இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

இஸ்லாமிய வருடம் பன்னிரெண்டு மாதங்களைக் கொண்டது.

நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்றதைக் கொண்டு இஸ்லாமிய மாதங்கள் கணக்கிடப்படுவதால், ஹிஜ்ரி ஆண்டு என்றழைக்கப்படுகிறது. அதன் முதல் மாதம் முஹர்ரம்; அதன் இறுதி மாதம் துல்ஹஜ் ஆகும்.

நபி(ஸல்) அவர்களின் அன்புப் பேரரான இமாம் ஹூஸைன் (ரலி) அவர்கள் கர்பலாவில் ஷஹீதாக்கப்பட்டது முஹர்ரம் மாதம்; நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகச்செயல் நடைபெற்றது துல்ஹஜ் மாதம்.

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் தியாகத்தில் ஆரம்பித்து, அதன் கடைசி மாதம் தியாகத்தில் முடிகிறது. அதாவது, முஹர்ரம் மாதத்தில் ஆரம்பித்து துல்ஹஜ் மாதத்தில் முடிகிறது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மகனை குர்பானி கொடுக்க முனைந்த நாள் துல்ஹஜ் பிறை 10; இமாம் ஹுஸைன் (ரலி) கர்பலாவில் ஷஹீதான நாள் முஹர்ரம் பிறை 10

ஆஷுரா என்ற அரபுச் சொல்லுக்கு, பத்தாவது என்று பொருளாகும். இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் ‘ஆஷுரா’ ஆகும்.

முஹர்ரம் மாதம் அல்லாஹ்விடம் தனிச்சிறப்புப் பெற்ற மாதமாகும்.

நபித்தோழர் அபூகதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி(ஸல்) அவர்களிடம் ஆஷுரா நோன்புப் பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்’ என்று கூறினார்கள்.

முஹர்ரம் 10 ஆஷுரா நாளன்று நடந்துள்ள முக்கிய நிகழ்வுகள்:

  • நம்ரூத் மன்னன், நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நெருப்புக் குண்டத்தில் போட்டபோது, அது ஸலாமத் (நிம்மதி) பொருந்திய குளிர்ச்சியாக மாறியது இந்த நாளில்தான்.
  • நபி மூஸா (அலை) அவர்கள் எகிப்தின் மன்னன் ஃபிர்அவ்னால் துரத்தப்பட்டபோது, நைல் நதி பன்னிரெண்டு பாதைகளாகப் பிளந்து நபி மூஸா (அலை) அவர்கள் காப்பாற்றப்பட்டும், ஃபிர்அவ்ன் அதில் மூழ்கடிக்கப்பட்டதும் இந்நாளில்தான்.
  • இறைவனுக்கு நன்றி செலுத்தும்விதமாக நபி மூஸா (அலை) அவர்கள் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்றார்கள்.
  • நபி யூனுஸ் (அலை) அவர்கள் மீனால் விழுங்கப்பட்டு நாற்பது நாட்கள் மீனின் வயிற்றிலிருந்தபின் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட நாள் இந்நாள்தான்.
  • நபி அய்யூப் (அலை) அவர்கள் பிணிகளின் சோதனையில் இருந்து விடுபட்டு நலம் பெற்றது இந்நாளில்தான்.
  • நபி சுலைமான் (அலை) அவர்கள் இழந்த தம் ஆட்சியையும், கணையாழியையும் (முத்திரையிடப்படும் மோதிரம்) மீண்டும் கிடைக்கப்பெற்றது இந்நாளில்தான்.
  • நபி ஜக்கரியா (அலை) அவர்களுக்கு நபி யஹ்யா (அலை) அவர்கள் இந்நாளில்தான் மகனாகப் பிறந்தார்கள்.
  • உலகம் படைக்கப்பட்டதும், உலகம் அழிக்கப்படுவதும் ஆஷுரா நாள் – வெள்ளிக்கிழமை அன்றுதான்.

நபி(ஸல்) அவர்களின் அருமைப்பேரர் இமாம் ஹூஸைன் (ரலி) அவர்கள் ஈராக்கின் கர்பலாவில் ஷஹீதாக்கப்பட்டதும் இந்நாள் பிறை பத்து.

ஆஷுரா நாளின் இரவில் விழித்திருந்து இபாதத் செய்து, அன்றைய பகலில் நோன்பு நோற்பவருக்கு, அறுபதாண்டு கால வணக்கங்களின் பலன் கிடைக்கும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும், இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள், ‘அன்றைய நாளின் இரவையும், பகலையும் அதிகப்படியான நஃபிலான இபாதத்களைக் கொண்டு உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும்’ என்று நினைவூட்டி இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா வந்தபோது, யூதர்கள் ஆஷுரா நாளில் (முஹர்ரம் பத்து) நோன்பு நோற்றதைக் கண்டு, ‘இது என்ன நாள்?’ என்று அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு யூதர்கள், ‘இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாளாகும். இதற்காக நபி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நானே!’ என்று கூறிவிட்டு, தாங்களும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.

— புகாரி

நபி(ஸல்) அவர்கள் முஹர்ரம் பிறை 9, 10 அல்லது பிறை 10, 11 ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பார்கள். பிறரையும் நோன்பு நோற்கத் தூண்டுவார்கள். இம்மாதத்தில் பிறை 9, 10 அல்லது பிறை 10, 11 ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது :

ஆஷுராவுடைய தினத்தில் யார் தன் குடும்பத்தினருக்கு விசாலமாக செலவு செய்வாரோ, அவருக்கு வருடம் முழுவதும் அல்லாஹ் பொருளாதாரத்தை விசாலப்படுத்தி வைப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version