இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.
இஸ்லாம் என்பது நீ நிம்மதி பெறவும்,
உன் மூலம் பிறர் நிம்மதி பெறவும் உள்ளதாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

الْقَارِعَةُ مَا الْقَارِعَةُ ، وَمَا أَدْرَكَ مَا الْقَارِعَةُ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوتِ وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ

திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி). திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன? (நபியே!) அச்சம்பவம் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள். மலைகள் கொட்டிய பஞ்சுகளைப் போல் பறக்கும்.

— சூரா அல்காரிஆ: 1-5

இவ்வுலகின் இறுதிநாள் ஒரு வெள்ளிக்கிழமை ஆகும். அன்றைய நாளில் காலையில் வழக்கமாக உதிக்க வேண்டிய சூரியன் உதிக்காது. இதனால் உலக மக்கள் அனைவரிடத்திலும் குழப்பமும் திகிழும் பரவும். மதிய நேரத்தை அடைந்ததும், எப்போதும் கிழக்கில் உதிக்கும் சூரியன், அந்நாளில் வழக்கத்திற்கு மாறாக மேற்கில் உதித்து, பின் உதித்த சில மணி நேரங்களில் மீண்டும் மேற்கிலேயே மறைந்து விடும். அப்போது மலைகள் பூமியை விட்டுப் பெயர்ந்து பஞ்சு போல் ஆகாயத்தில் மிதக்க ஆரம்பிக்கும். கடல்கள் அனைத்திலும் நெருப்புப் பற்றிக் கொள்ளும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَة تتبعها الرادفة قُلُوبُ يَوْمَئِذٍ وَاحِفَةٌ ، أَبْصَارُهَا خَاشِعَةٌ

பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில், அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும். அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ்நோக்கியிருக்கும்.

— சூரா அந்நாஜி ஆத்: 6-9

பூமி முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டு குலுங்கும். எல்லோருடைய நெஞ்சங்களும் திடுக்கத்துடனே இருக்கும்.

ஹஜ்ரத் இஸ்ராஃபீல் (அலை) என்ற வானவர் ஸூர் ஊதுவதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறார். அவர் எத்தகைய தோற்றமுடையவர் என்றால், அவரின் பார்வையில் பூமி ஒரு தானியத்தைப் போன்றிருக்கும். அவர் படைக்கப்பட்ட நாளிலிருந்து ஊதுவதற்காக ஸூரில் வாயை வைத்தவராக, அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்தவராகக் காத்துக்கொண்டு இருக்கிறார்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةُ وَاحِدَةً وَحُمِلَتِ الْأَرْضُ وَ الْجِبَالُ فَدُكَّتَادَكَةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ وَانْشَقَتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَة

ஸூரில் (எக்காளம்) ஊதல் ஒருமுறை ஊதப்படும்போது; இன்னும் பூமியும், மலைகளும் தூக்கி எறியப்பட்டு, பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவை இரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் – அந்த நாளில்தான் நிகழவேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும். வானமும் பிளந்து, அந்நாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்துவிடும்.

— சூரா அல் ஹாக்கா: 13-16

அல்லாஹ்வின் ஆணை கிடைத்ததும், வானவர் அந்த ஸூரை ஊதுவார். அதனால் எழும் சப்தத்தில் பூமியிலுள்ள அனைத்தும் தூள் தூளாகச் சிதறும். கர்ப்பிணிப்பெண் அந்தச் சப்தத்தால் தன் வயிற்றிலுள்ள கருவை நழுவ விடுவாள்.

அப்பேரிரைச்சலில் மனிதன், ஜின், விலங்குகள் இன்னும் ஏனைய அனைத்து உயிரினங்களும் பூமி முழுவதும் மடிந்துவிடும். ஒரு உயிரினம் கூட உயிருடன் மிஞ்சாது. பூமியிலுள்ள அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.

கோள்கள் அதனதன் பாதையை விட்டு விலகி, ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும். நட்சத்திரங்கள் ஒளியிழந்து உதிர்ந்து விழுந்துவிடும்.

