செயல்களில் ஹலால் ஹராம் இருப்பதுபோல், உணவு உண்பதிலும் ஹலால் ஹராம் இருக்கிறது.
- ஹலால் எனும் சொல், இஸ்லாம் அனுமதிக்கப்பட்டவற்றைக் குறிக்கும் அரபிச் சொல்லாகும். மனிதர்களின் நலனுக்காக இறைவனால் ஆகுமாக்கப்பட்டவை அனைத்தும் ஹலால் என்பதாகும்.
- ஹராம் எனும் சொல், இஸ்லாம் தடை விதிப்பவற்றைக் குறிக்கும் அரபிச் சொல்லாகும். மனிதர்களின் நலனுக்காக இறைவனால் விலக்கப்பட்டவை அனைத்தும் ஹராம் என்பதாகும்.
- ஆகுமானவை அல்லது விலக்கப்பட்டதா என்று சந்தேகத்துக்கும் இடமளிக்கும் பொருள் அரபியில் ஷக் (சந்தேகத்திற்குரியது) எனப்படும்.
உடல் மற்றும் ஆன்மாவின் தேவைகளுக்கு இடையே ஒரு சம நிலையைப் பராமரிப்பதற்காக இஸ்லாம் சில விதிகளை வகுத்துள்ளது.
வருவாய் ஈட்டுவதிலும், உணவிலும் எவை ஹலால், எவை ஹராம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருப்பது கட்டாயக் கடமையாகும்.
அல்லாஹ்வினால் ஹராம் என்று அடையாளப் படுத்தப்படுவதை எக்காரணம் கொண்டும் புசிக்கக் கூடாது. மேலும், ஹராமை ஹலாலாக்க முயற்சி செய்வது பெரும் பாவமாகும். இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்களை மாற்ற யாருக்கும் உரிமை கொடுக்கப்படவில்லை.
“நான் பதினாறு வருடங்களாக வயிறு நிரம்ப சாப்பிட்டதில்லை. ஏனெனில், அது உடலை பெருகச் செய்து, உள்ளத்தை இறுகச் செய்து, அறிவை மழுங்கவைத்து, மனிதனைச் சோம்பேறியாக்கி ஆத்மீகவழியில் செல்லவிடாமல் தடுத்துவிடும்.”
— இமாம் ஷாபிஈ (ரஹ்)
கடைகளில் வாங்கப்படும் இறைச்சி ஹலாலானதா என உறுதி செய்யப்படாமல் வாங்குவது கூடாது. அதுபோல் பிஸ்மில்லாஹ் என்று கூறி அறுக்கப்படாத இறைச்சியை உண்ணுவது ஹராமாகும்.
அல்லாஹ் குர்ஆனில்:
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ
நம்பிக்கையாளர்களே! (பிஸ்மில்லாஹ் கூறி அறுக்கப்படாமல்) தானாக செத்ததும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டதும், கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், (mேலிருந்து) கீழே விழுந்து செத்ததும், கொம்பால் குத்திச் செத்ததும், (சிங்கம் புலி போன்ற) வனவிலங்குகள் தின்றவையும் உங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன (ஹராம்).
— சூரா அல்மாயிதா: 3
இஸ்லாத்தில் சில இறைச்சி உணவுகள் உண்ண தடை செய்யப் பட்டுள்ளன. அவை:
- கோரைப்பற்கள் கொண்ட ஊனுண்ணி வகை விலங்குகள் மற்றும் கூர்மையான நகங்களைக் கொண்டு கீறிக் கிழித்துண்ணும் பறவையினங்களின் இறைச்சி.
- பிஸ்மில்லாஹ் கூறி அறுக்கப்படாமல் தானாக செத்துப் போனவற்றின் இறைச்சி.
- பன்றி இறைச்சியும் அதன் முழுஉடலும்.
- இரத்தம்.
- அல்லாஹ் அல்லாதவற்றின் பெயரில் அறுக்கப்பட்டவை
- நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: கோரைப் பற்களுள்ள விலங்கினங்களையும், கூரிய நகங்களால் கீறிக் கிழித்துத் திண்ணும் பறவைகளையும் உண்ணக்கூடாது.
— முஸ்லிம்
இரத்தப் பொறியல் சாப்பிடுவது முஸ்லிம்களுக்கு ஹராமாகும். இவை அனைத்தும் மனிதர்களுக்குள் நோயை தோற்றுவிக்கும் என்பதாலேயே இஸ்லாம் இதனை உண்ண தடை செய்கிறது.
கடல், ஆறு, நீர்நிலைகளில் வாழும் மீன் இனங்களில் இறந்தவற்றைப் புசிக்கலாம். கடல்வாழ் உயிரினங்கள், கால்நடைகளின் அறுப்புச் சட்டங்களுக்கு உட்பட்டவை அல்ல.
