இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், அவர்களின் மூத்த மனைவி சாரா அம்மையாருக்கும் பிறந்தவர் நபி இஸ்ஹாக் (அலை) ஆவார். அவரின் மகன் நபி யாக்கூப் (அலை); அவரின் மகன்தான் நபி யூசுஃப் (அலை) ஆவார்.

நபி இப்ராஹீம் அவர்களின் இரண்டாவது மனைவி ஹாஜரா அவர்களுக்கு பிறந்தவர் தான் நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஆவார்.

இறைத்தூதர் நபி யாகூப் (அலை) அவர்கள் எகிப்து நாட்டு ‘மிஸ்ர்’ நகரில் வாழ்ந்து, அங்குள்ள மக்களுக்கு ஏக இறைக் கொள்கையைப் போதித்து வாழ்ந்தார்கள்.

அவர்களுக்கு முதல் மனைவியின் மூலம் பத்து ஆண் குழந்தைகளும், இரண்டாவது மனைவியின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன. இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்கள் யூசுஃப் நபி மற்றும் புன்யாமீன்.

நபி யாகூப் (அலை) அவர்களின் இந்த 12 புதல்வர்கள் மூலமாகத்தான் பனீஇஸ்ராயீல்களின் 12 பிரிவினர் தோன்றினர். அந்த பன்னிரெண்டு புதல்வர்களில் யூசுஃப் (அலை) அவர்கள் ஒருவர் மட்டுமே நபியாவார்கள்.

ஒருமுறை ரசூல்(ஸல்) அவர்கள், அவர்களது தோழர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஸஹாபி, ‘அல்லாஹ்வின் தூதரே! உலகத்தில் மிகவும் சங்கையானவர் யார்?’ என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘சங்கையானவருடைய மகனுடைய, சங்கையானவருடைய மகனுடைய சங்கையானவருடைய மகன்’ என்று பதில் கூறினார்கள். இது ஸஹாபாக்களுக்கு புரியவில்லை.

பிறகு அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இபுராஹீமுடைய மகன் இஸ்ஹாக், இஸ்ஹாக்குடைய மகன் யாகூப், யாகூபுடைய மகன் யூசுஃப்’ என்று விளக்கமளித்தார்கள்.

மேலும், ‘அல்லாஹ் வேறு எந்த ஒரு நபிக்கும் நான்கு தலைமுறையாக நபித்துவத்தை கொடுத்ததில்லை இவர்களைத் தவிர’ என்றார்கள்.

நபி யூசுஃப் (அலை) அவர்கள் மிகவும் அழகுமிக்கவராகவும், நற்குணங்கள் நிறைந்தவராகவும் இருந்தார். அவரது சகோதரர் புன்யாமீனும் நற்குணங்கள் நிறைந்தவராக இருந்தார்கள்.

சிறுவராக இருந்தபோது யூசுஃப் அவர்கள், பதினோறு கிரகங்களும், சூரியனும், சந்திரனும் அவர்களுக்கு சிரம் பணிவதாக கனவு கண்டார்கள். இவ்வதிசயக் கனவை தம் தந்தையாரிடம் கூறினார்கள். அதைக்கேட்ட நபி யாகூப் (அலை) அவர்கள், ‘இக்கனவைப் பற்றி அவரது சகோதரர்களிடம் கூற வேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்தார்.

தங்கள் தந்தை யாகூப் (அலை) அவர்கள், யூசுஃப் (அலை) அவர்கள் மேல் அதிக அன்பு வைத்திருப்பதாக எண்ணி மாற்றாந்தாய் சகோதரர்கள் பத்து பேர்களும், யூசுஃப் அவர்கள் மேல் பொறாமை கொண்டார்கள்.

நபி யூசுஃப் அவர்களைக் கொலை செய்ய சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தனர். யூசுஃப்பை ஒழிப்பதைக் கொண்டு தான் தங்கள் தந்தை தங்கள் மீது அன்பு செலுத்துவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

அந்த பத்து சகோதரர்களும் யூசுஃப் (அலை) அவர்களை ஒழித்துக் கட்டிவிட தங்களுக்குள் ஒரு சதித்திட்டம் தீட்டினர். தம் தந்தையிடம் சென்று யூசுஃபை தங்களுடன் காட்டுக்கு ஆடு மேய்க்க அனுப்பும்படியும், அவர் தங்களுடன் வந்தால் விளையாடி மகிழ்வோம் என்றும், தாம் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினர்.

