இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

இவ்வுலகில் நடக்கும் பாவச்செயல்களுக்கு அல்லாஹ் தண்டனையை உடனுக்குடன் இறக்காமல் இருப்பதற்குக் காரணம் மறுமைநாள் என்று ஒன்று உள்ளது என்பதற்காகவே!

ஆணும் ஆணும் புணர்ந்து கொள்ளல், பெண்ணும் பெண்ணும் புணர்ந்து கொள்ளல், மது, விபச்சாரம், கொலை, அநாதைகளின் சொத்து களவாடப்படுதல், ஒரு மனிதரின் மானத்தைக் குலைப்பது, ஏழைகளின் மீது அநீதம் செலுத்துவது, கருவில் இருக்கும் குழந்தை சிசுக்கொலை செய்யப்படுதல், இனவெறிக்கொலை, ஏமாற்றுவது, கபட நாடகம் ஆடுவது, முகத்திற்கு முன்னால் ஒரு பேச்சு, பின்னால் ஒரு பேச்சு எனப் பேசுதல் என எத்தனையோ வகையான பாவங்கள் இரவிலும், பகலிலும் உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

வானத்திலுள்ள இறைவன் இவை அனைத்தையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். ஆனால், மறுமைநாளில் இறைவனின் கோபம் மிகைத்திருக்கும்.

மனிதர்கள் தத்தமது தீய செயல்களோடு இறைவனைச் சந்திப்பார்கள். பலரை இறைவன் விசாரணையின்றியே நரகம் சேர்த்திடுவான்.

அல்லாஹ் குர்ஆனில் எச்சரித்துக் கூறுகிறான்:

إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا

சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கின்றோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் இரு கரங்கள் செய்த செயலின் பலனை கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ, ‘நான் மண்ணாக ஆகவேண்டுமே’ என்று புலம்புவான்.

— சூரா அந்நபவு: 40

மறுமை நாளில் ‘ஸிராத்துல் முஸ்தகீம்’ என்ற பாலம் இருக்கும். அப்பாலம் நரகத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும்.

அதன்மீது ஒவ்வொரு மனிதனும் கடந்து சென்றே ஆகவேண்டும். அப்பாலம் இருளாக இருக்கும். அதில் தவறி விழுபவர் நரகில் முகங்குப்புற வீழ்வர்.

அப்பாலத்தைக் கடப்பதற்குத் தேவையான இரண்டு தன்மைகள்: ஒன்று, ஈமான்; மற்றொன்று பொறுமை.

அதாவது இவ்வுலகில் வாழும்போது தமக்கு ஏற்பட்ட துன்பங்களை ஈமானின் பலத்தைக் கொண்டு எவ்வாறு பொறுமை செய்து கடந்தார்களோ, அவர்களே அந்தப் பாலத்தை இலகுவாகக் கடப்பார்கள்.

ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் சிலர் மின்னல் வேகத்தில் கடந்து சென்றிடுவர். ஏனெனில், அவர்கள் துன்பத்தின் போது இறைவனிடம் பொறுமை செய்தவர்களாகவும், இன்பத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாகவும் வாழ்ந்திருப்பர். அத்தகைய மக்களுக்கு ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பதை அல்லாஹ் இலேசாக்கி விடுவான்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

இறைநம்பிக்கையாளர்கள் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள (ஸிராத்துல் முஸ்தகீம்) பாலத்தில் தடுத்து நிறுத்தப் படுவார்கள். உலகில் வாழ்ந்த போது அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காக ஒருவருக்கு ஒருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். அதன்பிறகே சுவனம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

“அப்பாலத்தைக் கடப்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அப்போதைய நிலையில் நபிமார்கள் அனைவரின் பிரார்த்தனையும், ‘அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்று!’ என்பதாகத்தான் இருக்கும். அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அந்தக் கொக்கிகளின் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் தீய செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் இறைமறுப்பு போன்ற செயல்களால் அழிந்து போனவர்களும் இருப்பார்கள்; இறைநம்பிக்கை இருந்தும் பாவம் செய்த காரணத்தால் மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக் கொள்பவரும் இருப்பர்”.