அதன்பிறகு, அல்லாஹ் உயிரை வாங்கும் மலக்கு ஹஜ்ரத் இஜ்ராயீல் (அலை) அவர்களை அழைத்து, எல்லா வானவர்களின் உயிரையும் வாங்கும்படி உத்தரவிடுவான். அவர்களும் எல்லா வானவர்களின் உயிரையும் பறித்துவிடுவார்கள். அதன்பிறகு அல்லாஹ்வின் சமூகத்தில் அம்மலக்கு ஆஜராவார்கள்.

அல்லாஹ் அம்மலக்கை நோக்கி, ‘வேறு யாரும் உயிரோடு உள்ளனரா?’ என்று கேட்பான்.

அதற்கு ஹழ்ரத் இஜ்ராயீல் (அலை) அவர்கள், ‘உன்னையும் என்னையும் தவிர வேறு யாரும் இல்லை’ என்று பதிலளிப்பார்கள்.

பிறகு, அல்லாஹ் ‘நான் யார்? நீ யார்?’ என்று வினவுவான். அதற்கு அவ்வானவர் (மலக்கு), ‘நீ என்னைப் படைத்த இறைவன்; நான் உன்னுடைய படைப்பு!’ என பதிலளிப்பார். ‘இறைவமையாகிய நான், என் படைப்பாகிய உன் உயிரை இப்போது வாங்கப்போகிறேன்’ என்று அல்லாஹ் கூறுவான்.

இதன் பிறகு வானவர் இஜ்ராயீல் (அலை) அவர்கள், நாற்பது வருடங்கள் ஸக்கராத் என்ற மரணவேதனை கொடுக்கப்படுவார்கள். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல், இவ்வுலகில் தோன்றிய இறுதி மனிதன் வரை உள்ள அத்தனை மனிதர்களின் மரண வேதனை இவர்களுக்கு மொத்தமாகக் கொடுக்கப்படும். நாற்பது வருட மரண வேதனைக்குப் பிறகு அல்லாஹ் வானவர் இஜ்ராயீல் (அலை) அவர்களின் உயிரைக் கைப்பற்றிவிடுவான். இப்போது அல்லாஹ் ஒருவனைத் தவிர, இப்பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இருக்காது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் வானங்களைச் சுருட்டுவான். பிறகு அவற்றைத் தனது வலக்கரத்தில் எடுத்துக் கொள்வான். பிறகு “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான். பிறகு, பூமிகளைத் தனது இடக்கரத்தில் சுருட்டிக்கொள்வான். பிறகு, “நானே அரசன். அடக்குமுறையாளர்கள் எங்கே? ஆணவம் கொண்டவர்கள் எங்கே?” என்று கேட்பான்.

— புகாரி

ஆலமே அர்வாஹ் என்ற ஆத்ம உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இவ்வுலகில் தோன்றி முடிந்ததும், ஒருநாள் இப்பூமி அழிக்கப்பட்டுவிடும். மலைகளும், வானளாவிய கட்டிடங்களும் இன்னும் இப்பூமியில் உள்ள அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்.

பிறகு அல்லாஹ்வின் ஆணையின்படி மீண்டும் சூர் என்ற எக்காளம் ஊதப்பட்டு இப்புவியில் பல்வேறு காலத்தில் தோன்றி மறைந்த அனைத்து மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு மறுமை நாளில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَوةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்.

— சூரா அல்முல்க்: 2

வானம், பூமி அதற்கிடையே உள்ள அனைத்தையும் மனிதனுக்காகப் படைத்து, மனிதன் தன் கட்டளைகளின்படி தன்னுடைய வாழ்க்கையை இவ்வுலகில் வாழ்ந்து காட்டுகிறானா? என்று அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். மக்களுக்கு நல்வழி காட்டுவதற்காக இறைத்தூதர்களையும், வேதத்தையும் இறக்கி வைத்தான். அல்லாஹ் என்று சொல்லும் ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் வரை அல்லாஹ் இந்தப் பூமியை அழிக்கமாட்டான்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

