அல்லாஹ் குர்ஆனில்:
وَنَجَّيْنَا الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
அவர்களில் நம்பிக்கை கொண்டு (பாவத்திலிருந்து) விலகிக் கொண்டவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
— சூரா ஹாமீம் ஸஜ்தா : 18
வேண்டுமென்றே தெரிந்துகொண்டே பாவத்தைச் செய்வது இப்லீசின் வழியாகவும், செய்துவிட்ட தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பது நபி ஆதம் (அலை) அவர்களின் வழியாகவும் இருக்கிறது.
ஒருவர் பொய் சொல்லிவிட்டு, தான் செய்தது சரி என்று எண்ணுவாரானால், அவரை பெரும்பாவங்களின் பக்கம் கொண்டு செல்வது ஷைத்தானுக்கு எளிதாகிவிடும்.
அதே சமயம், தான் பொய் கூறியது தவறு என்றெண்ணி அதற்காக அல்லாஹ்விடம் மன்றாடி மன்னிப்பு பெற நினைப்பாரானால், அவர் ஷைத்தானுக்கு மிகக் கடினமானவராகி விடுகிறார்.
பாவம் செய்யாத மனிதர்களில்லை. ஆனால், பாவத்தின் மீது தொடர்ந்து நிலை பெற்றிருப்பது இறைவனிடம் மிகுந்த கோபத்தை பெற்றுத்தரும்.
பாவம் செய்வது மனிதர்களின் சுபாவமாக இருந்தால், மன்னிப்பது அல்லாஹ்வின் குணமாக இருக்கிறது. யார் தன் பாவத்தை நினைத்து உள்ளத்தால் வருந்தி, அதிலிருந்து மீள வேண்டும் என அழுகிறார்களோ, அவர்களின் பாவத்தை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்.
பாவங்களை தவிர்க்க பழகிக் கொள்ள வேண்டும். பாவம் செய்வதை நம்முடைய இயல்பாக ஆக்கிக் கொண்டால் பிறகு அது பாவம் என்றே நாம் உணரமாட்டோம். மேலும் அதற்காக வருந்தி தவ்பாவும் செய்ய மாட்டோம்.
பிறரின் வீட்டில் அனுமதி இன்றி நுழைவது, அடுத்தவர் பொருளை அனுமதி வாங்காமல் உபயோகிப்பது, பிறரை பொய் சொல்லத் தூண்டுவது, கடனை நிறைவேற்றாமல் வேண்டுமென்றே இழுத்தடிப்பது, பள்ளிவாசலில் சண்டையிடுவது, தொழுகைக்கு செல்லாமலேயே பள்ளியின் கக்கூஸை பயன்படுத்துவது இவையெல்லாம் பாவங்கள்தான். ஆனால், நம்மில் பலர் இதனை வழமையான செயல்களில் ஒன்றாக வைத்துள்ளனர்.
கணவனைப் பற்றி மனைவியிடமும், மனைவியைப் பற்றி கணவனிடமும் குறை சொல்லிக்கொடுத்து பகைமை உண்டாக்குவது, உறவினர்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் இன்னார் உன்னைப் பற்றி இன்னது சொன்னார் என்று கோள் சொல்வது, ஏழையைத் தாழ்த்தியும், வசதி படைத்தவரை உயர்த்தியும் நடத்துவது, ஒருவரின் இரகசியத்தை அம்பலப்படுத்துவது, பிறரது பேச்சை ஒட்டுக்கேட்பது என இவையனைத்தும் பெரும்பாவச் செயல்களேயாகும்.
எதையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்து வைத்துள்ளார்களோ அதை செய்வது பாவம் என்பதுபோல் எதனை அவர்கள் செய்யும்படி ஏவியிருந்து அதை விடுகிறோமோ அதுவும் பாவமே.
பிறரின் குறைகளைப் பார்த்து அதனை விமர்சனம் செய்பவர், அந்தப் பாவத்தைத் தன் வாழ்நாளில் செய்யாமல் மரணிக்க மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
எனவே, பிறரிடம் பழகும்போது அவரின் நற்செயலை மட்டுமே பார்த்தால், அது தன்னிடத்தில் வரக் காரணமாக இருக்கும். பிறரின் பாவத்தைப் பார்ப்பதால், நம்மை அறியாமலேயே அதில் ஈர்க்கப்பட்டு விடுவோம்.
செயலைக் கொண்டே செயல் உருவாகிறது. பிறரிடம் நல்லதைப் பார்ப்பவன் தன்னிலும் நல்லதைக் காண்பார். பிறரிடம் தீமையைப் பார்ப்பவர் தம்மிலும் தீமையைக் காண்பார்.
