இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அஹ்லுல் பைத் இமாம் ஹுசைன் (ரலி) அவர்களின் சந்ததியில் ஹசன் அன்வர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகளாக நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 145 ரபியுல் அவ்வல் பிறை 11 அன்று மக்காவில் பிறந்தார்கள்; பிறகு மதீனாவில் வளர்ந்தார்கள்.

மதீனாவில் மஸ்ஜிதுன் நபவியில் உள்ள உலமாக்களிடம் குர்ஆனை மனனம் செய்தார்கள். மஸ்ஜிதுன் நபவியில் இருந்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ‘முஅத்தா’ நூல் மற்றும் ஹதீஸ் கலையை கற்று, மாபெரும் கல்வியாளராக திகழ்ந்தார்கள். இவர்களுடைய கல்வி அறிவை அறிந்தவர்கள் ‘நஃபீஸத்துல் உலூம் – கல்வித் தாய்’ என்று அழைத்தனர்.

இமாம் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களின் பேரர் இஸ்ஹாக் பின் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களிடமிருந்து தஸவ்வுஃப் கலையை கற்றார்கள்.

இவருக்கு ‘காசிம்’ என்ற ஒரு ஆண்மகனும் ‘உம்மு குல்சூம்’ என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.

பின்னர் இவர்கள் தன் முழு நேரத்தையும் கல்வி வளர்ச்சிக்காகவும், மக்களிடம் ஈமானிய ஒளியைப் பரப்பவும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

பின்னர் ஹிஜ்ரி 193 -ல் ரமலான் பிறை 26 அன்று எகிப்தின் மிஸ்ரு சென்றடைந்தார்கள். அங்கிருந்த அறிஞர்களும், ஆட்சியாளர்களும் ஊருக்கு வெளியே வந்து அன்னை நஃபீஸா அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார்கள். அன்னையவர்களுடன் கணவர், பிள்ளைகள், மற்றும் தன் தந்தை ஆகியவர்களும் இருந்தார்கள்.

முதலில் ஜமாலுத்தீன் அப்துல்லாஹ் அல்ஜுஸாஸ் என்ற பெரு வணிகரின் மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்தார்கள். பின்னர் உம்மு ஹானி எனும் பெண் அழைத்ததற்காக கெய்ரோ நகரத்தில் சிறியதொரு வீட்டில் தங்கிக்கொண்டு மக்களுக்கு கல்வியை கற்பிக்கத் தொடங்கினார்கள்.

அவர்கள் கல்வி கற்பிப்பதற்காக சில நாட்களை தேர்ந்தெடுத்து அறிவித்திருந்தார்கள். அந்த நாளை எவரும் வீணாக்காமல் அந்த சபையில் வந்து கலந்து கொண்டார்கள். மேலும் அவ்வூரின் ஆண்களும் பெண்களும் அவர்களின் துஆவை பெறுவதற்காக காத்திருந்தார்கள். அல்லாஹுதஆலா நஃபீஸா அவர்களுக்கு துஆவின் கபூலியத்தை அளித்திருந்தான்.

இவர்கள் நடத்துகிற திக்ரிலும் கல்வி மஜ்லிஸிலும் பெருங்கொண்ட கூட்டத்தினர் கூடினார்கள். ஆகவே அந்த உம்மு ஹானி அவர்களின் சிறிய வீடு போதவில்லை. பின்னர் ‘சரியீ பின் ஹகம்’ என்பவர் மிகப்பெரும் வீட்டை அன்பளித்தார். அவ்வீட்டில் வாரத்திற்கு இரண்டு நாள் கல்வி போதனையும் திக்ரு மஜ்லிஸும் நடைபெற்றது. அதில் ஆயிரக் கணக்கானோர் வந்து கலந்து கொண்டார்கள். (அதாவது கெய்ரோ நகரத்திலிருந்த வீடுகள் அனைத்தும் காலியாகக் கிடந்தன. இந்த ஒரு வீட்டைத் தவிர என்று சொல்லுவார்கள்.)