وَهَدَيْنَهُ التَّجْدَين

அன்றியும், (நன்மை, தீமை ஆகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

— சூரா அஷ்ஷம்ஸ்: 10

நபியின் வழிமுறையும் இருக்கிறது. இப்லீஸ் காட்டும் மனோ இச்சையின் வழிமுறையும் இருக்கிறது. யார் எதனைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்களோ, அவர்கள் அதனதன் முடிவை மறுமையில் சந்திப்பார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

الَمْ يَعْلَمُوا أَنَّهُ مَنْ يُحَادِدِ اللهَ وَرَسُولَهُ فَأَنَّ لَهُ نَارَجَهَنَّمَ خَالِدًا فِيهَا ذَلِكَ الْخِزْيُ الْعَظِيمُ

எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸுலுக்கும் விரோதம் செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்பு உண்டு. அதில் அவர் நிரந்தரமாக இருப்பார் என்பதை அவர்கள் அறியவில்லையா? இது மிகப்பெரிய கேவலமாகும்.

— சூரா அத்தவ்பா: 63

இவ்வுலகில் தீய வினைகள் புரிபவர்கள் தங்களுக்குக் கேடு ஒன்றும் நேராதது போல் தெரிவது எதற்கென்றால், இவ்வுலக வாழ்க்கை சோதனை செய்யப்படும் இடம் மட்டுமே. இது கூலி கொடுக்கப்படும் இடமல்ல. ஆனால் மறுமைநாள் கூலி கொடுக்கப்படும் இடமாகும்.

அங்கே நல்லவர்கள் சுவனத்திற்கான தீர்ப்பையும், இறைக்கட்டளைகளுக்கு மாறுசெய்து வாழ்ந்தவர்கள் நரகத்திற்கானத் தீர்ப்பையும் பெற்றுக் கொள்வார்கள். அதற்குப்பிறகு மரணம் இல்லாத நீண்ட வாழ்க்கையைப் பெற்றுக் கொள்வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

ஓர் இறைமறுப்பாளர் நற்செயல் ஒன்றைச் செய்தால், அதற்குரிய பலன் இவ்வுலகிலேயே அவருக்கு வழங்கப்பட்டுவிடும்.

இறைநம்பிக்கையாளரின் நிலை என்னவெனில், அவர் செய்த நற்செயல்களுக்குரிய நன்மைகளை இறைவன் மறுமை நாளில் வழங்குவதற்காகப் பத்திரப்படுத்துகிறான். மேலும், அவர் கீழ்ப்படிந்து நடப்பதற்கேற்ப இவ்வுலகிலும் அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான்.

— முஸ்லிம்

மறுமையின் அந்நாள் இவ்வுலகின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமுள்ளதாக இருக்கும். சூரியன் பனைமர உயரத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தப்படும். அதன் தகிக்கும் வெப்பத்தால் மனிதர்கள் பெரும் துன்பத்திற்குள்ளாவார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِى نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ

இன்னும் ஓர்ஆத்மா மற்றொரு ஆத்மாவிற்குச் சிறிதும் பயன்படுத்த முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக! (அந்நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதற்காக எந்தப் பகரமும் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது. அன்றி, அவர்கள் யாராலும் உதவி செய்யப்படமாட்டார்கள்.

— சூரா அல்பகரா: 48

மறுமை நாளில் இவ்வுலகில் தோன்றிய ஒவ்வொரு ஆத்மாவும், நீதியாளனாகிய அல்லாஹ்வின் சமூகத்தில் தனித்தனியாக நிறுத்தப்பட்டு விசாரணை நடக்கும். அப்போது, இவ்வுலகில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டது போல், அங்கே உதவி செய்து கொள்ளமுடியாது. யாருக்காகவும் சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படாது. தவறான செயல்களுக்கு எந்த ஒரு மாற்றுப் பரிகாரமும் செய்யமுடியாது.

