அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
உண்மையையே பேசுங்கள். ஏனெனில் உண்மைதான் நேர்வழியைக் காட்டமுடியும். ஒரு மனிதன் அல்லாஹ்வின் முன் உண்மையாளன் எனப் பதியப்படும் வரை உண்மையையே பேசிக் கொண்டிருப்பான்.
பொய்யிலிருந்து விலகியே இருங்கள். ஏனெனில், பொய் தீமையின் பக்கம் இட்டுச் செல்கின்றது. தீய செயல்கள் நரகத்தில் கொண்டு தள்ளும். ஒருவன் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறான்; அல்லாஹ்வின் முன் அவன் பொய்யன் எனப் பதியப்படும் வரை பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.
— ஃபத்ஹுல் பாரி
பொய், அதனைப் பேசுபவன் தன்னளவில் அழுகிக் கொண்டிருக்கிறான். விளையாட்டுக்காகக் கூட பொய் பேசுவதை இறைவன் அனுமதிக்கவில்லை.
ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருக்கக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.
ஒருவர் பொய் பேசிவிட்டார் என நபியவர்களுக்குத் தெரிந்தால், அவருக்கு ஸலாமும் உரைக்க மாட்டார்கள்; அவரது ஸலாமுக்கு பதிலும் தரமாட்டார்கள். இன்னும் அவரை விட்டு தங்களுடைய முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். அதாவது அவரது முகத்தையும் பார்க்க மாட்டார்கள் என்றால், பொய் எந்தளவு மோசமான செயல் என்பதை நாம் விளங்க வேண்டும்.
ஆனால், நம்மில் பொய் பேசுவது என்பது மிகவும் சரளமாக ஆகிவிட்டது. பிறர் நம்ப வேண்டும் என்பதற்காக தாம் காணாத ஒன்றை கண்டது போலவும், சில வார்த்தைகளை சேர்த்து மிகைப்படுத்தி பொய் கலந்து பேசிவிடுகின்றனர். நம் பேச்சை உற்று கவனிப்பது அவசியம்.
பிறர் சொல்லாத ஒன்றை அவர் சொன்னது போல் கூறுவதும் பொய்யில் சேரும். சிலர் தாம் பொய்யே பேசமாட்டேன் என்று கூறுவதுதான் விந்தையான பொய்யாகும். உண்மையை உரசிப் பார்க்க வேண்டியதில்லை.
பொய் ரிஜ்கை அதாவது இரணத்தையும், அடைய வேண்டிய நலவுகளையும் தூரமாக்கும்.
பணம் சம்பாதிப்பதற்காகப் பொய் பேசுவதும், பொய் சத்தியம் செய்து பொருட்களை விற்பதும் நஷ்டத்தைத் தவிர வேறில்லை. வாடிக்கையாளரிடம் பொருட்களை விற்பனை செய்யும்போது, அப்பொருளின் தரத்திலும், விலையிலும் பொய் கூறுவதானது அந்த வர்க்கத்தையே பாவத்தில் சேர்த்துவிடும். பொய் சொன்னால்தான் விற்க முடியும் என்பது ஒரு முஃமினின் நம்பிக்கையாக இருக்கக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
பொய்யும், நேர்மையற்ற வாக்குறுதியும் பொருளை விற்பனை செய்ய உதவலாம். ஆனால், அது வருமானத்தைக் குறைத்துவிடும்; வளமும் நின்றுவிடும்.
— அஹ்மத்
அதுபோல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? என்று கேட்டு தன் பொய்யை நியாயப்படுத்துவது மிகப்பெரிய தவறாகும்.
ஒரு பக்கம் தேவைகள் நிறைவேற துஆ செய்கிறோம். அல்லது கஷ்டங்கள் நீங்க இறைவனிடம் மன்றாடுகிறோம். இன்னொரு பக்கம் பொய் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இந்நிலையில் பிரார்த்தனை எவ்வாறு நிறைவேறும்?
அஸ்மா பின்த் யஜீத் (ரலி) என்ற ஸஹாபா பெண்மணி கூறுகிறார்கள்: நான் ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘எங்கள் பெண்களில் சிலர் ஒரு பொருளின் மீது ஆசை இருந்தும் அப்பொருளின் மீது ஆசை இல்லை என்று கூறினால், அது ஒரு பொய் என்று கருதப்படுமா?’ என்று கேட்டேன்.
அதற்கு நபி ஸல்) அவர்கள், ‘பொய் பொய்யென்றே எழுதப்படும். பெரிய பொய், பெரிய பொய் என்றும்; சிறிய பொய், சிறிய பொய் என்றும் எழுதப்படும்’ என பதிலளித்தார்கள்.
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு மனிதன் தொடர்ந்து பொய் சொல்லிக் கொண்டே இருக்கின்றான்; நேர்மையில்லாமல் நடந்து கொள்வதைத் தனது வழமையாக ஆக்கிக் கொண்டான். இந்நிலை அவனது இதயத்தில் ஒரு கருப்புப் புள்ளி ஏற்படும் வரை நீடிக்கிறது. மெல்ல மெல்ல இதனால் முழு இதயமும் இருண்டு விடுகின்றது. இந்நிலைமையில் அவனுடைய பெயர் அல்லாஹ்வின் முன் பொய்யர்களின் பட்டியலில் பதியப்பட்டு விடுகின்றது. தன் நாவு என்ன பேச்சை வெளிப்படுத்துகிறது என்று உற்றுப் பார்க்காதவர் மரண இறுதி நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்.
உண்மை என்பது நடந்த நிகழ்வாகும்; பொய் என்பது கற்பனையாகும். கற்பனைக்கு உயிர் கொடுத்து அது உண்மையாக்க முனைவது முட்டாள்தனமானது.
பொய் பேசுபவன் விதியில் எழுதப்பட்ட நலவுகளை இழக்கிறான்; விதியில் எழுதப்படாத துன்பங்களை அடைகிறான்.
பொய் ஈமானைத் தின்றுவிடும்.
