அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ
தன் பொருளை இறைவனின் மீதுள்ள நேசத்தின் காரணமாக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் கொடுத்து உதவி செய்வார்கள்.
– சூரா அல்பகரா : 177
ஸஹாபி உபைத் இப்னு உமைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
மஹ்ஷர் மைதானத்தில் மனிதர்கள் கடும் பசியுடனும், கடுந்தாகத்துடனும் முற்றிலும் நிர்வாணமாகவும் நிற்பார்கள். எனினும், எவரொருவர் அல்லாஹ்வுக்காக பிறருக்கு உணவளித்திருப்பாரோ, அவருக்கு அல்லாஹ் பானத்தை புகட்டுவான். மேலும் எவரொருவர் அல்லாஹ்வுக்காக ஆடை அளித்திருப்பாரோ, அவருக்கு அல்லாஹ் ஆடை அணிவிப்பான்.
அல்லாஹுதஆலாவுடைய பொருத்தத்திற்காக செய்யப்படும் உதவிகளுக்கு அதனுடைய கூலியை மறுமையில் பூரணமாகப் பெற்றுக் கொள்வார்கள்.
கியாமத் நாளில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இவ்வுலகில் நாம் பிறருக்கு செய்யக்கூடிய உதவிகள் அனைத்திலும் அல்லாஹ்வுடைய பொருத்தம் பெறவேண்டும் என்ற எண்ணமே மனதில் மிகைத்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் வாக்குறுதிகள் இக்லாஸ் எனும் மனத்தூய்மை உடையவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மாறாக பிறர் தன்னைப் புகழவேண்டும் என்ற நோக்கில் நற்காரியங்கள் செய்யப்பட்டால் அதற்குரிய பலன் இவ்வுலகில் மனிதர்கள் புகழ்ந்ததைத்தவிர மறுமையில் வேறெதுவும் கிடைக்கப்போவதில்லை.
தானம் தனத்தைக் குறைத்துவிடாது.