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் நேரடியாகப் பேசுவான். (கணக்கு வாங்குவான்) அங்கு பரிந்துரைச் செய்பவர்

எவரும் இருக்கமாட்டார்; அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான்; பரிந்துரை செய்பவர், உதவுபவர் யாராவது உள்ளனரா என்று! அவனுடைய செயல்களைத் தவிர, வேறெதுவும் அவனுக்குத் தென்படாது. பின்னர் இடப்பக்கம் நோட்டமிடுவான். அங்கும் அவனுடைய செயல்களைத் தவிர, வேறெதுவும் தென்படாது. பின்னர் முன்பக்கம் பார்வையினைச் செலுத்துவான். அங்கு (தனக்கே உரிய பயங்கரங்கள் அனைத்தும் தென்படும்) நரகத்தை மட்டுமே காண்பான். எனவே மக்களே! நரக நெருப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முயலுங்கள்;

— புகாரி

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَكُمْ عَبَثًا وَأَنَّكُمُ الَيْنَا لَا تُرْجَعُونَ

நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (என்று இறைவன் கேட்பான்).

— சூரா முஃமினூன்: 115

” (மறுமையின் நிலைகளைப் பற்றி) எதனை நான் அறிந்துள்ளேனோ அதனை நீங்களும் அறிந்தால் சிரிப்பதைக் குறைத்துக் கொண்டு அதிகம் அழ ஆரம்பித்துவிடுவீர்கள். மேலும், படுக்கைகளில் பெண்களிடம் இன்பம் தேடுவதை விட்டுவிட்டு, கதறிக் கொண்டு காட்டிற்குள் ஓடிவிடுவீர்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அதனைக்கேட்ட நபித்தோழர் ஹழ்ரத் அபூதர்(ரலி) அவர்கள், “நான் ஒரு மரமாக இருந்திருக்கக் கூடாதா? அறுபட்டாவது போயிருப்பேனே!” என்று கூறி அழுது கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

وَجَانَى يَوْمِنَا بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَآتَى لَهُ الذِّكْرَى يَقُولُ يُلَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي فَيَوْمَيذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ

அந்நாளில் நரகம் முன்னால் கொண்டு வரப்படும்போது அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான். அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்? “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி அனுப்பியிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான். ஆனால், அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல் வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.

— சூரா அல் ஃபஜ்ர்: 23, 24, 25

மலைகளைப் பூமியில் நங்கூரமாக நிற்க வைத்த அல்லாஹ்வுக்கு, அதே மலைகளைப் பூமியை விட்டுப் பெயர்த்து தூசி போல் பறக்கச் செய்ய வைப்பது ஒன்றும் பெரியதல்ல.

கடலின் தண்ணீரில் குளிர்ச்சியை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கு, அதே தண்ணீரைக் கொழுந்து விட்டு எரியும் பெரும் நெருப்பாக எரியச் செய்வதும் பெரிய விஷயமல்ல.

ஒன்றுமே இல்லாதிருந்ததை மனிதனாகப் படைத்த அல்லாஹுதஆலாவுக்கு அதே மனிதன் மரணித்துவிட்டபின், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது என்பதும் பெரிய விஷயமல்ல.

மனிதனது இயலாமை வேறு. அல்லாஹ்வின் வல்லமை வேறு. ஒரு படைப்பு, படைத்தவனின் வல்லமையை விளங்கவும் முடியாது; படைத்தவனின் வல்லமையை எடை போட்டுப் பார்க்கவும் கூடாது.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعُ فَإِذَا النُّجُومُ مِسَتُ وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ ، وَإِذَا الْجِبَالُ نُفَتُ

நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும். அந்நாளில் நட்சத்திரங்கள் தம் பிரகாசத்தை இழந்து விடும். வானம் வெடித்துவிடும். மலைகள் (தூசிகளைப் போல்) பறந்து செல்லும்.

— சூரா அல் முர்ஸலாத்: 7-10

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

மறுமைநாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலைதூரமே இருக்கும். அப்போது மக்கள் தங்கள் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள். சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும், சிலரது வியர்வை முழங்கால் வரையிலும், சிலரது வியர்வை இடுப்பு வரையிலும், சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும்.