இதனை நபி யாகூப் (அலை) அவர்கள் விரும்பவில்லை என்றாலும், தம் பிள்ளைகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி யூசுஃப் (அலை) அவர்களை மனமின்றி அனுப்பி வைத்தார்கள். சதித் திட்டத்தை அறியாமல் யூசுப் தன் சகோதரர்களோடு சென்றார்கள்.

காட்டுக்கு அழைத்துச் சென்றபின் அவர்கள், யூசுஃப் (அலை) அவர்களை ஒரு ஆழமான கிணற்றில் தள்ளிவிட்டனர். வீட்டிற்குத் திரும்பி வந்து தங்களது தந்தை யாகூப் (அலை) அவர்களிடம், யூசுஃப்பை ஒரு ஓநாய் கொன்றுவிட்டதாக பொய் சொன்னார்கள். அதற்கு ஆதாரமாக யூசுப் அவர்களின் சட்டையில் பொய்யான இரத்தம் தோய்த்து யாகூப்பிடம் காட்டினார்கள்.

அவர்கள் கூறிய கட்டுக் கதையை நபி யாகூப் (அலை) அவர்கள் நம்புவதாக இல்லை. எனினும் வேறு வழியின்றி தம் மகன் யூசுஃபை எண்னி அழுதவண்ணம் இருந்தார்கள். இறைவனிடம் இது குறித்து முறையிட்டு பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தார்கள்.

ஆழ்கிணற்றில் கிடந்த யூசுஃப் (அலை) அவர்களை அவ்வழியாக சென்ற ஒரு வியாபாரக் கூட்டத்தினர் கண்டு அவர்களை மீட்டு தம்மோடு அழைத்துச் சென்று எகிப்து நாட்டில் அடிமையாக விற்றுவிட்டனர்.

எகிப்து நாட்டின் அரசருக்கு அமைச்சராக இருந்த அஜீஸ், யூசுஃப் நபியை ஏலத்தில் எடுத்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

யூசுப்பின் முக அழகும் அவரது நற்குணமான நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, தன் மனைவியை நோக்கி, ‘நீ இவரை கண்ணியமாக வைத்துக்கொள். அவரால் நாம் நன்மையை அடையலாம் அல்லது அவரை நாம் நம் வளர்ப்பு மகனாக்கிக் கொள்ளலாம்’ என்றார். எனவே அவ்வீட்டில் யூசுஃப் (அலை) அவர்கள் வளர்ந்து வந்தார்கள்.

வாலிப வயதை அடைந்த யூசுஃப் (அலை) அவர்கள் பேரழகராகத் திகழ்ந்தார்கள். அவருடைய அழகில் மயங்கிய அஜீஸின் மனைவி ஜூலைகா அவர் மீது தகாத ஆசை கொண்டார்.

ஒருநாள் அஜீஸ் வீட்டில் இல்லாத சமயம் யூசுபை நோக்கி, ‘கதவுகளைத் தாழிட்டு விட்டு விரைந்து வாரும்!’ என்றழைத்தார்.

அதற்கு யூசுஃப் ‘அல்லாஹ் காப்பாற்றுவானாக! என் எஜமானர் என்னுடைய தங்குமிடத்தை சங்கையாக்கி வைத்துள்ளார். அநியாயம் செய்பவர்கள் ஒருபோதும் வெற்றியடையமாட்டார்கள்’ என்று மறுத்தார்.

அவள் விடாமல் மேலும் வற்புறுத்தினாள். ஜூலைகாவிடமிருந்து தப்பிக்க யூசுப் வாசல்பக்கம் ஓடினார். அவள், அவரை துரத்திச் சென்று அவருடைய சட்டையை பின்புறமாகப் பிடித்து இழுத்தாள். அதனால் அச்சட்டை பின்புறமாக கிழிந்துவிட்டது.

