ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி, ‘முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது. அது ஏன்?’ என்று கேட்டார்.
முல்லா சிரித்தபடி, ‘நானும் உம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; உலகத்தில் இரும்பை விட தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே! அது ஏன்?’ என்று பதிலுக்கு பதில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அந்த கல்விமான், ‘உலகத்தில் இரும்பு தாராளமாக எங்கும் கிடைக்கிறது. அதனால், இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் தங்கம் உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஓரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது.’ என்று விளக்கினார்.
முல்லா உடனே, ‘அதே போலவே, பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணம் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது. அதனால் தான் உண்மைக்கு அதிகமான மதிப்பு இருக்கிறது.’ என்று தனது பதிலை கூறினார்.
பொய் மரணித்துவிடும்; உண்மை காலம் கடந்து நிற்கும்.
