகனே! எம்மனிதன் பொய் சொல்வானோ அவனுடைய முக அழகு போய்விடும். மேலும், எந்த மனிதனின் செயல்கள் கெட்டதாகிவிடுகிறதோ, அவன்மீது சஞ்சலம் சாடிக்கொள்ளும்.
  • ‘மகனே! பொய்யை விட்டு, உன்னை நீ மிகவும் பாதுகாத்துக் கொள். பொய் சொல்வதானது பறவையின் இறைச்சியைப் போன்று மிகவும் சுவையாகத் தெரிந்தாலும், மிக விரைவில் பொய் சொல்பவனுடன் பகைமைக்குக் காரணமாக்கிவிடும்.
  • மகனே! ஜனாஸாவில் மிக பேணுதலாக கலந்துகொள். ஆனால், திருவிழா வைபவங்களில் கலந்து கொள்வதை தவிர்ந்திருப்பாயாக! ஏனெனில், ஜனாஸா மறுமையின் நினைவை புதுப்பிக்கின்றது; ஆனால், வைபவங்கள் உலக ஆசைகளின் பக்கம் ஈடுபடுத்தக்கூடியதாய் இருக்கின்றன.
  • மகனே! எப்பொழுது வயிறு நிரம்பி இருக்குமோ, அப்பொழுது சாப்பிட வேண்டாம். வயிறு நிரம்பி இருக்கும் போது சாப்பிடுவது உடலுக்கு நோயை கொண்டுவருவதோடு, ஆன்ம பலத்தையும் குறைந்திடச் செய்யும்.
  • மகனே! ஜனங்கள் உன்னை விழுங்கிவிடுமளவு நீ அவ்வளவு இனிப்பாக ஆகிவிடாதே! அதே சமயம் ஜனங்கள் துப்பிவிடும் அளவு நீ கசப்பாகவும் ஆகிவிடாதே!
  • மகனே! சேவலைவிட மோசமானவனாக ஆகிவிடாதே! அதுவோ ஸஹருடைய நேரத்தில் விழித்து கூவ ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் நீயோ படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறாய்!
  • மகனே! தவ்பா செய்வதில் தாமதம் செய்யாதே! ஏனெனில், மரணம் வருவதற்கு எந்த நேரம் என்பது நிர்ணயமில்லை. அதுவோ, திடுகூறாக வந்துவிடுகிறது.
  • மகனே! அறிவிலியுடன் நட்பு கொள்ளாதே. ஏனெனில், அவனுடைய அறிவற்ற பேச்சுக்கள் உனக்கு நல்லதென தோன்ற ஆரம்பித்துவிடக்கூடும்.
  • ஹகீம் என்னும் ஞானவான்களின் பகைமையை விலைக்கு வாங்காதே! ஏனெனில், அவர்கள் உன்னை வெறுத்துவிடும் நிலை உண்டாகிவிடக்கூடும். (அதனால் அவர்களுடைய ஞான மொழிகளை விட்டு நீ விலக்கப்பட்டவனாக ஆகிவிடக் கூடாது).
  • மகனே! உன்னுடைய உணவை இறையச்சமுடைய முத்தகீன்களைத் தவிர வேறு யாரும் உண்ண அளிக்காதே! உனது அலுவல்களில் உலமாக்களின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்!
  • அன்னாரிடம் ஒருவர், ‘மிக மோசமான மனிதன் யார்?’ என வினவினார். அதற்கு அன்னார், ‘தான் கெட்ட செயல் புரிவதை யாரும் பார்ப்பதைக் கூட லட்சியம் செய்யாத மனிதனேயாவான்’ என்றார்கள்.
  • மேலும், மகனே! சான்றோர்களுடன் சேர்ந்து உட்காருவதை அதிகப்படுத்திக் கொள்வாயாக! ஏனெனில், அவர்களுடன் உட்காருவதால் நன்மையை பெற்றுக் கொள்வாய்! சில சமயம் அவர்கள் மீது அல்லாஹ்வின் விசேஷ ரஹ்மத்துகள் இறங்கினால், அதிலிருந்து உனக்கும் ஒரு சிறிதாவது நிச்சயம் கிடைத்தே தீரும்.