அச்சமயம் அஜீஸ் வாசல் பக்கம் வந்து விட்டார். அப்போது அஜீஸின் மனைவி, ‘உம்முடைய மனைவிக்கு தீங்கு செய்யக்கூடிய இவரை சிறையில் அடைப்பதையோ அல்லது வேதனை அளிப்பதையோ தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?’ என பழியை யூசுப் அவர்கள் மீது போட்டாள்.

அதைக்கேட்டு பதறிய யூசுஃப், ‘இவள்தான் என்னை மயக்கி அழைத்தாள்’ என்று கூறினார்.

ஜுலைகா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு வந்து நடந்ததை விசாரித்துவிட்டு, ‘அவருடைய சட்டை முன்புறமாக கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை சொல்கிறாள்; அவர் பொய்யர். மாறாக, அவரது சட்டை பின்புறமாக கிழிந்திருந்தால் அவள் பொய் சொல்கிறாள்; அவர் உண்மையாளர்’ என்று விளக்கினார்.

யூசுஃபின் சட்டை பின்புறமாக கிழிக்கப்பட்டிருந்ததால், அஜீஸ் தன் மனைவியே குற்றவாளி என்பதைப் புரிந்து கொண்டார். அவர் யூசுபிடம், ‘இவ்விஷயத்தை இத்துடன் விட்டு விடுங்கள்!’ என்று கேட்டுக் கொண்டார். தன் மனைவியிடம், ‘நீ இதற்காக பாவமன்னிப்பு தேடிக்கொள்!’ என்று கூறினார்.

அழகும், குலமதிப்பும் கொண்ட ஒரு பெண் தம்மை (விபச்சாரத்திற்காக) அழைத்தபோது, ‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவருக்கு மறுமைநாளில் அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் இடமளிப்பான் என்ற நபிமொழி நினைவு கூறத்தக்கது.

இந்த விஷயம் சிறிது சிறிதாக கசிந்து அந்த பட்டணத்தில் உள்ள பெண்கள் அஜீஸின் மனைவியின் இழி செயலைக் குறித்து கேவலமாகப் பேச ஆரம்பித்தார்கள். அஜீஸின் மனைவி தன் நிலைமையை விளக்கும் பொருட்டு, அப்பெண்கள் அனைவரையும் அழைத்து விருந்து ஒன்று கொடுத்தார். விருந்துண்ட அனைத்து பெண்களையும் ஒரு இடத்தில் அமரவைத்து, பின்பு அவர்களின் கையில் பழங்களையும், அறுப்பதற்காக கத்தியும் கொடுத்தாள்.

பிறகு யூசுஃப்(அலை) அவர்களை அங்கு அழைத்து வரச் செய்தார்; நபி யூசுப்பின் பேரழகைப் பார்த்து மயங்கி அப்பெண்கள் தங்களையும் அறியாமலேயே கையில் இருந்த பழங்களை கத்தியால் அறுக்க ஆரம்பித்தனர். அப்போது பழங்களை நறுக்குவதற்குப் பதிலாக தங்கள் விரல்களை அறுத்துக் கொண்டனர்.

அஜீஸின் மனைவி அப்பெண்களிடம், ‘நான் விரும்பியது இவரைத்தான்’ என்று கூறினாள்.

அவர்கள் யூசுஃபைப் பார்த்து, ‘அல்லாஹ் மிகத்தூயவன்; இவர் மனிதரே அல்லர்; இவர் சங்கைக்குரிய மலக்கே ஆவார்; இவரைப் போன்ற பேரழகர் வேறு யாருமே இல்லை’ என்று ஆச்சரியத்துடன் கூறினர்.

அப்பொழுது அந்த பெண்மணி ஜூலைகா கூறினாள்: எவரைப் பற்றி நீங்கள் என்னை இழிவுபடுத்தி கொண்டிருந்தீர்களோ, அந்த அடிமை இவர்தான்; ஒரு கணம் பார்த்ததற்கே உங்கள் கைகளை வெட்டிக் கொண்டீர்கள்; நான் இவருடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்; எனக்கு எவ்வாறு இருக்கும்? என்று கூறினாள். மேலும், நான்தான் அவரை என் ஆசைக்கு இணங்குமாறு அழைத்தேன்; அதற்கு அவர் மன உறுதியுடன் தவிர்ந்து விட்டார்.

