முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த பிறகு முஃமின்களுக்குத் தலைவராக முதல் கலீஃபாவாக ஹழ்ரத் அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்கள் ஸஹாபாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஜனாதிபதி பொறுப்பேற்று இரண்டு வருடங்கள், நான்கு மாதங்களுக்குப் பிறகு ஹழ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.
அதன் பிறகு இரண்டாவது கலீஃபாவாக அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றார்கள். ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் காலத்தில்தான் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவியது. சிரியா, ஜோர்டான், எகிப்து, பாரசீகம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தது.
நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த மதீனா தய்யிபா நகரம் தலைமையாக இருந்தது. ஏனைய பிரதேசங்கள் அனைத்தும் மாகாணங்களாக அறிவிக்கப்பட்டு, அதனை நீதி, நிர்வாகம் செய்வதற்காக ஸஹாபாக்கள் கவர்னர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
சிரியா, யமன், ஈரான், ஈராக், ஜோர்டான், எகிப்து இன்னும் பிற மாகாணங்கள் அனைத்தின் கவர்னர்களும் ஹழ்ரத் உமர்(ரலி) அவர்களின் ஆணைகளுக்கேற்ப ஆட்சி செய்தனர். அக்காலத்தில் உமர் (ரலி) கடிதம் மூலம் அனைத்து கவர்னர்களுக்கும் ஆணை பிறப்பித்தனர்.
இந்நிலையில், ஹழ்ரத் உமர்(ரலி) அவர்களால் மாகாண கவர்னர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதங்கள் அவர்களைச் சென்று சேரும்போது, பின்னால் அனுப்பியது முன்னதாகவும், முன்னதாக அனுப்பிய கடிதம் பின்னதாகவும் சென்றடைந்தது. இதில் சில குழப்பங்கள் தோன்றின.
அதனால் அப்போதைய பஸ்ராவின் ஆளுநராக இருந்த நபித்தோழர் ஹழ்ரத் அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள் மதீனாவில் ஜனாதிபதியாக இருந்த ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில், அமீருல் முஃமினீன் அவர்களே! தங்களிடமிருந்து தொடர்ந்து கடிதங்கள் மூலம் எங்களுக்கு கட்டளைகள் வந்து கொண்டிருக்கின்றன.
தங்களின் உத்தரவு கடிதங்களில் தேதி குறிப்பிடப்படாததால், அவைகள் எங்களை வந்தடையும்போது, எது முந்தையது? எது பிந்தையது? என எங்களால் அறிந்துகொள்ள முடிவதில்லை. இதனால், சில சமயங்களில் குழப்பங்கள் வந்துவிடுகின்றன. இதற்குத் தக்க ஆவணம் செய்யுங்கள் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
பஸ்ரா ஆளுநரின் இந்தக் கடிதம் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. அப்போது யமன் தேசத்திலிருந்தும் ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கு ஷஃபான் மாதம் என்று குறிப்பிடப்பட்டு ஒரு கடிதம் வந்திருந்தது. அப்படி என்றால், இனி கடிதங்களில் மாதங்களைக் குறிப்பிடலாமா என யோசித்தபோது அது எந்த வருடத்தின் மாதம் என்ற குழப்பம் ஏற்படுமே என யோசித்தார்கள். இதனைக் குறித்து ஹழ்ரத் உமர் (ரலி) அவர்கள் நபித் தோழர்களை அழைத்து ஆலோசனை செய்தார்கள்.
அதில் பல்வேறு அபிப்பிராயங்கள் கூறப்பட்டன. அப்போது ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள், முஸ்லிம்களின் மறுமலர்ச்சி என்பது மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யப்பட்ட நாளிலேயே ஆரம்பமாகிறது. ஆகவே, இதனைக் கொண்டே இஸ்லாமிய வருடத்தை கணக்கிடலாம் என ஆலோசனை கூறினார்கள். இந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தில் தான் ஹிஜ்ரத் செய்தார்கள். ஹிஜ்ரியை வைத்து ஆண்டைக் கணக்கிடலாம் என்றால், எந்த மாதத்தை முதலில் வைத்து ஆரம்பிப்பது என்ற அடுத்த குழப்பம் ஏற்பட்டது. சிலர் ரமலான் மாதம், சிலர் ஹஜ்ஜுடைய மாதம், என்று அபிப்பிராயங்கள் கூறினார்கள்.
அப்போது, ஹழ்ரத் உஸ்மான்(ரலி) அவர்கள், அரேபியாவில் புத்தாண்டு என்பது முஹர்ரம் மாதத்திலிருந்துதான் துவங்குகிறது என்று கூறினார்கள். இந்த அபிப்பிராயம் ஹழ்ரத் உமர்(ரலி) அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அன்றிலிருந்து ஹிஜ்ரி காலண்டர் முறை கணக்கிடப்பட்டு முஹர்ரம் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாக அறிவிக்கப்பட்டது. இதுதான் ஹிஜ்ரி ஆண்டு காலண்டர் உருவாகிய முறையாகும்.
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் அதன் இறுதிமாதம் துல்ஹஜ் ஆகும். இவையிரண்டுமே தியாக மாதங்களாகும். துல்ஹஜ் மாதத்தில் தான் ஹழ்ரத் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மகன் ஹழ்ரத் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வுக்காகக் குர்பானி கொடுக்க முயற்சித்த மாதமாகும்.
முஹர்ரம் மாதத்தில் நபி(ஸல்) அவர்களின் அருமை பேரர் இமாம் ஹுஸைன்(ரலி) அவர்கள் கர்பலாவில் இஸ்லாத்திற்காக ஷஹீத் ஆனார்கள். தியாகத்தைக் கொண்டு ஆரம்பித்து. தியாகத்தில் முடிவதுதான் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டாகும்.