அவரவரின் ஈமான் வெளிச்சத்திற்கேற்ப அப்பாலத்தைக் கடப்பர். சிலருக்கு சிமிழ் விளக்கைப் போன்ற வெளிச்சம் இருக்கும். சிலருக்கு வெளிச்சமே இருக்காது. சிலருக்கு இறைவன் பூரண ஒளியை வழங்குவான். அங்கே ஒருவரின் ஒளியில் வேறொருவர் சென்றுவிட முடியாது. ஏனெனில், அவரவருக்கு வழங்கப்படும் இறைவனின் ஒளி அவரவருக்கு மட்டுமே தெரியும்.

ஸிராத்துல் முஸ்தகீம் பாலம் முடியைவிட மெல்லியதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முடியைவிட மெல்லியதின் மீது இவ்வளவு மனிதர்கள் எப்படிச் செல்ல முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட வேண்டாம். ஒன்றுமே இல்லாமலிருந்ததை ஒரு விந்தின் அணுவிலிருந்து மனிதனைப் படைத்த அல்லாஹ்வுக்கு எல்லாமே சாத்தியம்தான்.

மறுமைநாள் நெடிய காட்சிகள் உடையது. சிலரை இறைவன் அழைப்பான்; அவர்கள் இறைவன் மீது கொண்டிருந்த நேசத்தால் விசாரணையின்றி மன்னித்துச் சுவர்க்கம் சேர்ப்பான். அடாத செயல்கள் உடையவரை அழைத்து விசாரணை இன்றி நரகம் சேர்ப்பான். அங்கே அல்லாஹ்விடம் ஏன் இப்படிச் செய்கிறாய்? என்று வாதிடுபவர் இருக்கமாட்டார். அல்லாஹ் மட்டுமே இறைவன்; ஏனைய அனைத்தும் அவனின் படைப்பினங்களே. அவன் ஒருவன்; இணை துணை தேவையற்றவன்;

அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் நல்லோர்கள் வீற்றிருப்பார்கள். அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ரு செய்தவர்கள் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடைகளில் அமர்ந்திருப்பார்கள். நற்செயல்களுக்கேற்ப அல்லாஹ் மனிதனைக் கண்ணியப் படுத்துவான். அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலில் நல்லோர்கள் நிம்மதியடைந்தவர்களாக இருப்பார்கள். அங்கே நல்லோர்களுக்கு அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து உணவு வழங்கப்படும்; அதன்பின் நபி(ஸல்) அவர்களது முபாரக்கான கரங்களால் ‘ஹவ்லுல் கவதர்’ என்ற சுவர்க்க நீர் தடாகத்திலிருந்து தாகம் தீர்க்க நீர் புகட்டப்படும்.

அதற்குப் பின் நல்லோர்களுக்கு எப்போதும் பசியும், தாகமும் ஏற்படவே செய்யாது. வானவர்கள் அந்த நல்லோர்களைச் சுற்றி சுற்றி வந்து சுபசோபனமான வார்த்தைகளைக் கூறிக்கொண்டே இருப்பார்கள். நல்லோர்கள் பெரும் மகிழ்ச்சியில் இறைவனின் சமூகத்தில் திளைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு நபிமாரோடு அவரவரின் உம்மத்தார் நிறுத்தப் படுவார்கள். ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தினரே முதன்முதலில் சுவர்க்கத்திற்குள் நுழைவிக்கப்படுவர். அந்நாளில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும் தகுதி பெற்றவர்கள் ஹழ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டுமே. அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு ‘மகாமே மஹ்மூத்‘ என்ற உயர்ந்த ஸ்தானத்தை அளித்து அவர்களைப் படைப்பினங்களின் முன்னிலையில் கௌரவப்படுத்துவான்.