நபிகளாரின் சந்ததியினர் என்பதனாலும், அவர்களின் இறையச்சத்தையூட்டும் பேச்சினாலும் கவரப்பட்ட கெய்ரோ வாசிகள் நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்களை மிகவும் கண்ணியப் படுத்தினார்கள்.

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்களின் அவையில் வந்து அமர வேண்டும் என்பதில் மிகவும் ஆவலாக இருந்தார்கள்; அவ்வப்போது வந்து அமர்வார்கள்.

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களுக்கு நோய் ஏற்படும்போதெல்லாம் ஒரு தூதுவரை நஃபீஸத்துல் மிஸ்ரியா அவர்களிடம் அனுப்பி வைப்பார்கள். அவர் வந்து, ‘தங்கள் சிறிய தந்தையின் மகன் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் நோயாளியாக இருக்கிறார்கள். தங்களின் துஆவுக்காக வேண்டினார்கள்’ என்றார்.

உடனே அம்மையார் துஆ செய்ததும் இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் அங்கே நலம் பெற்று விடுவார்கள்.

சில சமயம் வந்திருந்த தூதுவரிடம், கண்ணியமான இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் முகத்தை அல்லாஹ் பார்ப்பதின் காரணமாக சுகம் அளிப்பானாக’ என்று கூறுவார்கள். அதாவது இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களை அல்லாஹ் பார்க்கட்டும் என பிரார்த்தனை செய்வார்கள்.

நஃபீஸத்துல் மிஸ்ரியா (ரஹ்) அவர்கள் முப்பது முறை ஹஜ்ஜை, நடந்தே சென்று நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஹிஜ்ரி 208 -ம் ஆண்டு, ரஜப் மாதத்தின் முதல் பிறை முதல் ரமலான் முதல் பிறை முதல் நாள் அன்று வரை நபில் நோன்பு நோற்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். அப்படி அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது கடுமையான நோய் ஏற்பட்டது. அதனால் மருத்துவர்கள் நோன்பை விடும்படி வேண்டினார்கள்.

அப்பொழுது அவர்கள், ‘நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் மரணிக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்’ என்று கூறினார்கள்.

இந்நிலையில் ஸூரத்துல் அல்அன்ஆம் 126-வது வசனத்தை ஓதினார்கள்.

لَهُمْ دَارُ السَّلَامِ عِندَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் தாருஸ்ஸலாம் எனும் சொர்க்கம் உண்டு. அவர்கள் செய்த நன்மைகளின் காரணமாக அவன் அவர்களுக்கு பாதுகாவலாக இருக்கிறான்’ எனும் வசனத்தை ஓதும்போது அவர்களுடைய ஆன்மா அல்லாஹ்வை சென்றடைந்தது.

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹi ராஜிவூன்.

அவர்களின் கணவர் ஹஜ்ரத் இஸ்ஹாக் பின் ஜாஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள் மதீனாவிற்கு ஜனாசாவை கொண்டு சென்று ஜன்னத்துல் பகீயில் அடக்கம் செய்யவேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால் மிஸ்ருவாசிகள் சம்மதிக்கவில்லை. இங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினர். எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஓர் இரவு கழிந்தது.

அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றி,

‘இஸ்ஹாக்! நஃபீஸா விஷயத்தில் மிஸ்ருவாசிகளின் கருத்துக்கு முரண்படாதீர்! நஃபீஸா இங்கே அடக்கம் செய்யப்படுவதின் காரணமாக மிஸ்ருவாசிகளும் அருள் வழங்கப்படுவர்’ என்று கூறினார்கள்.

பின்னர் நஃபிஸா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் வழமையாக தொழுது வந்த இடத்தில், தானே தோண்டி வைத்திருந்த கப்ரில் ஸய்யிதா நஃபீஸா (ரஹ்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இன்று இந்த இடம் மிஸ்ரு – கெய்ரோ பட்டினத்தில் ‘தர்புஸ் ஸிபாவு ‘ எனும் இடத்தில் இருக்கிறது.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version