ஆனால், என்றாவது ஒருநாள் என் ஆசைக்கு அவர் இணங்கவில்லை என்றால் அவர் நிச்சயம் சிறையில் அடைக்கப்படுவார்; அவர் இழிவானவர்களில் உள்ளவராக மாறிவிடுவார் என்று கூறினாள். அதைக்கேட்ட யூசுஃப் (அலை) அவர்கள், ‘நான் உங்களுடைய ஆசைக்கு இணங்குவதைவிட சிறைவாசமே மேல்’ என்று கூறிவிட்டார்கள். பிறகு வீண்பழிக்கு ஆளாக்கி யூசுஃப் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்த சம்பவங்களை அறிந்த அந்நாட்டு அரசன் பெண்களின் இழிவான செயலிலிருந்து அவரைக் காக்க யூசுஃபை சிறையில் அடைத்தான். பிறகு சிறிது காலம் அவர் சிறை வாசம் அனுபவித்தார்.

சிறையில் இருக்கும் வேளையில் அல்லாஹ்வின் பேராற்றலையும், மகத்துவத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்து இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்துக் கொண்டும் இருந்தார்.

யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் அடைபட்டு, நாட்களை பொறுமையுடன் கழித்து வந்தார்கள். அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் தாம் கண்ட கனவை யூசுஃப் நபியவர்களிடம் விவரித்தார்கள்.

அதில் ஒருவர், ‘நான் திராட்சை பழங்களில் இருந்து மதுரசம் பிழிவதைப் போல் கனவு கண்டேன்’ என்று கூறினார். மற்றொருவர், ‘நான் என் தலையில் ரொட்டியைச் சுமந்து கொண்டு போகும் பொழுது பறவைகள் அதை கொத்தித் திண்பதைப் போல் கனவு கண்டேன்’ என்று கூறினார். இவ்வாறு கூறிவிட்டு அவ்விருவரும் யூசுஃப்பிடம், ‘நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லவராக, மேலும் அறிவு மிகுந்தவராகவே காண்கிறோம்; ஆதலால், எங்களுக்கு இந்த கனவுக்கான விளக்கத்தை கூறும்’ என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட நபி யூசுஃப் (அலை) அவர்கள், அல்லாஹ் எனக்கு அருளிய அறிவிலிருந்து நான் இதன் விளக்கத்தை உங்களுக்குக் கூறுகிறேன் என்றுகூறி, ‘மதுரசம் பிழிவதைப் போல் கனவு கண்ட நீ மிக விரைவில் விடுதலையாகி உன்னுடைய முதலாளிக்கு மதுரசம் பிழிவாய்’ என்றும், ‘மற்றொருவன் சிலுவையில் அறையப்பட்டு இறப்பான்; இறந்தபின் அவனின் உடலை பறவைகள் கொத்தித் தின்னும்’ இதுவே உங்களுடைய கனவின் விளக்கம் என்று கூறினார்.

மேலும் விடுதலையாக இருக்கும் அந்தச் சிறைத் தோழரிடம், ‘நீர் வெளியில் சென்றவுடன் என்னைப் பற்றி நாட்டின் மன்னனிடம் எடுத்துக் கூறும்!’ என்று யூசுஃப் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அவன் விடுதலை ஆனவுடன் ஷைத்தான் அவனை மறக்கச் செய்துவிட்டான். ஆதலால், மேலும் சில காலம் யூசுஃப் சிறையிலேயே இருக்க நேரிட்டது.

சிறிது காலம் சென்ற பிறகு அந்நாட்டு மன்னன் ஓர் கனவு கண்டான். அதில் ‘நல்ல கொழுத்த பசுக்களையும், மெலிந்த பசுக்களையும் மேய்வதைக் கண்டேன்; அதில் ஏழு பசுமையான கதிர்களும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன்’ என ராஜ பிரதானிகளிடம் கூறி, ‘நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் தரக்கூடியவராக இருந்தால் இந்த கனவிற்கு விளக்கம் கொடுங்கள்’ என்று அந்த மன்னன் கேட்டான்.

