இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நபித்தோழர் முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன் மிக வசதியாக வாழ்ந்து வந்த வாலிபர் ஆவார். மக்காவில் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாக இருந்ததால் அவருடைய தந்தை அவருக்கு இருநூறு திர்ஹங்கள் பெறுமான ஆடைகளை வாங்கி அணிவிப்பார். இளம் வயது வாலிபராக இருந்தார்கள்; செல்வச் செழிப்புடன் வளர்ந்து வந்தார்கள்.

முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களது தந்தை தாய் இருவருமே வசதிமிக்கவர்கள் என்பதால், உயர்தர ஆடை அணிந்ததோடு, உயர்தர நறுமணத்தையும் பூசி இருப்பார்கள். ஒரு தெரு வழியாக முஸ்அப் இப்னு உமைர் சென்றிருக்கிறார் என்பது அந்தத் தெருவிலிருந்து வரும் வாசனையை வைத்து கூறிவிட முடியும்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலேயே வீட்டினருக்குத் தெரியாமல் நபி (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகி விட்டார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து வரும்பொழுது யாரோ ஒருவர் அவர்களுடைய விஷயத்தை அவரின் பெற்றோர்க்குத் தெரியப்படுத்தி விட்டார்.

முஸ்அப் இப்னு உமைரின் தாய், இவர் சென்று நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து விடக்கூடாது என்பதற்காக வீட்டில் இரும்பு சங்கிலியால் பிணைத்து வைக்கப் பட்டிருந்தார்.

அதே நிலையில் சில தினங்கள் இருந்து வந்தார்கள். ஒரு நாள் சந்தர்ப்பம் கிடைத்தபொழுது வீட்டினருக்குத் தெரியாமல் அங்கிருந்து தப்பிச் சென்று அபிசீனியாவிற்கு (எத்தியோப்பியா) ஸஹாபாக்கள் ஹிஜ்ரத் சென்றபோது அவர்களுடன் சேர்ந்து அங்கு சென்று விட்டார்கள்.

பின்னர், அங்கிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து உலகப் பற்றற்ற நிலையிலும் வறுமையிலும் தங்களுடைய வாழ்க்கையைக் கழித்து வந்தார்கள்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் முஸ்அப் (ரலி) அவர்கள் இருக்குமிடத்தின் வழியாகச் சென்றபோது, அவர்களின் மீது ஒரே ஒரு போர்வை மட்டும் இருந்தது. அதுவும் பல இடங்களில் கிழிந்து ஒட்டுப் போடப்பட்டிருந்தது. அதில் ஓர் ஒட்டு துணிக்குப் பதிலாகத் தோலினால் போடப்பட்டிருந்தது. அவர்களுடைய இந்த நிலையையும் இஸ்லாத்திற்கு முன் அவர்கள் இருந்த நிலையையும் எண்ணிப் பார்த்த நபி (ஸல்) அவர்களின் கண்களில் கண்ணீர் ததும்பியது.

உஹதுப் போரின்போது முஹாஜிரீன்களுடைய கொடி முஸ்அப்(ரலி) அவர்களுடைய கரத்தில்தான் கொடுக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்களுக்குத் தோல்வி ஏற்பட்டுச் சிதறி ஓட ஆரம்பித்தபொழுது, அவர்கள் கொடியைப் பிடித்துகொண்டு ஓரிடத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

காபிர் ஒருவன் அவர்களின் அருகில் வந்து, அந்தக் கொடியைக் கீழே விழச்செய்து, முஸ்லிம்களுக்குப் படுதோல்வி ஏற்பட்டுவிட்டது என்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கொடி பிடித்திருந்த அவர்களுடைய கையை வாளினால் வெட்டி வீழ்த்தினான்.

முஸ்அப்(ரலி) அவர்கள் உடனே மற்றொரு கையினால் கொடியைத் தாங்கிப்பிடித்துக் கொண்டார்கள். அவன் அந்தக் கையையும் வெட்டி வீழ்த்தினான். அவர்கள் உடனே கொடி கீழே வீழ்ந்து விடாதவாறு இரு புஜங்களையும் சேர்த்துக் கொடியைத் தாங்கி நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்கள். உடனே அவன் ஓர் அம்பினால் அவர்களைத் தாக்கினான். அவர்கள் ஷஹீதாகி விட்டார்கள். அவர்களின் உயிர் பிரிந்த பிறகுதான் கொடி கீழே விழுந்தது.

உயிர் இருக்கும் வரை அவர்கள் கொடியைக் கீழே விழ விடவில்லை. முஸ்அப் (ரலி) அவர்களின் உயிர் பிரிந்து கொடி கீழே வீழ்ந்தவுடன் உடனடியாக அதனை மற்றொரு ஸஹாபி எடுத்துக் கொண்டார்.

ஹஜ்ரத் முஸ்அப்(ரலி) அவர்களை அடக்கம் செய்வதற்குத் தயாரான பொழுது அவர்களிடம் ஒரு போர்வை மட்டும் இருந்தது. அதன் மூலம் உடல் முழுவதையும் மூட முடியவில்லை. தலையை மூடினால் கால் திறந்து கொண்டது. காலை மூடினால் தலை திறந்து கொண்டது.

துணியினால் தலையை மூடிவிட்டுக் கால்களுக்கு இலை தழைகளை வைத்து மூடிவிடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படிபட்ட மனிதர்களும் இறைநம்பிக்கையுள்ளவர்களில் இருக்கின்றனர். அவர்கள் தம் இறைவனுக்குச் செய்து கொடுத்த உடன்படிக்கையை உண்மையாகவே நிறைவு செய்து விட்டனர் என்ற ஆயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதினார்கள்.

அல்லாஹ்வின் அன்புக்காகவும், நபி(ஸல்) அவர்களின் மீது இருந்த அன்புக்காகவும் தனக்கிருந்த உலக பாக்கியங்களையும் துறந்து உயிரையும் இழந்து, இறுதியில் கஃபன் துணி கூட போதுமானதாக இல்லாத நிலையில் இவ்வுலகை விட்டு சென்றது நமக்கு படிப்பினையான நிகழ்ச்சியாகும்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version