அபூ இஸ்ஹாக் இப்றாஹீம் இப்னு அபீ ஹிலால் மீர் முன்ஷி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் ஒருமுறை மந்திரி அபூ முஹம்மத் மஹலபி அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது வாயிற்காவலன் உள்ளே வந்து சையத் ஷரீப் முர்தழா (ரஹ்) அவர்கள் உள்ளே வர அனுமதி கோருவதாக அறிவித்தான். மந்திரியவர்கள் அனுமதியளித்தார்.
ஷரீப் முர்தழா (ரஹ்) உள்ளே வந்ததும், மந்திரியவர்கள் எழுந்து நின்று மிக்க மரியாதையோடு தம் இருக்கையில் அவரை அமர வைத்தார். அவருடன் உரையாடிய பின்னர், அவர் விடைபெறும்போது மரியாதையாக எழுந்து நின்று வழி அனுப்பி வைத்தார்.
சிறிது நேரம் கழிந்த பின்னர், வாயிற்காவலன் மறுபடியும் வந்து, அவருடைய தம்பி சையத் ஷரீப் ரிழா (ரஹ்) அவர்கள் உள்ளே வர அனுமதி கோருவதாக அறிவித்தான்.
அந்த சமயம் மந்திரியவர்கள் ஏதோ எழுதுவதில் மிக்க கவனமாக ஈடுபட்டு இருந்தார். இருப்பினும் அவசரமாக அக்காசிதத்தை அப்படியே போட்டுவிட்டு எழுந்து மிக்க பரபரப்புடன் வாசலுக்குச் சென்று மிக்க மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அவருடைய கையைப்பிடித்து தம்முடன் அழைத்து வந்து தனது இருக்கையில் அமர வைத்தார்.
அவர்களும் அவருக்கு முன்னால் பணிவுடன் அமர்ந்து மிக்க கவனமுடன் உரையாடினார். அவர்கள் எழுந்து செல்லும்போது வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்து, பிறகு திரும்பி வந்து தம் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அந்நேரம் அமைச்சரிடம் கூட்டம் அதிகமாக இருந்தபடியால், இதுபற்றி எதுவும் கேட்க எனக்கு தைரியம் பிறக்கவில்லை.
கூட்டம் குறைந்தபோது நான் மந்திரியிடம், ‘ஒரு விஷயம் பற்றி தங்களிடம் கேட்க விரும்புகிறேன். அனுமதியளித்தால் கேட்பேன்’ என்று சொன்னேன்.
அதற்கு மந்திரியவர்கள், ‘நிச்சயம் அனுமதியுண்டு. அநேகமாக நான் தம்பிக்கு செய்த மரியாதை அளவு அண்ணனுக்கு செய்யவில்லையே? எனினும் அண்ணன், வயது, கல்வி இரண்டிலும் தம்பியைவிட உயர்ந்திருந்தாரே! என்பதைப் பற்றித்தானே கேட்க விரும்புகிறீர்?’ என்றார்கள்.
அதற்கு நான், ‘இதுவே என் கேள்வி’ என்றேன்.
அதற்கு மந்திரி, நாம் ஒரு கால்வாயை வெட்டும்படி உத்தரவிட்டிருந்தோம். அதற்குப் பக்கத்தில் (அண்ணனாக இருக்கும்) ஷரீப் முர்தழாவுக்குச் சொந்தமான நிலங்களும் இருந்தன. அதன் காரணமாக கால்வாய் வெட்டும் செலவில் அவர் பங்குக்கு சுமார் பதினாறு திர்ஹம்கள் வந்தன. அதையும் குறைத்துவிடும்படி அவர் எனக்குப் பலமுறை கடிதம் எழுதினார். இவ்வளவு சிறு தொகைக்காக அடிக்கடி என்னிடம் விண்ணப்பித்துக் கொண்டிருந்தார்.
சையத் ஷரீப் ரிழா(ரஹ்) சம்பந்தமான ஒரு சம்பவம். அவர்கள் வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என நான் கேள்விப்பட்டேன். அதன் மகிழ்ச்சியில் நான் அவருடைய தேவையைக் கருதி ஒரு தட்டில் நூறு தீனார்களை அன்னாரின் சமூகத்தில் அனுப்பி வைத்தேன். அவரோ, அதைத் திருப்பி அனுப்பிவிட்டு மந்திரி அவர்களிடம் கூறிவிடுங்கள்: ‘நான் மக்கள் அளிக்கும் நன்கொடைகளை ஏற்பதில்லை; எனக்குள்ள தேவையின் அளவு என்னிடம் இருக்கிறது’ என்று சொல்லி அனுப்பினார்.