அதற்கு அரசரின் ஆலோசகர்கள், ‘இது அர்த்தமற்ற கனவு; இதற்கு விளக்கம் கொடுக்க நாங்கள் அறிந்திருக்கவில்லை’ என்று கூறினார்கள்.

இந்த சம்பவத்தை அறிந்து, சிறையில் இருந்து விடுதலையான வேறொரு மனிதர், யூசுஃபிடம் கேட்டுக் கொள்ளலாம் என தன் மனதில் நினைத்துக் கொண்டு அவர் மன்னரிடம், ‘நான் இந்த கனவிற்கு விடை கூறுகிறேன். ஆனால், என்னை நீங்கள் சிறைகூடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று கூறினார்.

அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நபி யூசுஃப் (அலை) அவர்களைக் கண்டு, ‘யூசுஃபே! உண்மையாளரே! எனக்கு மேலும் ஒரு கனவிற்கு விளக்கம் தேவை’ என்று கூறினார்.

நபி யூசுஃப் (அலை) அவர்கள், ‘என்ன கனவு?’ என்று கேட்க, ‘ஏழு கொழுத்த பசுவையும், மெலிந்த ஏழு பசுவையும் மேலும் பசுமையான ஏழு கதிரையும், காய்ந்த ஏழு கதிரையும் கனவில் கண்டால் அதன் பொருள் என்ன?’ என்று கேட்டார்.

அதனைக் கேட்ட நபி யூசுஃப் (அலை) அவர்கள், ‘முதல் ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வதைப் போல் செய்வீர்கள்; அதில் உங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு மீதம் உள்ள பொருட்களைச் சேமித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கடுமையான பஞ்சம் ஏற்படும். அதில் உணவிற்கே கஷ்டம் வரும்; அப்பொழுது சேமித்தவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். பிறகு ஒரு ஆண்டு வரும்; அதில் மழை பொழிந்து கொண்டே இருக்கும்; அப்பொழுது அனைவரும் பழரசங்கள் பிழிந்தவர்களாக இருப்பார்கள்’ என்று விளக்கம் கொடுத்தார்கள்.

இவ்வாறே விளக்கத்தை அரசனிடம் கொண்டு சென்றார்கள். இந்த விளக்கத்தைக் கேட்ட அரசர், ‘இவ்விளக்கம் கொடுத்தவரை என்னிடம் கொண்டு வாருங்கள்’ என்று கூறினான்.

யூசுப் (அலை) அவர்களிடம் வந்த போது, ‘நீர் உம் எஜமானரிடம் (அஜீஸிடம்) திரும்பிச் சென்று, தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன என்று அவரிடம் கேளும்’ என்று அனுப்பி விட்டார்கள். அரசர் அப்பெண்களை அழைத்து, ‘யூசுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?’ என்று விசாரித்தார். அப்பெண்கள், ‘அல்லாஹ் எங்களை மன்னிப்பானாக! நாங்கள் அவரிடத்தில் எந்தக் கெடுதியையும் அறியவில்லை’ என்று சாட்சியம் அளித்தார்கள்.

அஜீஸின் மனைவி, ‘இப்பொழுது உண்மை வெளியாகிவிட்டது! நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். நிச்சயமாக அவர் உண்மை சொல்பவர்களில் உள்ளவர் ஆவார்’ என்று தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

பின்பு நபி யூசுப் (அலை) அவர்களது அறிவாற்றலை அறிந்த அந்த அரசன் ‘அவரை அழைத்து வாருங்கள்; அவரை எனக்கு மட்டும் பிரத்யேகமானவராக அமர்த்தி விடுகிறேன்!’ என்று கூறினார். அவர் அரசரிடம் அழைத்து வரப்பட்டார்.