மறுமைநாளில் இறைவனின் சமூகத்தில் ஒவ்வொருவரும் விசாரணை செய்யப்படுவர். மறுமைநாளில் எல்லோரின் வாயும் முத்திரையிடப்பட்டுவிடும். உடலின் தோல் உட்பட அனைத்து உறுப்புகளுக்கும் பேசும் சக்தியை அல்லாஹ் வழங்குவான். ஒவ்வொரு உடலும் அவரவர் ஆத்மாவிற்கு எதிராக அல்லாஹ்விடம் சாட்சி கூறும். நற்செயல்களுக்கு உட்படுத்தப்பட்ட உடல் உறுப்புகள் நற்செயலுக்கான சாட்சியாகவும், பாவச்செயலுக்கு உட்படுத்தப்பட்ட உடல் உறுப்புகள் பாவத்திற்கு சாட்சியாகவும் இருக்கும்.

மறுமையில் அல்லாஹ்வின் சமூகத்தில் இரண்டு வகையான நீதிமன்றங்கள் இருக்கும். ஒன்று, அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய செயல்களைக் குறித்த விசாரணை மன்றம்; இன்னொன்று அடியார்களுக்கிடையே உள்ள உரிமைகளைப் பற்றிய விசாரணை மன்றம்.

அடியார்கள் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்க வழிபாடுகள் தொழுகை, நோன்பு, ஜகாத், திக்ரு, திலாவத், சுக்ரு செய்தல், பொறுமை செய்தல் போன்றவையாகும். இதில் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கிடைக்கும்.

அடுத்ததாக, ஹுகூகுல் இபாத் என்ற அடியார்களுக்கிடையே உள்ள உரிமை பற்றியதாகும். இவ்வுலகில் ஒருவரை இன்னொருவர் கண்காணாமல் செய்த விஷமங்களையும், நேருக்குநேர் செய்த அக்கிரமங்களையும் குறித்து விசாரிக்கப்படுவர். மனிதர்கள் அனைவரும் ஒன்று கூட்டப்பட்டு அங்கே ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, ‘இவரின் மீது முறையிடுபவர் உண்டா?’ எனக் கேட்கப்படும். யாராவது அவரைப் பற்றி முறையிட்டால், விசாரணை செய்யப்பட்டு உண்மை நிலைநாட்டப்படும்.

அதாவது, அநீதம் செலுத்தியவரின் நன்மையைப் பிடுங்கி, அநீதம் செலுத்தப்பட்டவரின் வசம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு முறையீடுகள் அதிகமாகி, இவரிடம் நன்மையே இல்லாதுபோனால், அதற்குப்பிறகு முறையிடுபவரின் பாவங்களைப் பிடுங்கி இவரின் மீது சுமத்தப்பட்டு நரகம் சேர்க்கப்படும்.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

ஒருவர் மற்றொருவருக்கு அநீதி இழைத்திருந்தால் அவருடன் சமரசம் செய்து அதிலிருந்து இவ்வுலகிலேயே தம்மை விடுவித்துக் கொள்ளட்டும். ஏனெனில், மறுமையில் ஈட்டுத் தொகை கொடுக்க பொற்காசோ, வெள்ளிக்காசோ இருக்காது. இவர் மற்றொருவருக்கு இழைத்த அநீதிக்கு ஈடாக இவருடைய நன்மையிலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும். இவரிடம் நன்மைகள் இல்லை என்றால், அநீதிக்குள்ளானவரின் பாவங்களிலிருந்து எடுத்து இவர் மீது சுமத்தப்படும். இந்நிலை ஏற்படுவதற்கு முன்பே இவ்வுலகில் சமரசம் செய்து கொள்ளட்டும்.

— புகாரி

ஒருவரின் முதுகிற்குப்பின் காணாமல் பேசியிருந்தால் அவைகளும் அங்கே தெரியவரும்; அவைகளும் முறையீடு செய்யப்படும். ‘யா அல்லாஹ்! நான் செய்யாத ஒன்றை இவர் மக்களிடம் கூறியிருக்கிறார்? ஆகவே, எனக்கு நீதி வழங்க வேண்டும்’ என்று விண்ணப்பிப்பார்.

