இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் ரோம் நாட்டுக்கு ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையில் அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா (ரலி) என்ற ஸஹாபியும் இருந்தார்கள். அவர்களை ரோம் நாட்டு படைவீரர்கள் தங்களின் மன்னரிடம் கைது செய்து அழைத்துச் சென்று இவர்கள் முஹம்மது(ஸல்) அவர்களின் தோழர்கள் என்று கூறினர்.

அந்தக் கொடுங்கோல் தாஃகியா பாவியான மன்னர், அவர்களிடம், ‘கிறிஸ்தவராக ஆகிவிட்டால் உம்மை என் ஆட்சி அதிகாரத்தில் உயர் பதவியைக் கொடுத்துக் கூட்டாக்கிக் கொள்வேன்’ என்று கூறினான்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘நான் முஹம்மது(ஸல்) அவர்களின் இஸ்லாமிய மார்க்த்தை விட்டு கண் சிமிட்டும் நேரமாகிலும் விட்டுவிடுவதற்காக, நீ உன் ஆட்சி அனைத்தையும், அரேபியர்களின் ஆட்சியையும் சேர்த்து தருவதானாலும் நான் அதை விட்டு விடத் தயாராக இல்லை’ என்று கூறினார்.

அப்படியானால், ‘உம்மைக் கொலை செய்துவிடுவேன்’ என மன்னன் தாஃகியா கூறினான். அதற்கு, இப்னு ஹுதைஃபா அவர்கள், ‘அது உன் விருப்பம்’ எனக் கூறினார்கள்.

மன்னன் அவர்களைக் கழுமரத்தில் ஏற்றும்படி உத்தரவிட்டான். அவ்வாறே ஏற்றப்பட்டார்கள். பிறகு அம்பெய்பவர்களிடம் அன்னாரை அச்சுறுத்தி தீனை விட்டு வெளியேற்ற அவர்களின் இரு கைகளின் அருகிலும், கால்களின் அருகிலும் அம்பெய்யுமாறு உத்தரவிட்டான்.

அந்நிலையிலும் அவர்கள் தீனை விட்டுவிட மறுக்கவே அவர்களின் உறுதியைப் பார்த்துவிட்டு, கீழே இறக்குமாறு உத்தரவிட்டான். பிறகு பெரியதொரு சட்டியில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சிறைப்பிடிக்கப்பட்ட இரு முஸ்லிம்களை அழைத்து அவ்விருவருள் ஒருவரை அதில் போட்டு கிறிஸ்தவ மதத்தை ஏற்குமாறு வேண்ட, அவர் மறுத்துவிட அவர் அந்தத் தண்ணீரில் ஷஹீதாக்கப் பட்டார்.

பிறகு அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா (ரலி) அவர்களையும் அவ்வாறே செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது, அன்னார் அழுதார்கள். மன்னனிடம் அச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர் உயிருக்குப் பயந்துவிட்டார் என்றெண்ணி, அவரைத் தம்மிடம் அழைத்து வருமாறு மன்னர் கட்டளையிட்டார். மீண்டும் கிறிஸ்தவ மதத்தை ஏற்குமாறு வேண்டினார். அதற்கு ஹுதைஃபா அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

அதற்கு, ‘அப்படியானால் ஏன் நீர் அழுதீர்?’ என்று தாஃகியா கிறிஸ்தவ மன்னன் கேட்டான்.

அதற்கு, ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘சில வினாடியில் நான் கொதிக்கும் இந்தச் சட்டியில் போடப்படுவேன்; என் உயிர் உடனே பிரிந்துவிடும். என் மேனியிலிருக்கின்ற உரோமங்களின் எண்ணிக்கை அளவு எனக்கு உயிர்கள் கொடுக்கப் பட்டிருக்குமானால், அவை அனைத்தும் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகுமே! ஆனால் எனக்கு ஒரு உயிர்தானே கொடுக்கப் பட்டுள்ளது; அத்தகைய பாக்கியமே இல்லையே! என்றெண்ணி அழுதேன்’ என்று கூறினார்கள்.

இந்த பதிலை சற்றும் எதிர்பாராத மன்னன் தாஃகியா, சற்று மனம் இறங்கி, ‘நீ என் தலையில் முത്തமிட்டால் உம்மை நான் விட்டுவிடுகிறேன்’ என்று கூறினார்.

அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘என்னோடு சேர்த்து மற்ற முஸ்லிம் கைதிகளையும் விடுவதானால் நான் முத்தமிடுகிறேன்’ என்று கூறினார். மன்னன், ‘சரி! அவ்வாறு செய்தால் எல்லா முஸ்லிம் கைதிகளையும் நான் விட்டுவிடுகிறேன்’ என்று கூறினான்.

அந்த ஸஹாபி கூறுகிறார்கள்:

நான் மனதிற்குள் சிந்தித்தேன்! இவனை முத்தமிடுவதால் நமக்கும், மற்ற முஸ்லிம் கைதிகளுக்கும் விடுதலை கிடைக்கும் என்பதால், இதனால் ஒன்றும் தவறில்லை என்று முடிவு எடுத்தேன்.

பிறகு அவனை நெருங்கி, அவன் தலையில் முத்தமிட்டார்கள். எனவே அவன் கைதிகள் அனைவரையும் அன்னாரிடம் ஒப்படைத்துவிட்டான். நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா (ரலி) அவர்கள், ஏனைய எல்லோரோடும், கலீஃபா உமர் (ரலி) அவர்களின் சமூகத்திற்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவங்களை எடுத்துச் சொன்னார்கள்.

இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், இப்போது ஒவ்வொரு முஸ்லிமும் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா (ரலி) அவர்களை முத்தமிடுவது கட்டாயமாகும். நானே அதனை ஆரம்பிக்கிறேன் என்று கூறி எழுந்து அன்னாரின் தலையை முத்தமிட்டார்கள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version