இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களின் கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது அண்ணலார் அவர்கள், “நான் இன்று இரவு சுவர்க்கத்தையும் அதில் உங்களின் அந்தஸ்துகளையும் கண்டேன்” எனக் கூறிய பிறகு ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களின் பக்கமாக கவனம் செலுத்தி, “நான் ஒரு மனிதரைக் கண்டேன். அவர் சுவர்க்கத்தின் எந்தத் தலைவாசலின் வழியே நுழையச் சென்றாலும், அங்கிருந்து மர்ஹபா! மர்ஹபா! (வருக! வருக!) என்ற சப்தங்கள் வந்து கொண்டிருந்தன”.

ஒவ்வொரு நல்ல அமலுக்கும் சுவர்க்கத்தில் ஒரு விஷேச தனி வாசல் உண்டு. எல்லா வாசல்களிலிருந்தும் வரவேற்பு கொடுக்கப்பட்டதின் அர்த்தமாவது, எல்லா வகையான நல்ல அமல்களிலும் அம்மனிதர் உயர்ந்து சிறந்திருந்தார் என்பதாகும்.

ஹழ்ரத் ஸல்மான் (ரலி) அவர்கள், “யாரஸுலல்லாஹ்! எவருடைய அந்தஸ்து இத்தகையதெனில் அவரே மிகவும் உயர்ந்த நிலை அடைந்தவராக அல்லவா இருப்பார்!” எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அம்மனிதர் அபூபக்ர் அவர்கள் ஆவார்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள், ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் பக்கம் கவனம் செலுத்தியவர்களாக, “நான் சுவர்க்கத்தின் வெண்மையான முத்தாலான ஒரு மாளிகையைக் கண்டேன். அதில் யாகூத் என்னும் மரகத ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இது யாருடைய மாளிகை?” என விசாரித்தேன்.

அதற்கு “இது குறைஷி குலத்தைச் சார்ந்த ஒரு வாலிபருடையது” என எனக்குச் சொல்லப்பட்டது.

“அம்மாளிகையின் எல்லையில்லா வனப்பும். வசீகரமும், பிரகாசமும், அழகும் கண்டு, நான் நபிமார்களின் தலைவர் என்பதால் இம்மாளிகை எனக்குரியதோ என எண்ணியவனாக நான் அதில் பிரவேசிக்க முற்பட்டபோது, இது உமர் (ரலி) அவர்களுடையது என சொல்லப்பட்டது”.

இதற்குப்பிறகு நபி(ஸல்) அவர்கள் ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், ஹழ்ரத் அலி (ரலி) ஆகிய பல ஸஹாபாக்களின் அந்தஸ்துகள் பற்றி பிரஸ்தாபித்தார்கள். இறுதியில் ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்களின் பக்கம் செலுத்தியவர்களாக கூறலானார்கள்.

“எனது தோழர்களில் நீர்தான் மிகத் தாமதமாக என்னிடம் வந்தடைந்தீர். எனக்கோ உமது விஷயத்தில் எங்கு சோதனையில் சிக்கிவிட்டீரோ என்று அச்சம் உண்டாகிவிட்டது. மேலும், நீர் வியர்த்து விறுவிறுத்தவராகக் காணப்பட்டீர். இவ்வளவு தாமதமாக இங்கு வருவதில் நேரம் எங்கு கழிந்தது? என நான் உம்மிடம் கேட்டேன்”.

“அதற்கு நீர், நான் எனது செல்வத்தின் பெருக்கத்தின் காரணமாக கேள்விக் கணக்கில் சிக்கி இருந்தேன். அதாவது, பொருளை எவ்வாறு சம்பாதித்தாய்? அதனை எவ்விதம் செலவழித்தாய்? என என்னிடம் அது குறித்து விசாரணை நடைபெற்றது என்பதாக நீர் என்னிடம் கூறினீர்”.

இதைக்கேட்டு ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு, “யாரஸுலல்லாஹ்! நேற்று இரவு எனக்கு மிஸர் நாட்டிலிருந்து நூறு வியாபார ஒட்டகங்கள் வந்துள்ளன. நான் அவைகளை மதீனா முனவ்வராவில் வாழும் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும் ஸதகா செய்துவிடுகின்றேன். ஒருக்கால் அல்லாஹ் இதன் காரணமாக அந்த நாளில் கேள்வி கணக்கை இலேசாக்கக்கூடும்” என கூறினார்கள்.

-தர்கீப்

மேலும் ஒரு ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள், “அப்துர் ரஹ்மானே! நீர் எனது உம்மத்தின் செல்வந்தர்களில் உள்ளவர் ஆவீர். எனவே, சுவர்க்கத்தில் கால் இழுத்தவாறு செல்வீர். நீர்அல்லாஹ்வுக்காகக் கடன் அளிப்பீராக! அதன் காரணமாக உமது கால்கள் அவிழ்த்துவிடப்படும்” எனக் கூறினார்கள்.

அதற்கு ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள், “யாரஸூலல்லாஹ்! அல்லாஹ்வுக்காக எப்பொருளை கடனாக அளிப்பது?” என வினவ, “உமது சகல செல்வத்தையும்” என நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

இதைக் கேட்டதும் சகல செல்வத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்து விடுவதற்காக அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் எழுந்து சென்றார்கள்.

பிறகு, நபி(ஸல்) அவர்கள், அவர்களை அழைத்துவர ஒருவரை பின்னாலேயே அனுப்பி வைத்தார்கள். ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் அவர்கள் திரும்பி வந்தபோது, “ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் இப்போது வருகை தந்து, அப்துர் ரஹ்மானிடம் விருந்து உபசரிக்குமாறும், ஏழைகளுக்கு உணவு அளிக்குமாறும், யாசிப்போரின் யாசகத்தைப் பூர்த்தி செய்யுமாறும், தனது சுற்றத்தாரிலிருந்து தருமம் செய்வதை ஆரம்பிக்குமாறும் சொல்லிவிடுங்கள்.

இவ்விஷயங்கள் அவரின் செல்வ நிலையைப் பரிசுத்தப்படுத்த போதுமானதாக இருக்கும் என அறிவித்துவிட்டுச் சென்றார்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

– ஹாகிம்

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version