இன்னொருவர், “யா அல்லாஹ்! என் துணியை என் அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளார்”; இன்னொருவர், “யா அல்லாஹ்! என்னுடைய வியாபாரத்தை இன்னவர் கெடுத்திருக்கிறார்”; யா அல்லாஹ்! இன்னவர் எனக்கு இன்னவகையான நஷ்டத்தை உண்டாக்கினார் என இதுபோன்ற இன்னும் சிறுசிறு விஷயங்களும் அங்கே முறையீடு செய்வார்கள்.

இந்த மன்றத்தில் மன்னிப்பு இருக்காது; மாறாக, நன்மைகளைப் பிடுங்கிக் கொடுப்பதும், பாவத்தைப் பிடுங்கிச் சுமத்துவதுமே நடக்கும். ஆகவே, இவ்வுலகில் வாழும்போது காசுக்கடனோ, வாக்குக்கடனோ எதுவாக இருந்தாலும் நிறைவேற்றிக் கொள்வது நல்லது. பிறர் நம்மீது முறையிடாத வண்ணம் அல்லாஹ்விற்குப் பயந்து நடப்பது நல்லது. இல்லையேல், கஷ்டப்பட்டுச் செய்த நன்மையான செயல்களின் நன்மையை இழக்க நேரிடும்.

இவ்வுலகில் செல்வத்தைச் சம்பாதிப்பது ஒரு பெரிய வேலை என்றால், அதை பாதுகாப்பது அதைவிட பெரிய வேலை; அதுபோல், மறுமை விஷயத்தில் நன்மையான செயல்களைச் செய்வது ஒரு வேலை என்றால், பிறர் உரிமையிலோ, அந்தரங்கத்திலோ தலையிடாமல் செய்த நன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்வது புத்திசாலித்தனம். இல்லையென்றால், செய்த நன்மை பறிபோய்விடும்; இன்னும் செய்யாத பாவத்தைச் சுமக்க நேரிடும்.

மேலும், அந்நாளில் ‘அஃமால் நாமா’ எனும் செயலேடு விரிக்கப்படும். அவரின் அனைத்துச் செயல்களும் அதில் பதியப்பட்டிருக்கும். யாருடைய செயலேடு வலது கையில் கொடுக்கப்படுகிறதோ, அவர் சுவர்க்கவாதி என்று தீர்ப்பு கூறப்பட்டவர்; யாருடைய செயலேடு இடது கரத்தில் கொடுக்கப்படுகிறதோ அவர் நரகவாதி என்று தீர்ப்பு செய்யப்பட்டவர்.

அந்நாளில் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே நொந்து கொள்வர். தனக்கு ஏற்படப் போகும் கைசேதத்தை நினைத்து பயந்தவர்களாக அழுது கொண்டிருப்பர். அந்த நாளில் அழுதழுது கண்ணீர் வற்றிப்போய் இரத்தம் கண்களிலிருந்து வெளியேறும்.

‘இதற்குமுன் உலகில் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவர்கள் வரவில்லையா?’ என்று நரகவாசிகளிடம் வானவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள், ‘எங்களை எச்சரிக்கை செய்பவர்கள் வந்தார்கள். ஆனால், நாங்கள் அவர்களின் உபதேசத்தை கேட்கவுமில்லை; இன்னும் அதனைப் பின்பற்றி நடக்கவுமில்லை’ என்று பதில் கூறுவார்கள்.

அல்லாஹ் அப்போது நரகவாசிகளைப் பார்த்து கூறுவான்:

أَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَىٰ عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ

என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப் படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றை பொய்ப்பிக்கலானீர்கள்!

— சூரா முஃமினூன்: 105

அல்லாஹ்வின் எச்சரிக்கையை உணரவேண்டிய நேரம் இது. இதனைத் தவறவிட்டால் மறுமையில் நிரந்தர நரக வேதனையும், அல்லாஹ்வின் கோபத்தையும் சந்திக்க வேண்டி வரும். நல்லுபதேசங்களை ஏற்று நடக்க அல்லாஹ் அருள் புரிவானாக!

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version