வியாபாரத்தில் எடை மோசடி, வாக்கு மோசடி, நிறுவையில் மோசடி, வட்டியில் ஈடுபடுதல், கலப்படம் செய்தல் இது போன்றவை பாவங்கள் என்று எண்ணாமல் பணம் சம்பாதிக்கும் வழி என்று கருதி அதில் நீடித்தால், இறுதியில் சொத்து சுகங்களும் பிடுங்கப்பட்டு, நிம்மதியும் பறிபோய், இறுதியில் மீளமுடியா பாவச் சுமைகளோடு மரணிக்க நேரிடும். அதனால் மறுமை வாழ்வு மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகும்.
மனிதர்களிடம் கோள் சொல்லுதல், புறம் பேசுதல், பொய் பேசுதல், நயவஞ்சகமான பேச்சு, பிறரைக் குறை பேசுதல் ஆகியவை பாவப் பேச்சுக்களாகும்.
ஒருவருடைய பேச்சை ஒளிந்து நின்று கேட்பது அதனை அவருக்கு எதிராகப் பயன்படுத்துவது, பிறரது செயல்களைத் துருவித்துருவி ஆராய்வது, ஒருவருடைய வெளிரங்கமான செயலைப் பார்த்து அவன் நரகவாதி என்று தீர்ப்புச் செய்வது, பிறரது இரகசியங்களை வெளியிடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பாவங்களாகும்.
எடை மோசடி, பணமோசடி, சொத்து மோசடி, பிறரது நிலங்களை கைபற்றுதல் இதுபோன்ற பணம் சம்பந்தப்பட்ட தவறுகள் செய்தால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் அதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. மாறாக, உடமைக்கு உரியவரிடம் உடமையை சேர்க்க வேண்டும். அது மிக முக்கியமாகும்.
செய்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுவது, அநியாயமாக பழி சுமத்துவது, தாம் அறியாத ஒரு விஷயத்தை அறிந்ததுபோல் பேசுவது, அடுத்தவர் உரிமையைத் தட்டிப் பறிப்பது இதுபோன்ற பாவங்கள் அன்றாட செயல்களில் பழகிவிட்ட ஒன்று.
தன்னுடைய இபாதத் எனும் வணக்கவழிபாடுகளை பிறரிடம் கூறி தன்னைப் பெருமையடிப்பதும் பாவச் செயலே ஆகும்.
குர்ஆன் ஓதத் தெரியாமலேயே இருப்பதையும், ஓதத் தெரிந்தவர் ஓதாமல் இருப்பதையும் பாவம் என்று கருதுவதில்லை. இவை வாழ்வின் பெரும் நஷ்டங்களாகும்.
மார்க்கப் பிரசங்கம் செய்துவிட்டு பிறர் தன் பேச்சை புகழ வேண்டும் என விரும்புவது அல்லாஹ்விடம் மிகவும் வெறுக்கத்தக்க செயலாகும். தான் புகழப்பட வேண்டும் என்று விரும்புவது இணைவைத்தல் என்ற பெரும்பாவத்தின் பங்காக அது ஆகிவிடும்.
லஞ்சம் ஊழல் போன்றவைகளை செய்துவிட்டால் அந்த பணத்தை அதற்கு உரிமை உடையவர்களிடம் சேர்க்க வேண்டும்.
பணம் சொத்து இவைகளை கையகப்படுத்தி வைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டல் ஏற்புடைய செயல் இல்லை.
ஒலு, தொழுகை, குளிப்பு சட்டங்கள் இன்னும் இதர வணக்க வழிபாடுகளின் சட்டங்களை அறிந்து கொள்ளாமல், மனதில் தோன்றியவாறு நிறைவேற்றுவது இறைக்கட்டளையைப் பாழ்படுத்தும் பெரும்பாவங்களாகும். ஆனால், பலர் இதனைத் தகுதிக்குறைவு என்று நினைக்கின்றனரே தவிர பாவம் என்று கூட கருதுவதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களைப் பின்பற்றி நடந்தால் எவ்வாறு நன்மை கிடைக்குமோ, அதுபோல் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துகளை விட்டு விலகி நடப்பதும் பாவமே.
ஆண்கள் தாடி வைக்காமல் இருப்பது, ஆண்கள் தங்கம் அணிவது, பெண்கள் ஹிஜாப் இன்றி வீட்டை விட்டு அந்நியர்களுக்கு மத்தியில் செல்வது, ஆண் குழந்தைகளுக்குத் தங்க ஆபரணங்கள் அணிவிப்பது, பெண் பிள்ளைக்கு ஆணைப்போன்ற ஆடை அணிவிப்பது ஆகியவையும் பாவங்களேயாகும்.
நபி(ஸல்) அவர்கள் சாப்பிடுவது, தூங்குவது, மலஜலம் கழிப்பது என ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் உதவி வேண்டி பிரார்த்தனையைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனை ஓதாமல் அந்த செயலில் ஈடுபடுவது பாவமேயாகும்.
நபி(ஸல்) அவர்கள் விரும்பிய ஒன்றை வெறுப்பது ஈமானுடையவர்களுக்கு நல்லதல்ல.