— முஸ்லிம்

இவ்வுலகில் வாழும்போது ஆயுள் முழுவதும் நற்செயல்கள் செய்தவர்கள், இன்னும் பாவமான காரியங்களை விட்டு விலகி நடந்தவர்கள் ஆகிய இத்தகையவர்களை மறுமைநாளில் அருகே இருக்கும் சூரியனின் வெப்பம் தீண்டாது. இத்தகையவர்கள் அர்ஷின் நிழலில் அல்லாஹ்விடம் பாதுகாப்போடு அமர்ந்திருப்பார்கள்.

நற்செயல்களையும் செய்து அத்துடனே பாவமான செயல்களையும் செய்தவர்கள் மறுமைநாளில் தங்கள் பாவச் சுமைகளின் அளவு வியர்வையில் முங்குவார்கள். இவ்வுலகின் பாவங்களே மறுமைநாளில் அம்மனிதனின் வியர்வையாகும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

تَظُنُّ أَنْ تُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

பாவச் சுமையின் காரணமாகத் தங்களுடைய இடுப்பு முறிந்து விடுமோ என்று எண்ணி (பயந்து) கொண்டிருப்பார்கள்.

— சூரா அல் கியாமா: 25

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “ஜனங்கள் தனது தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது போன்றே நிர்வாணமாக மஹ்ஷர் மைதானத்திலும் இருப்பார்கள்” என்று கூறியபோது, அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “யா ரஸூலல்லாஹ்! எல்லோருக்கும் முன்பாக நிர்வாணமாக நிற்பதால் வெட்கமாக இருக்காதா? ஒருவர் மற்றவர்களைப் பார்க்க மாட்டார்களா?” என்று வினவ, அதற்கு நபி(ஸல்) அவர்கள், “அச்சந்தர்ப்பத்தில் ஜனங்கள் தத்தமது கஷ்டங்களில் எவ்வாறு சிக்குண்டு கிடப்பார்கள் என்றால், ஒருவர் மற்றவரைப் பார்க்கும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்க்காது. எல்லோருடைய கண்களும் மேல் நோக்கி பதிந்திருக்கும். ஒவ்வொருவரும் தனது தீயசெயல்களின் அளவுக்கு வியர்வையில் மூழ்கியிருப்பார். சிலருடைய வியர்வை கால்வரை உயர்ந்திருக்கும். சிலர் கரண்டைக்கால் வரை, சிலர் வயிறு வரை, சிலர் வாய் வரை வியர்வையில் மூழ்கியிருப்பார்கள்.

மலக்குகள் அர்ஷின் நாலாப்புறங்களிலும் வட்டமாக நின்றிருப்பார்கள்.

அச்சமயம் ஒவ்வொரு மனிதனின் பெயர் சொல்லி அழைக்கப்படும். யாரை அழைக்கப்படுமோ அவர் கூட்டத்தை விட்டு வெளியேறி அங்கு பிரசன்னமாவார். அவர் அல்லாஹ்வுக்கு முன்பாக நிறுத்தப்படும்போது, ‘இவன் பொறுப்பில் யார் யாருடைய உரிமைகள் இருக்கின்றனவோ அவர்கள் முன்னால் வருக!’ என அறிவிக்கப்படும். அவனுடைய பொறுப்பில் யாருடைய உரிமைகள் இருந்தாலும், அல்லது அவனால் யார் மீதாவது ஏதும் அநியாயம் இழைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டு, அவனுடைய நன்மைகளிலிருந்து அவர்களுக்குச் சேரவேண்டிய கடமைகள் நிறைவேற்றித் தரப்படும்.

ஒருக்கால் அவனிடம் நன்மைகள் இல்லாது போனால் அல்லது மீதமில்லாது போனால் அந்த ஜனங்களுடைய பாவங்கள் அவன் மீது சுமத்தப்படும். அவன் தனது பாவங்களுடன் மற்றவர்களின் பாவங்களையும் தன் தலைமீது சுமந்து கொள்வான். அவனை நோக்கி, ‘போ! உனது ஹாவியாவிற்குப் போய்விடு’ என்று சொல்லப்படும். (அதாவது கொழுந்துவிட்டு எரியும் நரகில் போய்விடு என்பதாம்).