நான் மறுமுறை அந்தப் பொற்காசுத்தட்டை அவரிடம் அனுப்பி, ‘இதனைப் பிரசவம் பார்க்கும் இன்னும் இதரப் பணிப் பெண்களுக்காக அனுப்பியுள்ளேன்’ என்று சொல்லி அனுப்பினேன்.
அவர் மறுபடியும் தட்டைத் திருப்பி அனுப்பி, ‘என் வீட்டுப் பணிப்பெண்களுக்கும் மற்றவர்களிடம் வாங்கும் பழக்கம் கிடையாது’ எனச் சொல்லி விட்டார்கள்.
நான் மூன்றாம் முறையாக திரும்பவும் அனுப்பி, “இத்தொகையை தங்களிடம் உள்ள மாணவர்களுக்காவது வைத்துக் கொள்ளுங்கள்’ எனச்சொல்லி அனுப்பினேன்.
இம்முறை மிக்க மகிழ்ச்சி எனக்கூறி அத்தட்டை மாணவர்களுக்கு மத்தியில் வைத்து, ‘யாருக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்’ என அனுமதியளித்துவிட்டார்கள்.
ஹழ்ரத் ஷரீப் ரிழா (ரஹ்) அவர்களிடம் மாணவர்களின் பெரிய கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். மாணவர்கள் தங்குவதற்காக ஒரு விடுதியை தனியாக கட்டியிருந்தார்கள். அதற்கு ‘தாருல் உலூம்’ எனப் பெயரிட்டிருந்தார்கள். அதில் அந்த மாணவர்கள் தங்கியிருந்தார்கள். மாணவர்கள் அனைவரின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பையும் ஷரீப் ரிழா (ரஹ்) அவர்களே ஏற்றிருந்தார்கள்.
தாருல் உலூமில் மாணவர்களின் மத்தியில் தட்டு வைக்கப்பட்டதும் ஒரு மாணவன் மட்டும் எழுந்து சென்று அந்த தட்டிலிருந்து ஒரு தீனாரை எடுத்தான். அதனை அங்கேயே ஒடித்து அதன் சிறு பாகத்தை மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு மீதி பாகத்தை அதே தட்டில் போட்டுவிட்டான்.
ஷரீப் ரிழா அவர்கள் அம்மாணவனிடம், ‘அச்சிறுபாகம் உனக்கு எதற்காகத் தேவைப்பட்டது?’ என விசாரித்தார்கள்.
அதற்கு அம்மாணவன், ‘ஓர் இரவு என்னுடைய விளக்கை எரிக்க எண்ணெய் இல்லாமல் போயிற்று. அந்த சமயம் விடுதியின் பொருளாளரும் அங்கு இல்லை. நான் இன்ன கடைக்காரனிடமிருந்து எண்ணெயைக் கடனாகப் பெற்றேன். அந்தக் கடனைத் தீர்க்கவே இதனை எடுத்துக் கொண்டேன்’ என்றான்.
ஹழ்ரத் ஷரீப் ரிழா (ரஹ்) அவர்கள் இதனைக் கேட்டதும், மாணவர்களின் எண்ணிக்கை அளவு தமது கஜானாவின் சாவிகளை செய்வித்து, அவைகளை ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு சாவியாகக் கொடுத்து, ‘யாருக்கு எந்த சமயத்தில் எவ்வளவு தேவைப்பட்டாலும், பொருளாளரைக் கேட்காமலேயே எடுத்துக் கொள்ளலாம்’ என்று அறிவித்து விட்டார்கள்.
பின்னர் அந்த தட்டை ஒரு தீனாரின் ஒரு ஓரம் ஒடிந்த அதே நிலையில் என்னிடம் அப்படியே திரும்பி அனுப்பிவிட்டார்கள்.
இந்த சம்பவத்தைக் கூறி மந்திரியவர்கள் என்னிடம், ‘இப்படிப்பட்ட உயர்ந்த பண்புடையவரை அதிகபட்சமாக கண்ணியப்படுத்தாமல் எப்படி இருக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள்’ என்றார்கள்.
