அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ ﴿١١﴾ وَصَاحِبَتِهِ وَأَخِيهِ ﴿١٢﴾ وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ ﴿١٣﴾ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ ﴿١٤﴾ كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ ﴿١٥﴾
குற்றவாளி, அந்நாளில் தன்னுடைய வேதனைக்குப் பரிகாரமாகத் தன்னுடைய பிள்ளைகளையும், தன்னுடைய மனைவிகளையும், தன்னுடைய சகோதரனையும், தன்னை ஆதரித்து வந்த தன்னுடைய சொந்தக்காரர்களையும் இன்னும் பூமியிலுள்ள அனைத்தையும் கொடுத்தேனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள(பிரியப்படுவான்). எனினும் அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பாகும்.
— சூரா அல்மஆரிஜ் : 11-15
ஒருவன் தன் மனைவி மக்களுக்கான உலக செல்வத்தைச் சேகரிப்பதிலேயே மிகுந்த கவனம் கொண்டு தன் வாழ்நாளைத் தொலைத்துவிடுகிறான். மேலும், லஞ்சம் ஊழல் நேர்மையற்ற வழியில் சம்பாதிப்பது அனைத்தும் குடும்பத்தினருக்கு சேர்த்து வைக்கவே! ஆகவே, இவ்வுலகில் அல்லாஹ்வுக்கான தன் கடமைகளில் குறைவு செய்வதற்கு காரணம் குடும்பமே.
அவன் தேடும் செல்வம், அவன் நேசிக்கும் குடும்பம், அவனை இறைவனைப் பற்றிய மறதியை உண்டாக்கிவிட்டது. ஆனால் அத்தகைய நேசமும், இந்த நேசத்திற்கு உரியவர்களும் மறுமைநான்று எவ்விதம் இருப்பார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ
ஸுர் (எக்காளம்) ஊதப்பட்டுவிட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்தத்துவங்கள் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
— சூரா முஃமினூன்: 101
எந்த இறைவன் கணவன், மனைவி, பிள்ளை, சுற்றத்தார் என்று பாசத்தைக் கொடுத்தானோ, அதே இறைவனான அல்லாஹ் மறுமைநாளில் அந்த பந்த பாசத்தை எல்லோரிலிருந்தும் நீக்கிவிடுவான்.
ஒருவரைப் பார்த்து எப்படி இவ்வுலகில் பந்தத்தால் நேசிக்கிறோமோ அதுபோல் அந்நாளில் நேசம் ஏற்படாது. மாறாக, ஒருவரையொருவர் பார்த்து விலகி ஓடுவர்.
அந்நாளில் அவரவர் தமக்கெனச் சேர்த்துக்கொண்ட நன்மையைத் தவிர யாரிடத்திலிருந்தும் எந்தப் பலனும் பெற முடியாது.
மறுமைநாளில் ஒவ்வொரு ஆத்மாவும் தன்னுடைய முடிவு என்னவாகும் என்பதைப் பற்றிய அச்சத்தில் இருக்குமே தவிர, அங்கே யாருக்கும் யாரும் உதவி செய்ய வேண்டுமென்று கவலைப் படமாட்டார்கள்.
இதனைப் பற்றி குர்ஆனில்,
فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿١٠٢﴾ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ ﴿١٠٣
எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்குமோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்குமோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள். அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
— சூரா முஃமினூன்: 102, 103
பெற்றோர்கள் தாங்கள் சேர்த்துவைக்கும் சொத்து மற்றும் செல்வத்தை தங்களுக்குப் பிறகு தங்கள் பிள்ளைகள் இவ்வுலகில் பயன்படுத்திக் கொள்வதைப் போல், மறுமையில் பெற்றோர்களின் அமல்கள் பிள்ளைகளுக்கு எவ்விதத்திலும் பயன்படாது.
அல்லாஹ் குர்ஆனில்,
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ ﴿٣٤﴾ وَأُمِّهِ وَأَبِيهِ ﴿٣٥﴾ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ ﴿٣٦﴾ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ﴿٣٧
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும் விரண்டு ஓடுவான். அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் நிலையே போதுமானதாக இருக்கும்.
— சூரா அபஸ : 34-37
மறுமைநாளன்று பெற்றோர் பிள்ளைகளைக் கண்டு வெருண்டோடுவர். பிள்ளைகள் பெற்றோரைக் கண்டு வெருண்டோடுவர்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் கண்காணிப்பாளரே. உங்கள் கண்காணிப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி உங்கள் ஒவ்வொருவரிடமும் விசாரணை செய்யப்படும்.
— புகாரி
உலகத்தின் வறுமையிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தன் குடும்பத்தாரைக் காப்பாற்றுவது போல், மறுமையின் நரக வேதனையிலிருந்தும், மறுமையின் ஏழ்மையிலிருந்தும் காப்பாற்றுவது குடும்பத் தலைவரின் பொறுப்பாகும்.
அல்லாஹ் குர்ஆனில் குடும்பத்தினருக்கு அல்லாஹ்வைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று கட்டளையிடுகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا
இறைநம்பிக்கையாளர்களே ! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் (நரக) நெருப்பைவிட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
— சூரா அத்தஹ்ரீம் : 6
وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ
இன்னும் நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
— சூரா அஷ்ஷுஅரா : 214
உறவுகள் மறுமைநாளில் எவ்விதத்திலும் அவருக்கு நன்மையைக் கொண்டு உதவப்போவதில்லை.
அவரவர் செயல்களுக்கு அவரவரே பொறுப்பு. இவ்வுலகில் யார் எதனைத் தேடிக் கொள்கிறார்களோ அது அவர்களது செயல்களாகும். ஒருவரின் நன்மை, தீமைகளை இன்னொருவர் கியாமத்நாளில் சுமக்கமாட்டார்.
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ وَإِنْ تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلُ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ
மறுமையில் ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்த போதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்தபோதிலும் இவனுடைய சுமையில் (ஓர் அற்ப அளவையும்) அவன் சுமந்து கொள்ளமாட்டான்.
— சூரா ஃபாதிர்: 18
உலகத்தில் வேண்டுமானால், குடும்பத்திற்குள் வரும் இன்ப துன்பங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், ஒருவரின் சுவர்க்கத்திற்குள் இன்னொருவர் உறவைக் காரணமாக வைத்து நுழைந்துவிடமுடியாது. அதுபோல் ஒருவரின் மீதுள்ள அன்பினால், அவரின் நரக தண்டனையை இன்னொருவர் அனுபவித்துக் கொள்ள முடியாது.