மறுமையில் மனிதர்களுக்கு எல்லா உதவிகளும் தடைபட்டுபோகும். ஒருவரின் நன்மையானச் செயலை, இன்னொருவர்

பெற்றுக்கொள்ள முடியாது. இன்னும் ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க முன்வரமாட்டார். இவ்வுலகின் உறவுகள், நட்பு இவை எதுவும் மறுமை நாளன்று யாருக்கும் பலனளிக்காது.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

فَأَمَّا مَنْ تَقَلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَهُ نَارُ حَامِيَةٌ

எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ, அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் சுகமாக இருப்பார். எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி (பாவ எடை கனத்துவிட்டதோ) அவன் தங்குமிடம் ஹாவியாதான். அந்த ஹாவியா என்னவென்று (நபியே!) நீங்கள் அறிவீர்களா? அது சுட்டெரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும்.

— சூரா அல்காரிஆ: 6-11

நபித்தோழர் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: கியாமத் நாளன்று கேள்வி கணக்கு பார்க்கப்படும். எவரின் நன்மைகளில் ஒரு நன்மை கூடுதலாகிவிடுமோ, அவர் சுவர்க்கத்தில் நுழைந்துவிடுவார். மேலும், எவருடைய தீமைகளில் ஒன்று அதிகரித்துவிடுமோ, அவர் நரகில் நுழைவார்.

அன்னை ஹழ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சில தொழுகைகளில் ‘இறைவா! என்னிடம் இலேசான கணக்கு வாங்குவாயாக!’ என்று இறைஞ்சுவதை நான் கேட்டிருக்கிறேன்.

அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்:

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டுவிட்டால் அந்நாளில் அவர்களுக்கிடையே உறவுமுறைகள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

— சூரா முஃமினூன்: 101

மறுமை நாளன்று தந்தை தனது மகனிடம், “நான் உன்னுடைய தந்தையாக இருந்தேன். உனக்கு உலகில் உபகாரம் புரிந்தேன் அல்லவா?” என்று கூற, அந்த மகன் தந்தை செய்த உபகாரங்களையெல்லாம் ஒப்புக்கொள்வான். பிறகு, தந்தையானவர் “எனக்கு ஒரு நன்மை மட்டும் தேவையுள்ளது, அது ஒரு அணுவளவேயாகும். அதன் காரணமாக என்னுடைய நன்மையின் தட்டு கனத்தால் தாழ்ந்துவிடக்கூடும்” என்று வேண்டுவார்.

அதற்கு மகனானவர், “நானே துன்பத்தில் இருக்கிறேன். என்மீது என்ன நிகழப்போகிறது என்று, என்நிலை தெரியாமலிருக்கும் நிலையில் நான் எந்த நன்மையையும் கொடுக்க முடியாது” எனக்கூறி மறுத்துவிடுவார்.

அதற்குப்பிறகு அம்மனிதன் தனது மனைவியிடமும் அதேபோன்று தான் செய்த உபகாரங்களையும், தனது உறவு முறையையும் சொல்லி வலியுறுத்திக் கேட்பான். அவளும் அதேபோன்று மறுத்துக் கூறிவிடுவாள்.

இவ்வாறு அம்மனிதன் தனது உறவுமுறையை வைத்து ஒவ்வொருவரிடமும் நன்மையை வேண்டுவான். ஆனால் எல்லோரும் மறுத்துக் கூறிவிடுவர் என ஹழ்ரத் இக்ரிமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதனைக் குறித்தே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

يَوْمَ يَفِرُ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ لِكُلِّ امْرِى مِنْهُمْ يَوْمَئِذٍ شَانُ يُغْنِيه

அந்நாளில் மனிதன் (திடுக்கிட்டுத்) தன் சகோதரனை விட்டும், தன் தாயைவிட்டும், தன் தந்தையைவிட்டும், தன் மனைவியை விட்டும், தன் மக்களைவிட்டும் வெருண்டோடுவான். அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.