  • மேலும் உன்னை கெட்ட மனிதர்களின் கூட்டுறவிலிருந்து தூர விலக்கி வை. ஏனெனில், அவர்களுடன் சேர்ந்திருப்பதில் எந்த நலவையும் எதிர்பார்க்க முடியாது. அத்துடன் சில சமயம் அவர்களின் மீது வேதனை இறங்குமானால் அதன் பிரதிபலிப்பு உன்னையும் சூழத்தான் செய்யும்.
  • மகனே! ஈமானுக்கு அடுத்ததாக நீ சம்பாதித்துக் கொள்ள வேண்டிய முதல் விஷயம், நற்செயல் நிறைந்த நண்பனை நீ ஏற்படுத்திக் கொள்வதுதான். அத்தகைய நண்பனுக்கு உதாரணம் ஒரு பேரீச்ச மரத்தைப் போன்றதாகும். அதன் கீழே நீ உட்கார்ந்தால் அது உனக்கு நிழல் தரும். அதனுடைய விறகை நீ எடுத்து வந்தால், உனக்குப் பலன் தரும். அதனுடைய பழத்தை நீ சாப்பிட்டால் இனிமையானதாகப் பெற்றுக் கொள்வாய்.
  • லுக்மான் (அலை) அவர்கள் மேலும் கூறியதாவது: தண்ணீர் விவசாயத்திற்கு பயனளிப்பது போன்று தந்தையின் அடி, மக்களுக்காக பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது.
  • மகனே! நீ என்றிலிருந்து உலகில் வந்தாயோ அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மறுமைக்குச் சமீபமாகிக் கொண்டே போகிறாய். எனவே நீ தினமும் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் அந்த வீடானது எதனைவிட்டு தினமும் தூர விலகிச் சென்று கொண்டிருக்கிறாயோ, அதனை விட மிக சமீபமாக இருக்கிறது.
  • மகனே! கடனைவிட்டு உன்னை காப்பாற்றிக்கொள்! ஏனெனில், அது பகலில் கேவலத்தையும் இரவில் சஞ்சலத்தையும் தரக்கூடியது. (அதாவது கடன் கொடுத்தவருடைய தொல்லையினால், பகலில் கேவலமும், இரவு முழுவதும் கடன் அடைப்பது எப்படி என்ற கவலையில் கழிப்பதாக இருக்கும்).
  • மகனே! அல்லாஹ்வின் ரஹ்மத்தைக் கொண்டு எந்த அளவு நம்பிக்கை வைக்க வேண்டுமென்றால், அதனால் பாவங்களின் மீது துணிவு உண்டாகிவிடக் கூடாது. மேலும் அவனை அஞ்சி எவ்வாறு பயப்பட வேண்டுமென்றால் அவனுடைய ரஹ்மத்திலிருந்து அவநம்பிக்கை கொண்டுவிடக்கூடாது.
  • மகனே! உன்னிடம் ஒருவன் வந்து இன்ன மனிதன் என்னுடைய இருவிழிகளையும் உடைத்துவிட்டான் என்று முறையிட, உண்மையில் அவனுடைய இரண்டு விழிகளும் வெளிப்பட்டு இருந்த போதிலும் என்ன செய்தி என்பதை மற்றவனிடம் தீர விசாரிக்காமல், எந்தத் தீர்மானத்திற்கும் வந்துவிடாதே! இவனே அநியாயம் செய்ய முற்பட்டிருக்கலாம்.
  • மகனே! பொறாமைக்காரனுக்கு மூன்று அடையாளங்கள் உள்ளன:
  1. தன் நண்பன் இல்லாத நேரத்தில் அவனைப் பற்றிப் புறங்கூறுவான்.
  2. அவன் முன்னாலிருந்தால் (நாவினால் மட்டும்) அவனை நன்றாகப் புகழ்வான்.
  3. அவனுக்குத் துன்பம் ஏதேனும் ஏற்பட்டால் மகிழ்ச்சியடைவான்.

மேற்கண்ட ஞானமொழிகள் அனைத்தும் மனதில் பதியச்செய்து, ஆழ்ந்து சிந்தித்து நம் வாழ்வில் கொண்டு வந்தால் ஈருலக வாழ்விலும் நிம்மதி அடையலாம்.

Share.

Get new Posts

க ரு த் து க ள் F E E D B A C K S