சிலர் ஜுமுஆ தொழுகையில் இமாம் குத்பா ஓதும்போது பேசிக்கொள்கின்றனர். இமாம் குத்பா ஓத மிம்பரில் ஏறிவிட்டால், ஜுமுஆ தொழுகை ஆரம்பித்துவிடுகிறது. ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்வதோ அல்லது சைகினை செய்வதோ கூடாத செயல். இதனை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: எவர் ஒருவர் மற்றொருவரின், தவ்பா செய்துவிட்ட குற்றத்தைப் பற்றிக் குறை கூறுகிறாரோ, அவர் அந்தப் பாவத்தில் சிக்காதவரை மரணம் அடையமாட்டார்.
— திர்மிதீ
ஒருவர் ஒரு பாவம் செய்வதை மற்றொருவர் பார்த்துவிடுகிறார். இவர் பிறரிடம் இன்னார் இன்ன பாவம் செய்யக் கண்டேன் என்று கூறித் திரிகிறார்.
ஆனால், பாவம் செய்தவரோ, தனிமையில் அமர்ந்து அல்லாஹ்விடம் தவ்பா-பாவமன்னிப்பு கேட்டார். அல்லாஹ் அவரின் பாவத்தை மன்னித்துவிட்டான் என்பதை இவர் அறிந்து கொள்ளமாட்டார்.
இந்நிலையில் இவரைப் பற்றி அவர் சொல்லித் திரிவது வீண் வேலையாகும். இன்னும், பாவம் செய்துவிட்டவர் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்றதை அறியாமல், இவர் அதனைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தால் இவர் அந்தப் பாவத்தை செய்யாமல் மரணிக்க மாட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது எச்சரிக்கை மிகுந்த விஷயமாகும்.
தவ்பா என்பது அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பதாகும். அதன் நிபந்தனை, செய்த பாவத்தைக் குறித்து மனவேதனைப்படுவது. இன்னும் அந்தப் பாவத்தை இனி செய்யமாட்டேன் என்று மனதில் உறுதி கொண்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால், மன்னிப்பு கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: எவர் பேணுதலாக பாவமன்னிப்புத் தேடுவாரோ அவருக்கு அல்லாஹுதஆலா ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் வெளியாகும் வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறான். அனைத்துக் கவலைகளிலிருந்தும் ஈடேற்றம் அளிக்கிறான். அவர் நினைத்துப் பார்த்திராத முறையில் அவருடையத் தேவையை நிறைவேற்றுகிறான்.
— அபூதாவூத்
அல்லாஹ் குர்ஆனில்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பாச் செய்து, பாவ மன்னிப்புப் பெறுங்கள். உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டு நீக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்.
— சூரா அத்தஹ்ரீம்:8
பெரும்பாவங்கள் ஈமான் எனும் இறைநம்பிக்கையைப் பறிக்கக்கூடியது. சிறிய பாவங்கள் அதிகமாகிவிட்டால் அவை பெரும்பாவத்திற்கு மனிதனை இட்டுச் செல்லும்.
உங்களைப் பாவங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள். மனிதன் சில பாவங்களைச் செய்கிறான். அதன் பீடைத்தனத்தால் இல்முடைய ஒரு பகுதியை அவன் மறந்து விடுகிறான். இன்னும் சில பாவங்கள் எத்தகையவை என்றால் அவற்றின் காரணமாக தஹஜ்ஜுத் இரவில் கண்விழித்து வணங்குவது கஷ்டமாகிவிடுகிறது. மேலும், சில பாவங்கள் எப்படிப்பட்டவை என்றால் அவற்றைச் செய்வதால் அவனை வந்தடையத் தயாராக இருந்த இரணம் தவறிப்போய் விடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் உபதேசித்ததாக நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَإِنِّي لَغَفَّارٌ لِمَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى
எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து நேர்வழியும் அடைகிறானோ, அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கிறேன்.
— சூரா தாஹா : 82
பாவமன்னிப்புக் கேட்பதன் மூலம் உலக காரியங்களில் ஏற்பட்டிருக்கும் எத்தனையோ பல நெருக்கடியை விட்டு வெளியாகும் வழி உண்டாகிறது. கவலை, விரக்தி, மன சஞ்சலம் இவைகளிலிருந்து விடுதலை பெறலாம். மேலும் நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் எத்தனையோ நற்காரியங்களுக்கு இறைவனின் உதவியைப் பெறலாம்.
பாவமன்னிப்பு (தவ்பா) என்பது செய்துவிட்ட பாவத்தை நினைத்து வருந்தி இறைவனின் சமூகத்தில் mன்றாடி மன்னிப்பு பெறுவதோடு, அத்துடன், தான் இந்த பாவத்தைவிட்டு விலகிக் கொள்வதாகவும், மீண்டும் இந்த பாவமான காரியத்தின் பக்கம் செல்லமாட்டேன் என்று உறுதியான எண்ணம் கொள்வதாகும்.
