“மனிதர்களின் கடன்களை ஒரு நாளில் திருப்பிச் செலுத்திவிடலாம்… ஆனால், உன் தந்தையின் கடனை உன்னால் ஒருபோதும் திருப்பிச் செலுத்தவே முடியாது.”
பாக்தாத் நகரில் ஹஸன் என்றொரு இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடினமாக உழைத்து, வியாபாரத்தில் பெரிய நிலையை அடைந்தான்.
அவனது தந்தை முஸ்தஃபா, ஹஸனை இந்த நிலைக்குக் கொண்டு வர தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்தவர். முதுமையின் காரணமாக அவர் நோயுற்று படுக்கையில் இருந்தார்.
ஒருநாள், ஹஸன் தன் தந்தையின் அறைக்குள் நுழைந்தான். அவன் கைகளில் ஒரு பெரிய பட்டு மூட்டை இருந்தது. அதைத் தன் தந்தையின் காலடியில் வைத்தான்.
“தந்தையே.! நீங்கள் என்னை வளர்க்கப் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நான் அறிவேன். இதோ இதில் பல்லாயிரக்கணக்கான பொற்காசுகள் உள்ளன. நான் சம்பாதித்த இந்த செல்வத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதன் மூலம் நான் உங்களுடைய ‘பெற்றோர் கடனை’ முழுமையாக அடைத்துவிட்டதாகக் கருதுகிறேன். இப்போது உங்கள் மனம் திருப்தியடைந்ததா?” என்று பெருமிதத்தோடு கேட்டான்.
அவனது தந்தை மென்மையாகப் புன்னகைத்தார். அவர் அந்தப் பண மூட்டையைத் தொடக்கூட இல்லை. மாறாக, மகனை நோக்கி, “மகனே! நீ பெரிய பணக்காரனாகிவிட்டாய், மகிழ்ச்சி. ஆனால், என் கடனை நீ அடைக்க வேண்டுமானால், இன்று இரவு எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். செய்வாயா.?” என்றார்.
ஹஸன் உடனே, “சொல்லுங்கள் தந்தையே, எதுவாக இருந்தாலும் செய்கிறேன்!” என்றான்.
“இன்று இரவு நீ என் படுக்கைக்கு அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும். நான் எப்போது தண்ணீர் கேட்டாலும் நீ உடனே தர வேண்டும்” என்றார் தந்தை. ஹஸனும் சம்மதித்தான்.
இரவு 11 மணி இருக்கும். தந்தை கண்களை மூடிப் படுத்திருந்தார். திடீரென, “மகனே, தாகமாக இருக்கிறது, கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றார். ஹஸன் உடனே ஓடிச் சென்று குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து கொடுத்தான். தந்தை குடித்துவிட்டு படுத்துக்கொண்டார்.
நடுநிசி 2 மணி இருக்கும். தந்தை மீண்டும், “மகனே, தாகம் தாங்கவில்லை, தண்ணீர் கொடு” என்றார். தூக்கக் கலக்கத்தில் இருந்த ஹஸன், சற்று அலைச்சலுடன் எழுந்து போய் தண்ணீர் கொடுத்தான். தந்தை அதையும் குடித்தார்.
அதிகாலை 4 மணி, சுபஹ் தொழுகைக்குச் சற்று முந்திய நேரம். தந்தை மூன்றாவது முறையாக, “மகனே.! நெஞ்சு வறளுகிறது, கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றார்.
இந்த முறை ஹஸனுக்குக் கோபம் வந்துவிட்டது. “தந்தையே.! விடிந்தால் எனக்குப் பெரிய வியாபார விஷயங்கள் என நிறைய வேலைகள் இருக்கின்றன. என்னை இப்படித் தூங்கவிடாமல் நள்ளிரவில் அடிக்கடி தண்ணீர் கேட்டுக்கொண்டே இருந்தால் நான் எப்படி ஓய்வெடுப்பது.? இரண்டு முறை தந்துவிட்டேனே, இன்னும் ஏன் உங்களுக்குத் தாகம் அடங்கவில்லை?” என்று சலிப்புடனும் சினத்துடனும் கத்தினான்.
கிழவர் முஸ்தஃபா மெதுவாக எழுந்து அமர்ந்தார். தன் மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு, கண்கள் கசியக் கூறினார்:
“மகனே.! நீ சற்று முன்பு என் காலடியில் வைத்தாயே பல்லாயிரக்கணக்கான பொற்காசுகள்… அதைவிட இந்த ஒரு இரவில் நீ காட்டிய சலிப்பு மிகப்பெரியதாகிவிட்டது.
நீ குழந்தையாக இருந்தபோது, ஓராயிரம் இரவுகள் நீ அழுதுகொண்டே இருப்பாய். உனக்கு உடம்பு சரியில்லாதபோது, நான் உறக்கமே இல்லாமல் உன்னை நெஞ்சோடு அணைத்துக் கிடந்திருக்கிறேன். நீ எத்தனை முறை அழுதாலும், எத்தனை முறை படுக்கையை நனைத்தாலும், நான் ஒருமுறை கூட உன் மீது சலிப்படைந்ததே இல்லை; கோபப்பட்டதே இல்லை. உன்னை நெஞ்சார முத்தமிட்டு அரவணைத்தேன்.
ஆனால், இன்று நான் வெறும் மூன்று முறை தண்ணீர் கேட்டதற்கே நீ சலித்துக்கொண்டாய். உலகத்துச் செல்வங்கள் அனைத்தையும் நீ திரட்டித் தந்தாலும், பெற்றோர் உனக்காகக் சிந்திய ஒரே ஒரு சொட்டு வியர்வைக்கோ, ஒரு நிமிடம் கூட தூங்காத இரவுக்கோ அது ஈடாகாது மகனே.!”
ஹஸன் உறைந்து போனான். தன் தவறை உணர்ந்து, தந்தையிடம் அழுது மன்னிப்புக் கேட்டான்.
இஸ்லாம் பெற்றோருக்குக் கொடுத்துள்ள உயரிய இடத்தை அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறது.
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:
اِمَّا یَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِیْمًا
“அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உன்னிடத்தில் முதுமையை அடைந்துவிட்டால், அவர்களை நோக்கி ‘அப்பப்பா!’ (உஃப்) என்று (சலிப்பைக் காட்டும் சிறு வார்த்தையைக் கூட) சொல்லாதே.! அவர்களை அதட்டாதே.! அவர்களிடம் கண்ணியமான வார்த்தையையே பேசு.!”
– சூரா பனீ இஸ்ராயீல்: 23
நபி (ஸல்) அவர்களிடமும் ஒருமுறை ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் தாயைத் என் தோள்களில் சுமந்து கொண்டு காஃபாவை வலம் வந்து (ஹஜ் செய்து) முடித்தேன். இப்போது நான் என் தாயின் கடனை அடைத்துவிட்டேனா.?” என்று கேட்டார். அதற்கு நபிகளார்,
“இல்லை, உன்னைப் பெற்றெடுக்கும் போது அவள் அனுபவித்த ஒரு பிரசவ வேதனைக்குக் கூட இது ஈடாகாது.!” என்றார்கள்.
உலகில் உள்ள எல்லா மனிதர்களின் கடனையும் ஏதோ ஒரு வழியில் தீர்த்துவிடலாம். ஆனால், நம்மைப் பெற்றெடுத்த தந்தை (மற்றும் தாய்) நமக்குச் செய்த தியாகக் கடனை, நாம் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குப் பணிவிடை செய்தாலும் தீர்க்க முடியாது. அதனால்தான், அவர்கள் மறைந்த பிறகும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய (துஆ செய்ய) இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது.
