அல்லாஹ் குர்ஆனில்,
يأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِبُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا
நம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி அனுமதி பெறாத வரையில் நுழையாதீர்கள்.
– சூரா அந்நூர்: 27
ஒருவர் பிறர் வீட்டினுள் நுழைவதாக இருந்தால், அவ்வீட்டாரிடம் அனுமதி பெற்ற பிறகே நுழைய வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும்.
ஒரு வீட்டில் அனுமதி கோருவது என்பது மூன்று தடவை ஸலாம் சொல்வதேயாகும். அதற்குப் பதில் கிடைக்காவிட்டால் அங்கிருந்து திரும்பிவிட வேண்டும். அதனைவிட்டு நிர்பந்தப்படுத்தி நின்று கொண்டு அவ்வீட்டாரைச் சங்கடப்படுத்தக்கூடாது.
நபித்தோழர் அபூமூஸா அஷ்அரீ(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘அனுமதி கோருவது என்பது மூன்று தடவையாகும். (அந்த மூன்று தடவைக்குள்) உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால் உள்ளே செல்லுங்கள். இல்லையெனில் திரும்பிவிடுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
வீட்டினுள் நுழைய அனுமதி கேட்பவரிடம் வீட்டில் இருந்து. ‘யார்?’ என்று கேட்கப்பட்டால், ‘நான் தான் வந்திருக்கிறேன்’ என்று பதில் கூறக்கூடாது மாறாக, தன்னுடைய பெயரைக் கூறவேண்டும். ‘நான், நான்’ என்று சொல்வதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாக வெறுத்துள்ளார்கள்.
வீட்டாரின் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தபின் அவர் கூறும் இடத்தில் அமர வேண்டும். வீட்டின் உள் பகுதியில் பார்வையை செலுத்துவதோ அங்கிங்கும் பார்வையை அலைய விடுவதோ கூடாது. ஏனெனில், அனுமதி கோருவது என்பது விதிக்கப்பட்டதே பார்வையின் காரணமாகத்தான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும், என்ன நோக்கத்திற்காகச் சந்திக்கச் சென்றோமோ அதனை முடித்துவிட்டு விரைவாக வெளியேற முயற்சிக்க வேண்டும். வந்தவர் பேச்சை முடித்துவிட்டு எப்போது கிளம்புவார்? என்று வீட்டார் நினைக்கும்வரை தங்கக்கூடாது. ஏனெனில், ‘தனது சகோதரனிடம் அவரைச் சிரமப்படுத்துமளவு தங்குவது முஸ்லிமுக்கு ஆகுமானதல்ல’ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
