அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
தங்களின் தொழுகையில் பயபக்தியுடன் இருக்கும் முஃமின்கள் வெற்றியடைந்து விட்டார்கள்.
— சூரா அல் முஃமினூன் : 1,2
குனிவது, நிமிர்வது, நிலை நிற்பவது போன்ற சடங்குகளாகத் தொழுகையை ஆக்கிவிடக் கூடாது. மாறாக, உள்ளச்சம் நிறைந்த கவனத்துடன் நிறைவேற்றப்படும் தொழுகையே அல்லாஹ்விடம் ஏற்புடையது.
ஏனெனில், தொழுகையே சுவனத்தின் திறவுகோள் ஆகும்.
அசட்டையாகத் தொழப்படும் தொழுகை, பழைய துணியை சுருட்டி முகத்தில் வீசப்படுவது போல், அவரிடமே வீசப்படும் என ஹதீஸில் வந்துள்ளது.
தொழுகையின் பர்ளுகள், வாஜிப், சுன்னத், முஸ்தஹப் இவைகளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். மேலும், அவசரமாக தொழுவது, தொழுகையைக் குறைவாக்கிவிடும்.
உங்களில எவரேனும் தொழ நின்றால், தங்களுடைய உடல் உறுப்புகள் அனைத்தையும் அமைதியாக வைத்திருக்கவும். யூதர்கள் ஆடுவதுபோல் ஆடக்கூடாது. ஏனெனில், தொழுகையில் உறுப்புகளை அமைதியாக வைத்திருப்பது, அதனை நிரப்பமாக ஆக்குவதில் ஒரு பகுதியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தொழுகையில் இருக்கும்போது தொழும் இடத்தைத் தவிர, வேறெங்கேயும் பார்வையை அலையவிடக் கூடாது.
தொழுகையில் நிலை நிற்கும்போது முன்பின்னாக ஆடுவது கூடாது.
இன்னும், ஆடையைச் சரிசெய்வது, தாடியை கையால் தடவுவது, கனைப்பது இதுபோன்ற செயல்கள் தொழுகையைப் பலவீனப்படுத்திவிடும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஒருவர் தொழுகையை அதன் உரிய நேரத்தில் நல்ல விதமாக ஒலு செய்து, பயபக்தியுடன் நிலை, ருகூஉ, ஸுஜூது ஆகியவற்றை நல்ல முறையில் செய்து தொழுகையை நிறைவேற்றினால், அந்தத் தொழுகை பிரகாசிக்கும் ஒளியாக மாறி, ‘நீ என்னைப் பாதுகாத்தது போல், அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பானாக!’ என்று அவருக்கு துஆச் செய்கிறது. இதற்கு மாறாக, ஒருவர் தொழுகையின் நேரம் தவறி, நல்லவிதமாக ஒலு செய்யாமல், பயபக்தியின்றி நிலை, ருகூஉ, ஸுஜூது ஆகியவற்றை நல்ல முறையில் நிறைவேற்றாமல் தொழுதால், அந்தத் தொழுகை கறுத்து, விகாரமான உருவமாக மாறி, ‘நீ என்னை வீணாக்கியது போல், அல்லாஹ் உன்னை வீணாக்குவானாக!’ என்று சபிக்கிறது.
— தப்ரானீ
ஒரு சமயம் ஹஜ்ரத் இஸாம் (ரஹ்) அவர்கள், பல்க் நகரைச் சேர்ந்த ஹாத்தம் (ரஹ்) அவர்களிடத்தில், ‘தாங்கள் எவ்வாறு தொழுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெரியார்: ‘தொழுகை நேரம் வந்தவுடன் நான் மிக அமைதியோடும், நிதானத்தோடும் அழகான முறையில் ஒலு செய்து தொழும் இடத்திற்குச் சென்று மனதை ஓர்மைப்படுத்திக் கொண்டு, ‘கஃபா’வின் முன்னால் நான் நிற்பது போலவும், எனது பாதங்கள் ‘சிராத்துல் முஸ்தகீம்’ பாலத்திலிருப்பதுபோலவும், என் வலது பக்கம் ‘சொர்க்கமும்’, இடது பக்கம் ‘நரகமும்’ இருப்பதுபோலவும், இறைவன் என் தொழுகையை கவனித்துக் கொண்டிருக்கிறான் என எண்ணிக் கொள்வேன். மேலும், இதுவே எனது வாழ்க்கையின் இறுதித் தொழுகை, இனிமேல் தொழும் வாய்ப்புக் கிடைக்குமோ, கிடைக்காதோ என்றும் எண்ணி மிகத் தாழ்ந்த குரலில், ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி, ‘தக்பீர்’ கட்டுகிறேன். பின்பு கருத்துச் சிந்தனையோடு ‘கிராஅத்’ ஓதுகிறேன். அதன்பின் பணிவோடு ‘ருகூவு’ செய்கிறேன். பின்பு ‘ஸஜ்தா’ செய்கிறேன். இவ்வாறு நிம்மதியாகத் தொழுது முடித்து, என் தொழுகை இறைவனிடம் ஏற்கப்படுவதை ஆதரவு வைத்தும், அது ஏற்கப்படாமல் போய்விடுமோ! என்ற அச்சமும் கொண்டு அழுது பிரார்த்தனை செய்கிறேன்’ என பதில் கூறினார்கள்.
அப்போது ஹஜ்ரத் இஸாம் அவர்கள், ‘இவ்வாறு எத்தனை ஆண்டுகளாகத் தொழுகிறீர்கள்’ என்று வினவ, ‘முப்பது ஆண்டுகளாக அல்லாஹ்வின் அருளால் இவ்விதமே தொழுகிறேன்’ என பதிலளித்தார்கள்.
இதனைச் செவியேற்ற இஸாம் அவர்கள், ‘அந்தோ! எனக்கு ஒரு தொழுகை கூட இவ்வாறு தொழ வாய்ப்பில்லாமல் போய்விட்டதே!’ என்று கூறி அழுது புலம்பலானார்கள்.
மஸ்ஜிதுகளில் தொழுபவர்களுக்கு முன்னால் குறுக்கே செல்வது சர்வசாதாரணமாகிவிட்டது. இதனைப் பாவம் என்று பலர் கருதுவதில்லை. ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது, அவருக்கு முன்னால் குறுக்கே செல்வது கண்டிக்கத்தக்க செயலாகும். தொழும் நபர் தனக்கு முன்னால் யாரும் குறுக்கே செல்லாத இடத்தில் நின்று தொழுகையில் ஈடுபடவேண்டும். தனக்கு முன்னால் தடுப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்கு முன்னால் கடந்து செல்வதைவிட நாற்பது (நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.
— புகாரி
அடியார்களுக்கு முதலாவதாக, கடமையாக்கப்பட்டது தொழுகைதான்;
மறுமைநாளில் முதலில் விசாரணை செய்யப் படுவதும் தொழுகையைப் பற்றித்தான்!
ஒருவர் தொழுகையைப் பேணி பாதுகாத்தால் அவரின் ஈருலகத்தையும் அல்லாஹ் பேணி பாதுகாப்பான்.