அப்போது அரசன், யூசுஃப் (அலை) அவர்களிடம், ‘நீர் இன்றிலிருந்து எங்களிடம் பெரும் மதிப்பும், நம்பிக்கையும் உடையவராக ஆகிவிட்டீர்!’ என்று கூறினான். அதற்கு நபி யூசுஃப் (அலை) அவர்கள், ‘என்னை உங்களது நாட்டின் நிதியமைச்சராக ஆக்கிவிடுங்கள். அதைப் பற்றி நன்கறிந்தவன்! பாதுகாப்பவன்!’ என்று கூறிவிட்டு, அரசனும் அந்நாட்டு நிதியமைச்சராக நபி யூசுப் (அலை) அவர்களை ஆக்கினான்.

ஏழு ஆண்டுகள் மழை இல்லாத காரணத்தால் பெரும்பாலான இடங்களில் பஞ்சம் நிலவியது. மக்கள் உணவுக்காக மிகவும் கஷ்டப்படலாயினர். ஆனால், எகிப்தில் மட்டும் யூசுப் நபியவர்களின் உபாயத்தால் சுபிட்சம் நிலவியது. உபரியாக இருந்த தானியங்கள் மற்ற இடங்களிலிருந்து வரும் மக்களுக்கு சொற்ப விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தப் பணி யூசுஃப் நபி (அலை) அவர்களின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வந்தது.

இந்த சமயத்தில், யூசுப் நபியின் சகோதரர்கள் தானியம் வாங்குவதற்காக அரண்மனைக்கு வந்திருந்தனர். அவர்களை யூசுஃப் (அலை) அடையாளம் கண்டு கொண்டார்கள். ஆனால், அவர்கள் யூசுஃப் (அலை) அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

யூசுஃப் (அலை) அவர்களிடம், ‘நீங்கள் அடுத்த முறை தானியம் வாங்க வரும்போது உங்கள் சகோதரர் புன்யாமீனை அழைத்துக் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால், தானியம் ஒன்றும் கொடுக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார்கள். அவர்கள் கொடுத்த கிரையத்தையும் அவர்களுக்குத் தெரியாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவர்கள் தம் தந்தை யாகூப் அவர்களிடம் இவ்விபரத்தைச் சொன்னார்கள்.

ஏற்கனவே, யூசுஃபை பறிகொடுத்திருந்த யாகூப் நபி (அலை) அவர்கள், தம் இளையமகன் புன்யாமீனை அவர்களுடன் அனுப்ப மிகவும் தயங்கினார்கள். அவர்கள் அல்லாஹ் மீது ஆணையிட்டு, புன்யாமீனை மீண்டும் பத்திரமாக அழைத்து வருவதாக வாக்குறுதி அளித்து, புன்யாமீனுடன் எகிப்து நாடு சென்று யூசுஃப் நபியிடம் தானியங்கள் தருமாறு கோரினார்கள்.

அல்லாஹ் குர்ஆனில்,

وَلَمَّا دَخَلُوا عَلَى يُوسُفَ أَوَى إِلَيْهِ أَخَاهُ قَالَ إِنِّي أَنَا أَخُوكَ فَلَا تَبْتَبِسُ بِمَا كَانُوا يَعْمَلُونَ

யூசுப்பிடம் அவர்கள் நுழைந்தபொழுது, அவர் தன் சகோதரர் புன்யாமீனைத் தனியாக தன்னிடம் அழைத்து, “நிச்சயமாக நான்தான் உம்முடைய சகோதரன் யூசுப்; ஆகவே, எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீர் கவலைப்படாதீர்” என்று இரகசியமாகக் கூறினார்.

– சூரா யூசுப்: 69

அச்சமயத்தில் புன்யாமீனிடம் யூசுப் (அலை) இரகசியமாக தாம்தான் அவரது காணாமல் போன சகோதரர் யூசுஃப் என்பதை தெரியப்படுத்தினார். புன்யாமீனை தம்மிடமே வைத்துக்கொள்ள எண்னிய யூசுஃப் (அலை) அவர்கள், புன்யாமீனின் பையில் தானியம் அளக்கும் குவளையை மறைத்து வைத்து விட்டார்கள்.