— சூரா அபஸ: 34-37

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

கியாமத் நாளன்று ஒவ்வொரு மனிதனும் தனக்கு அறிமுகமானவர், நெருங்கிய சொந்தக்காரர் யாரும் தன்னைக் கண்டுகொள்ளக்கூடாதே என பயப்படுவான். ஏனெனில், எங்கு அவர்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுவிடுவார்களோ என்ற காரணத்தால்தான்.

— துர்ருல் மன்தூர்

இந்நிலையில் அவரவரின் நற்செயல்களே அவருக்கு உதவி புரியக்கூடியதாக இருக்கும். எனவே கடும் அமளி நிறைந்த மறுமை நாளில் நிம்மதி பெறவேண்டுமானால், இவ்வுலகில் கடும் பிரயாசை எடுத்து நற்செயல்கள் செய்து மறுமைக்கு முற்படுத்தி வைக்கவேண்டும்.

இவ்வுலகில் தன் சேமிப்பில் ஒருவரிடம் செல்வம் இல்லையென்றால் அவருக்குக் கொடுத்து உதவி செய்வார் யாருமில்லை. இதே போல் மறுமையில் ஒருவரிடம் நன்மைகள் இல்லையென்றால் கொடுத்து உதவி செய்வார் அங்கே யாரும் இருக்க மாட்டார்கள்.

இங்கே உலகப் பொருள் எவ்வாறு அவரவருக்கு உரியதோ, அதுபோல் மறுமையில் நன்மை, தீமை அவரவருக்கு உரியது.

மறுமை நாள் அன்று இவ்வுலகில் வெவ்வேறு காலத்தில் தோன்றிய முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் முதல் இனி கடைசியாகத் தோன்றப்போகும் மனிதன் வரை ஒரே மைதானத்தில் ஒன்று சேர்க்கப்படுவோம்.

அந்நாளில் ஒவ்வொரு ஆத்மாவும் அல்லாஹ்விடமிருந்து எனக்குத் தனிப்பட்ட கிருபை, கருணை கிடைக்காதா? என ஏங்கும். அம்மாபெரும் கூட்டத்தில் அல்லாஹ்வின் தனிப்பட்ட கிருபை நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இங்கே நாம் தனிப்பட்ட முறையில் இறையருளைத் தேடியிருக்க வேண்டும்.

நபித்தோழர் ஹழ்ரத் உபை இப்னு உமைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

மஹ்ஷர் மைதானத்தில் மக்கள் கடுமையான பசியுடனும், கடுந்தாகத்துடனும், முற்றிலும் நிர்வாணமாகவும் இருப்பார்கள். எனினும், எவரொருவர் அல்லாஹ்வுக்காகப் பிறருக்கு உணவளித்திருப்பாரோ, அவருக்கு அல்லாஹ் உணவளிப்பான்.

இன்னும் எவரொருவர் அல்லாஹ்வுக்காக பிறருக்குத் தண்ணீர் அருந்தக் கொடுத்திருப்பாரோ, அவருக்கு அல்லாஹ் தாகம் தீர நீர் புகட்டுவான். மேலும், எவரொருவர் அல்லாஹ்வுக்காக பிறருக்கு ஆடை அளித்திருப்பாரோ, அவருக்கு அல்லாஹ் ஆடை அணிவிப்பான்.

இதனைக் குறித்து அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبّهِ مِسْكِينَا وَيَتِيمَا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لوجْهِ اللهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا إِنَّا نَخَافُ مِنْ ربَّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا فَوَقَهُمُ اللهُ شَرَّ ذَلِكَ الْيَوْمِ وَ لَقْهُمْ نَضْرَةً وَسُرُوران

அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளித்து வந்தனர். (அவ்வாறு உதவி செய்யும் போது) “நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகவே தவிர, உங்களிடம் நாம் யாதொரு கூலியையோ அல்லது உங்களிடமிருந்து நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒருநாளைப் பற்றி பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டிவிடும்” (என்றும் கூறுவர்). எனவே அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு முகத்தில் மகிழ்ச்சியையும், செழுமையையும் அளிப்பான்.

— சூரா அத்தஹ்ர்: 8-11

Share.

Get new Posts

ரு த் து ள் F E E D B A C K S
Exit mobile version