பின்பு எல்லோருடைய பைகளையும் சோதனையிட்டபோது குவளை புன்யாமீனின் பையில் இருந்தது. அதனைக் காரணம் காட்டி, புன்யாமீனை தம்முடன் வைத்துக் கொண்டார்கள்.

அந்த சகோதரர்கள் புன்யாமீனை தங்களுடன் அனுப்பும்படி எவ்வளவோ மன்றாடினர். புன்யாமீனுக்குப் பதிலாக தங்களில் ஒருவரை பிணையாக வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுப் பார்த்தனர். ஆனால், யூசுஃப் (அலை) அவர்கள் புன்யாமீனை அவர்களுடன் அனுப்ப மறுத்துவிட்டார்கள்.

அவர்கள் மீண்டும் தம் தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினர். அவர்கள் யூசுஃப்பையும், புன்யாமீனையும் எப்படியும் அழைத்து வரும்படி சொல்லிவிட்டார். தமது இரு புதல்வர்களையும் எண்னி அழுதழுது அவர்களுடைய கண்பார்வை போய்விட்டது.

சகோதரர்கள் வேறு வழியின்றி மீண்டும் யூசுஃப் (அலை) அவர்களிடம் வந்தார்கள். அப்போது யூசுஃப் (அலை) தாம்தான் ஆழ் கிணற்றில் அவர்களால் தள்ளப்பட்ட யூசுப் என்பதை வெளிப்படுத்தினார்கள்.

அவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கோரினர். அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்ட யூசுஃப் (அலை) அவர்கள் ஒருவரிடம் தமது சட்டையைக் கொடுத்து அதை, தம் தந்தையின் முகத்தில் வைக்கும்படியும் அவரது கண்பார்வை மீண்டும் வந்துவிடும் என்றும் தம் பெற்றோரை எகிப்து நாட்டுக்கு அழைத்து வரும்படியும் கூறினார்கள்.

அல்லாஹ் குர்ஆனில்,

اذْهَبُوا بِقَمِيصِي هُذَا فَأَلْقُوهُ عَلَى وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ

“நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தின் மீது வையுங்கள்; அதனால் அவர் பார்வையுடையவராகத் திரும்பி வருவார்; பின்னர், நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள எல்லோரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்.

– சூரா யூசுப்: 93

தம் மைந்தனின் சட்டையை முகத்தில் வைத்த யாகூப் நபிக்கு கண்பார்வை மீண்டது. அவர் தம் குடும்பத்துடன் எகிப்து வந்து, தம் அருமை மகன் யூசுஃபையும், புன்யாமீனையும் கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். யூசுஃப் (அலை) தம் பெற்றோரை அரியணையில் அமர்த்தி அவர்களைக் கண்ணியப்படுத்தினார்கள்.

யூசுஃப் நபிக்கு அவரது பதினோரு சகோதரர்களும் பணிந்து மரியாதை செலுத்தினர். இளம் வயதில் அவர்களுக்கு பதினோரு கிரகங்களும் சிரம் பணிவதாக கண்ட கனவு இப்போது நனவாகியது.

அதன்பிறகு சுலைஹா அம்மையாரை ஒருநாள் நகர்வலம் வரும்போது கண்டு கொண்டார்கள். அல்லாஹ் சுலைஹா அம்மையாருக்கு இளமையை திரும்பக் கொடுத்தான். யூசுஃப் சுலைஹா ஆகிய இருவரும் இனிதே திருமணம் முடித்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

யூசுஃப் (அலை) தம் தாய் தந்தையர் புன்யாமீன் மற்றும் பத்து சகோதரர்களுடன் எகிப்தில் தங்கிவிட்டார். இவர்கள் மூலமாக எகிப்தில் யாகூபின் சந்ததியினர் (பனீ இஸ்ராயீல்கள்) பல்கிப் பெருகினர். இவர்கள்தான் பின்னாளில் பல கொடுமைகளுக்கு ஆளாகி நபி மூஸா (அலை) அவர்களால் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டனர்.

Share.

Get new Posts

க ரு த் து க ள் F E E D B A C K S